அமெரிக்காவின் நெவார்க்கில் சூப்பர் மிடில்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் 11-ஆவது தொடர் வெற்றியைப் பெற்றார் நட்சத்திர வீரர் விஜேந்தர் சிங்.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற ஹரியாணாவைச் சேர்ந்த விஜேந்தர் சிங், தற்போது தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறி, உலகம் முழுவதும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இதுவரை தான் பங்கேற்ற 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி கண்ட அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு நெவார்க்கில் நடைபெற்ற சூப்பர் மிடில்வெயிட் போட்டியில் அனுபவம் வாய்ந்த மைக் ஸ்நைடரை எதிர்கொண்டார்.
தனது குத்துக்களால் ஸ்னைடரை நிலைகுலையச் செய்த விஜேந்தர் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது அவரது தொழில்முறை போட்டிகளில் 11-ஆவது தொடர் வெற்றியாகும்.
நீண்ட நாள் கழித்து மைதானத்தில் களமிறங்கி வெற்றி பெற்ற மகிழ்ச்சி தருகிறது. அமெரிக்க குத்துச்சண்டை சீசனில் போட்டியிடுவது புதிய அனுபவம் என்றார் விஜேந்தர்.