செய்திகள்

புதிய இளம் போட்டியாளர்களால் கடும் சவால்: விஸ்வநாதன் ஆனந்த்

12th Jul 2019 01:10 AM | பா.சுஜித்குமார்

ADVERTISEMENT


புதியதாக உருவாகி வரும் இளம் வீரர்களால் கடும் சவால் ஏற்பட்டுள்ளது என இந்திய நட்சத்திர வீரரும், 5 முறை உலக செஸ் சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் (49) மயிலாடுதுறையில் பிறந்தவர், கடந்த 1988-இல் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை புரிந்தார். 
ராஜீவ் கேல் ரத்னா, பத்மவிபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார். சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது: நான் 6 வயதில் செஸ் ஆட கற்றுக் கொண்டேன். தற்போது சிறுவர், சிறுமியர் 4  வயது முதலே கற்கின்றனர். நான் உலக சாம்பியன் பட்டம் வென்ற காலகட்டத்துக்கும் தற்போதும் மிகுந்த வேறுபாடு உள்ளது. புதிய இளம் போட்டியாளர்கள் அதிகளவில் உருவாகி உள்ளதால் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. கடந்த சில காலமாக ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், மீண்டும் புத்துணர்வுடன் ஆட தயாராகி வருகின்றேன் 
நவம்பரில் உலக சாம்பியன் போட்டி: அடுத்த உலக சாம்பியன் போட்டி வரும் 2020 நவம்பரில் நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகி வருகிறேன். இதற்காக தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆட வேண்டியுள்ளது. தற்போது சவால் தரும் போட்டியாளர் என எவரையும் குறிப்பிட்டு கூற முடியாது. 12 வீரர்கள் சவால் தரும் வகையில் ஆடி வருகின்றனர்.
இதற்காக வரும் பாரிஸ், மற்றும் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச செஸ் போட்டியில் முதலில் ஆட உள்ளேன்.
தொழில்நுட்பமும் தேவை: தற்போதைய சூழலில் தொழில்நுட்பமும், செஸ் ஆட்டத்துக்கு மிகுந்த உதவியாக உள்ளது. சாதாரண முறையில் ஆடுவதைக் காட்டிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால், பின்தங்கி விடும் நிலை உருவாகி விடும். 
இந்தியாவில் நல்ல எழுச்சி: செஸ் ஆட்டம் சிறுவர், சிறுமியர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 63 கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகி உள்ளதே இதற்கு உதாரணமாகும். ஆடவர் மட்டுமின்றி பெண்களும் செஸ் விளையாட்டில் சிறப்பாக ஆடி வருகின்றனர். நல்ல வேலைவாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைத்து வருகிறது.
ஆசியப் போட்டியில் செஸ்:
அடுத்து வரும் 2022-இல் நடைபெறவுள்ள ஆசிய போட்டியில் செஸ் விளையாட்டும் சேர்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு கூடுதல் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 5 வயது முதலே சிறுவர்கள் செஸ் விளையாட்டில் முழுமையாக ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
ஆன் லைன் செஸ் பயிற்சி தொடக்கம்:ஆன்லைன் மூலம் செஸ் விளையாட்டை கற்றுக் கொள்ளும் செஸ்கிட்ஸ்.காம் என்ற புதிய இணையதளத்தை விஸ்வநாதன் ஆனந்த் வியாழக்கிழமை தொடங்கினார்.  ஆனந்த் வழிகாட்டியாக உள்ள இதில் சிறுவர், சிறுமியருக்கு மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் செஸ்கிட்ஸ் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாடங்கள், பயிற்சி முறைகள் எளிதாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. செஸ் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். முதலில் 200 பள்ளிகள் இதில் இணைக்கப்படும்.
ஆன்லைனிலேயே சிறுவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்படும் என்றார் ஆனந்த். தலைமை செயல் அதிகாரி கேரி பென் இணையதள செயல்பாடு குறித்து விளக்கினார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT