செய்திகள்

வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா? கடைசி ஆட்டத்தில் இன்று இலங்கையுடன் மோதல்

6th Jul 2019 01:25 AM

ADVERTISEMENT


இலங்கையுடன் தனது உலகக் கோப்பை கடைசி ரவுண்ட் ராபின் ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புள்ளிகள் பட்டியலில் 13 புள்ளிகளுடன் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரம் இலங்கை அணி 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் கடந்த 2017 இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மோதிய போது, இலங்கை அபார வெற்றி பெற்றது. இந்தியா ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இலங்கை அணி வெளியேறி விட்டது.
இதனால் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் 2 அணிகளும் போட்டியை எதிர்நோக்கும். 
இலங்கையின் பேட்டிங் வரிசை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக தொடக்க வரிசை சொதப்பி வருகிறது. இதை இந்தியாவின் திறன் மிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்வர்.
ரவீந்திர ஜடேஜா, மயங்க் அகர்வால் ஆகியோரை களமிறக்க வாய்ப்புள்ளது. 
இலங்கை அணியில் இளம் வீரர் அவிஷ்கா பெர்ணான்டோ சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் இந்திய பவுலர்களுக்கு சவால் தருவார் எனக் கருதப்படுகிறது. இலங்கையின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த போட்டித் தொடரில் தனது இருப்பை வெளிப்படுத்தவில்லை.
இந்தியாவில் இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 2 ஆட்டங்களில் மிதமான ரன்களையே சேர்த்தார்.  பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு கவலை தருவதாக உள்ளது. எதிரணிக்கு ரன்களைவாரி வழங்கி வருகின்றனர். லீட்ஸ் ஹெட்டிங்லி மைதான பிட்ச் பேட்டிங்குக்கு உதவியாக அமையும். மேலும் வானிலை தெளிவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  
தங்கள் கடைசி ஆட்டத்தை 2 அணிகளும் வெற்றிகரமாக நிறைவு செய்ய போராடும் என்பதால் பரபரப்பாக ஆட்டம் அமையும். 
தென்னாப்பிரிக்காவுடன் நடக்கும் ஆட்டத்தில் ஆஸி. தோற்றால், புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பெறும். 
அப்போது அரையிறுதியில் நியூஸிலாந்துடன் ஆடலாம். எனினும் எழுச்சி பெற்றுள்ள இங்கிலாந்துடன் அரையிறுதியில் மோத இந்தியா விரும்பாது எனறே தெரிகிறது.
தொடரும் மிடில் ஆர்டர் பேட்டிங் குழப்பம்:இலங்கையுடன் நடைபெறவுள்ள ஆட்டத்தின் போது மிடில் ஆர்டர் பேட்டிங் குழப்பத்துக்கு முடிவு காண இந்திய அணி நிர்வாகம் முயற்சிக்கும் எனத் தெரிகிறது. 
முக்கியமான அரையிறுதி ஆட்டத்துக்கு முன்பு இப்பிரச்னையை தீர்க்க வேண்டும்.  மிடில் ஆர்டரில் தோனி, கேதார் ஜாதவ், ஆகியோர் சோபிக்கவில்லை. முதன்முதலாக களமிறக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் சரிவர ஆடவில்லை. தோனியை நான்காம் நிலையில் களமிறக்கி விட்டு அதன் பின் ரிஷப் பந்த், ஹார்திக்கை களமிறக்கவும் வாய்ப்புள்ளது. தொடக்க வரிசையில் ரோஹித், ராகுல், கோலி சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

7-ஆம் நிலை பேட்ஸ்மேன்
7-ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்க அணி நிர்வாகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் ஆடினார். கேதார் ஜாதவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு தினேஷ், இதுதொடர்பாக கூறுகையில்:
7-ஆம் நிலை பேட்ஸ்மேனாக தான் களமிறங்க வேண்டும். அதன் பின் மைதானத்தில் நிலவும் சூழ்நிலையை கணித்து ஆட வேண்டும்.  எந்த நிலையிலும் நான் களமிறங்கி ஆடுவேன். இந்த உலகக் கோப்பையில் ஸ்கோர் 300-க்கு மேல் சேஸ் செய்ய முடியவில்லை. இதற்கு பிட்ச்களின் மெதுவாக இயங்கும் தன்மையே காரணம் என்றார் தினேஷ்.
 

இன்றைய ஆட்டங்கள்:
இந்தியா-இலங்கை,
இடம்: லீட்ஸ்,
நேரம்: மதியம் 3.00

ADVERTISEMENT
ADVERTISEMENT