திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

இறுதிச் சுற்றில் இங்கிலாந்து: 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது

DIN | Published: 12th July 2019 01:13 AM
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.


நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஸ்மித் மட்டுமே நிலைத்து ஆடி 85 ரன்களை சேர்த்தார். ஏற்கெனவே புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலமான இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி.  அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு அதற்கு பாதகமாக அமைந்தது.
அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர், பின்ச் ஆகியோர் களமிறங்கிய சிறிது நேரத்திலேயே சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
கேப்டன் பின்ச் கோல்டன் டக்: ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் கேப்டன் பின்ச் கோல்டன் டக் அவுட்டானார். 
மற்றொரு தொடக்க வீரரான வார்னர் 9 ரன்களுடன் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட்டானார். அதிர்ச்சி மேல் அதிர்சியாக அடுத்து ஆட வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களுடன் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார்.
ஸ்மித்-கரே ரன் குவிப்பு: பின்னர் ஸ்டீவ் ஸ்மித்-அலெக்ஸ் கரே ஆகியோர் இணைந்து நிதானமாக ஆடி 100 ரன்களை சேர்த்தனர். 46 ரன்களை எடுத்திருந்த கரேவை அவுட்டாக்கினார் ஆதில் ரஷீத். .
ஸ்மித் 23-ஆவது அரைசதம்:மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் தனது 23-ஆவது அரைசதத்தை  பதிவு செய்தார். ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ரன் ஏதுமின்றி ரஷீத் பந்தில் டக் அவுட்டானார்.
அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 22 ரன்களுடன் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார். நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பேட் கம்மின்ஸ் 6 ரன்களுடன் ஆதில் ரஷீத் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் பொறுப்புடன் ஆடி 36 பந்துகளில் 29 ரன்களை சேர்த்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் வெளியேறினார். 
ஸ்மித் 85 ரன் அவுட்: அணியை சரிவில் இருந்து மீட்பதில் முக்கிய பங்கு வகித்த ஸ்மித் 6 பவுண்டரியுடன் 85 ரன்களை சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லரால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவருக்கு பின் பெஹ்ரண்டர்ப் 1 ரன்னுடன் மார்க் உட் பந்தில் போல்டானார்.
இறுதியில் 49 ஓவர்களில் 223 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது ஆஸி. அணி.
கிறிஸ் வோக்ஸ், ரஷீத் 3 விக்கெட்: இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 3-20, ஆதில் ரஷீத் 3-54 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இளம் வீரர் ஆர்ச்சர் 2-32, மார்க் உட் 1-45 விக்கெட்டை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி விக்கெட் இழப்புக்கு ரன்களை குவித்து எளிதில் வென்றது. 
அபார வெற்றி: 224 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஜேஸன் ராய்-ஜானி பேர்ஸ்டோ தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.  10 ஓவர்களில் ஸ்கோர் 50-ஐ கடந்தது.
ஜேஸன் ராய் 18-ஆவது அரைசதம்: சிறப்பாக ஆடிய ஜேஸன் ராய் தனது 18-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் வீசிய ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசினார் ராய்.
5 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 34 ரன்களை சேர்த்த பேர்ஸ்டோவை எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கினார் ஸ்டார்க்.
5 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 65 பந்துகளில் 85 ரன்களை விளாசிய ஜேஸன் ராய், பேட் கம்மின்ஸ் பந்தில் அலெஸ் கரேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  அப்போது 147/2 என வலுவான நிலையில் இருந்தது இங்கிலாந்து. அதற்கு பின் ஜோ ரூட்-கேப்டன் மோர்கன் இணை அபாரமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
8 பவுண்டரியுடன் 46 பந்துகளில் 49 ரன்களுடன் ஜோ ரூட்டும், 7 பவுண்டரியுடன் 45 ரன்களுடன் கேப்டன் மோர்கனும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர். மோர்கன் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார்.
இறுதியில் 32. 1 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 226 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. ஆஸி. தரப்பில் ஸ்டார்க் 1-70, கம்மின்ஸ் 1-34 விக்கெட்டை வீழ்த்தினர்.
14-இல் நியூஸி.யுடன் இறுதிச் சுற்றில் மோதல்: வரும் 14-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இங்கிலாந்து.
சுருக்கமான ஸ்கோர்
ஆஸ்திரேலியா 
50 ஓவர்களில் 223
ஸ்மித் 85, அலெக்ஸ் கரே 46,
பந்துவீச்சு:
வோக்ஸ் 3-20, ரஷீத் 3-54.
இங்கிலாந்து 
32.1 ஓவர்களில் 226/2
ஜேஸன் ராய் 85, ஜோ ரூட் 49.
பந்துவீச்சு:
பேட் கம்மின்ஸ் 1-34.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

3-வது டெஸ்டிலும் ஆண்டர்சன் இடம்பெறவில்லை: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி தரவரிசை: அதிகப் புள்ளிகளைப் பெற்று ஆஸி. பந்துவீச்சாளர் சாதனை!
ஆக்ரோஷமான பந்துவீச்சால் அறிமுக டெஸ்டிலேயே கிரிக்கெட் உலகின் கவனம் ஈர்த்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர்! (விடியோ)
'சூப்பர்மேன்' டென்லியின் சூப்பர் கேட்ச் விடியோ!
இதர அணிகள் தங்கள் தரத்தை உயர்த்துவது எப்போது? சௌரவ் கங்குலி