விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கடுமையாக போராடி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதியில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹலேப்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரர் பெடரரும் மோதினர்.
முதல் செட்டை ஜோகோவிச் 7-6 எனவும், இரண்டாவது செட்டை 6-1 என பெடரரும், மூன்றாவது செட்டை 7-6 என ஜோகோவிச்சும் மாறி மாறி வென்றனர். நான்காவது செட்டை பெடரர் 6-4 என கைப்பற்றினார். கடைசி மற்றும் 5-ஆவது செட் மாரத்தான் ஓட்டம் போல் நீண்டு கொண்டே போனது. இறுதியில் 13-12 என கைப்பற்றி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச். 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் பெடரரின் கனவு நிராசையானது.