செய்திகள்

அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து: 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை

4th Jul 2019 02:10 AM

ADVERTISEMENT


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 3-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 
அந்த அணி உலகக் கோப்பை போட்டியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேயிருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த 1992-ஆம் ஆண்டில் இங்கிலாந்து உலகக் கோப்பை  இறுதி ஆட்டம் வரை முன்னேறியிருந்தது. 
இங்கிலாந்தின் செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியில் லாக்கி ஃபெர்குசன், ஐஸ் சோதி ஆகியோருக்குப் பதிலாக டிம் செளதி, மாட் ஹென்றி சேர்க்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய்-ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி களம் கண்டது. அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திய இந்த பார்ட்னர்ஷிப், முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து ஜேசன் ராய் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். 
அடுத்து வந்த ஜோ ரூட் 24 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். பின்னர் ஜோஸ் பட்லர் களம் காண, 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 106 ரன்கள் குவித்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் 3-ஆவது விக்கெட்டாக வீழ்ந்தார். அடுத்து வந்தவர்களில் கேப்டன் இயான் மார்கன் மட்டும் 5 பவுண்டரிகள் உள்பட 42 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். 
எஞ்சிய விக்கெட்டுகளில், பட்லர் 11, பென் ஸ்டோக்ஸ் 11, கிறிஸ் வோக்ஸ் 4, ஆதில் ரஷீத் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. லியாம் பிளங்கெட் 15, ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 ரன்னுடம் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
நியூஸிலாந்து தரப்பில் நீஷம், ஹென்றி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளும், சேன்ட்னர், செளதி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
நியூஸி. தடுமாற்றம்-138/6: இதையடுத்து 306 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய நியூஸிலாந்து அணி, 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டாம் லதாம் மட்டும் 5 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் அடித்தார். பேட்டிங் வரிசையில் கப்டில் 8, நிகோலஸ் 0, கேப்டன் வில்லியம்சன் 27, டெய்லர் 28, நீஷம், 19, கிராண்ட்ஹோம் 3, சேன்ட்னர் 12, ஹென்றி 7, போல்ட் 4 ரன்களுக்கு வீழ்ந்தனர். 
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


நியூஸிலாந்தா... பாகிஸ்தானா...
நியூஸிலாந்து தனது 9 ஆட்டங்களின் மூலம் 11 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது. 5-ஆம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானைக் காட்டிலும் நியூஸிலாந்து அதிக ரன் ரேட்களை கொண்டுள்ளது. 
வரும் வெள்ளிக்கிழமை தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே நியூஸிலாந்தை பின்னுக்குத் தள்ளி அரையிறுதி வாய்ப்பை பெற முடியும்.
நனவாகுமா கோப்பை கனவு... உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்லும் முனைப்புடன் 4-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து. 
அந்த அணி இதற்கு முன்பு 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி கோப்பை வாய்ப்பை இழந்துள்ளது.
பேர்ஸ்டோ சாதனை... இந்த ஆட்டத்தில் 106 ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஆட்ட நாயகன் ஆனதுடன், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆட்டத்துக்கு முன்பாக, இந்தியாவுடனான ஆட்டத்திலும் பேர்ஸ்டோவ் 111 ரன்கள் அடித்திருந்தார்.

சுருக்கமான ஸ்கோர்
இங்கிலாந்து
50 ஓவர்களில் 305/8
பேர்ஸ்டோவ்-106, ராய்-60, மார்கன்-42
பந்துவீச்சு: நீஷம்-2/41, ஹென்றி-2/54, போல்ட்-2/56
நியூஸிலாந்து
45 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 186
லதாம்-57, டெய்லர்-28, 
வில்லியம்சன்-27
பந்துவீச்சு: மார்க்-3/34, ஸ்டோக்ஸ்-1/10, ஆர்ச்சர்-1/17

ADVERTISEMENT
ADVERTISEMENT