செய்திகள்

முதல் முறையாக...இங்கிலாந்து சாம்பியன்

15th Jul 2019 02:54 AM

ADVERTISEMENT

44 ஆண்டுகால கனவு நனவானது; அதிக பவுண்டரி அடிப்படையில் வெற்றி
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.
 லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.
 இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
 12ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் ரவுண்ட் ராபின் முறையில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
 இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, மே.இ.தீவுகள் உள்ளிட்டவை கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்டன. ஒவ்வோர் அணியும் தலா 9 ஆட்டங்கள் ஆடின.
 மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டங்கள்: இந்தியா-நியூஸிலாந்து, பாகிஸ்தான்-இலங்கை, வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதிய ஆட்டங்கள் மழையால் முழுமையாக கைவிடப்பட்டன. ஓர் ஆட்டம் முடிவின்றி நிறைவடைந்தது.
 வெளியேறிய அணிகள்: இதில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் ஆகிய அணிகள் தொடக்க சுற்றோடு வெளியேறின.
 இலங்கை, பாகிஸ்தான் அணிகள் கடைசி வரை போராடி வெளியேறும் நிலை ஏற்பட்டது.
 ஆப்கானிஸ்தான் அணி தான் மோதிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியுற்று கடைசி இடத்தையே பெற முடிந்தது.
 பட்டம் வெல்லும் அணியாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்கா வெளியேறியது அதிர்ச்சி அளித்தது.
 மேலும் அனுபவம், இளம் வீரர்கள் கொண்ட மே.இ.தீவுகள் அணி தொடக்கத்தில் அபாரமாக விளையாடியபோதும் தொடர்ந்து தோல்விகளையே பெற்று வெளியேறியது.
 அரை இறுதிச் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி: புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. முதல் அரை இறுதி ஆட்டம் நியூஸிலாந்து-இந்தியா இடையே நடைபெற்ற நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு, இரண்டாவது நாளாக ஆட்டம் நடந்தது. இதில் நியூஸிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
 இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
 இறுதிக்குத் தகுதி பெற்ற இரண்டு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் முதன்முறையாக கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் களமிறங்கினர். டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
 ஹென்றி நிக்கோல்ஸ் 55: இங்கிலாந்தின் சீரான பந்துவீச்சால் நியூஸிலாந்து விக்கெட்டுகள் அவ்வப்போது வீழ்ந்தன. தொடக்க வரிசையில் ஹென்றி நிக்கோல்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி 55 ரன்களை சேர்த்தார். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 30 ரன்களை சேர்த்து ஒரு உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்களைக் குவித்த கேப்டன் (578 ரன்கள்) என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார்.
 பின்னர் வந்தவர்களில் டாம் லத்தம் மட்டுமே 47 ரன்களை எடுத்தார். கப்டில் 19, ராஸ் டெய்லர் 15, நீஷம் 19, கிராண்ட்ஹோம் 16, மேட் ஹென்றி 4 என சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது நியூஸிலாந்து.
 இங்கிலாந்து தரப்பில் லியம் பிளங்கெட் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
 திணறிய இங்கிலாந்து: 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் ரன்களை சேர்க்கத் திணறியது. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசி, இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன்கள் தங்கள் வழக்கமான ஆட்டத்தை விளையாட முடியாமல் கட்டுக்குள் வைத்திருந்தனர்.
 சரிந்த தொடக்க வரிசை: நியூஸிலாந்தின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்தின் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் திணறி வெளியேறினர்.
 அதிரடி பேட்ஸ்மேன்களான ஜேஸன் ராய் 17, பேர்ஸ்டோ 36, ஜோ ரூட் 7, கேப்டன் மோர்கன் 9 ரன்களுடன் வெளியேறிய நிலையில், பென் ஸ்டோக்ஸ்-ஜோஸ் பட்லர் இணை அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
 பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் அரைசதம்: 6 பவுண்டரிகளுடன் 60 பந்துகளில் 59 ரன்களை எடுத்த பட்லர், ஃபெர்குஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பட்லர் தனது 20-ஆவது ஒருநாள் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
 அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் அரை சதம் பதிவு செய்தார். கிறிஸ் வோக்ஸ் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஃபெர்குஸன் பந்துவீச்சில் லத்தமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 பரபரப்பான கடைசி ஓவர்கள்: பிளங்கெட் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நீஷம் பந்துவீச்சில் பெளல்டிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. பின்னர் பெளல்ட் ஓவரில் 10 ரன்கள் விளாசப்பட்டன. அதன்பின் 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 49-ஆவது ஓவரை நீஷம் வீசியபோது, ஆர்ச்சர் அவுட்டானார்.
 சமனில் முடிந்த ஆட்டம்: 50ஆவது ஓவரை வீசிய பெளல்ட் முதலிரண்டு பந்துகள் ரன் எடுக்காதவாறு வீசினார். மூன்றாவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக சிக்ஸர் அடித்தார். அதன்பின் 4 பந்துகளில் 15 ரன்களை எடுக்க வேண்டி இருந்த போது, ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னை எடுக்க ஓடினார்.
 பை ரன்னால் திருப்புமுனை:
 கப்டில் வீசிய பந்தை டாம் லத்தம் தவற விட்டதால் பந்து பவுண்டரிக்கு சென்று விட்டது. அடுத்த பந்தில் ஆதில் ரஷீத் ரன் அவுட்டானார். அவருக்குப் பின் மார்க் உட்டும் ரன் அவுட்டானார்.
 பென் ஸ்டோக்ஸ் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 98 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் இங்கிலாந்தும் 241 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
 சூப்பர் ஓவர் முறை: ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் இங்கிலாந்து அணி 6 பந்துகளில் 15 ரன்களை விளாசியது.
 பின்னர் ஆடிய நியூஸிலாந்தும் 15 ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.
 அதிக பவுண்டரிகளால் இங்கிலாந்து வெற்றி: இதையடுத்து, இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியைக் காட்டிலும் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசிய அணி என்ற ஐசிசி விதிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
 இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.
 ஆட்ட நாயகன் பென் ஸ்டோக்ஸ்: 98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு என கூறப்படும் இங்கிலாந்து சொந்த மண்ணிலேயே பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT