முறையான திட்டமிடல் இன்றி திண்டாடியது தென் ஆப்பிரிக்கா: ஜான்டி ரோட்ஸ் சரமாரித் தாக்கு

2019 உலகக் கோப்பைத் தொடரின் மோசமான ஆட்டத்தின் வெளிப்பாடு என்று முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் குற்றம்சாட்டினார். 
முறையான திட்டமிடல் இன்றி திண்டாடியது தென் ஆப்பிரிக்கா: ஜான்டி ரோட்ஸ் சரமாரித் தாக்கு

தென் ஆப்பிரிக்க அணி முறையான திட்டமிடல் இன்றி களமிறங்கியது தான் 2019 உலகக் கோப்பைத் தொடரின் மோசமான ஆட்டத்தின் வெளிப்பாடு என்று முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஐசிசி உலகக் கோப்பை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் கூறியதாவது:

கடந்த ஒரு மாதத்துக்கு முன் என்னிடம் தென் ஆப்பிரிக்க அணியின் உலகக் கோப்பை நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று யாரும் கணிக்காதது தான் பெரிய சாதகம் என்று கூறியிருந்தேன். ஏனென்றால் கடந்த 12 மாதங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க வீரர்களின் ஆட்டத்திறன் வெளிப்பாடு மெச்சும்படி இல்லை.

உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 60 ரன்களைக் கடந்தால், அதை சதமாக்க முயற்சிக்க வேண்டும். ஆனால், அதை யாரும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்க அணியிடம் தெளிவான மாற்று திட்டங்களும் கிடையாது. வேகப்பந்துவீச்சு மட்டுமே உலகக் கோப்பையை பெற்றுத்தந்து விடாது. புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 3 அல்லது 4-ஆவது இடத்தில் இருந்தாலும் அதற்கான ஆட்டம் அவர்களிடம் இருந்து வெளிப்படவில்லை. 

பொதுவாக இங்கிலாந்தைப் பொறுத்தவரை குளிர் காற்று வீசும்போது வேகப்பந்துக்கும், வெப்பம் இருக்கும்போது பேட்டிங்குக்கும் சாதகமாக இருக்கும். இந்த அடிப்படை திட்டமிடல் கூட தென் ஆப்பிரிக்க அணியிடம் இல்லை. டி வில்லியர்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே ஓய்வுபெற்றுவிட்டார். எனவே அதன்பிறகு உலகக் கோப்பையை திட்டமிட்டு ஒரு அணியை உருவாக்க தென் ஆப்பிரிக்கா தவறிவிட்டது.

மேலும் டி வில்லியர்ஸ் மிகப்பெரிய சாம்பியன் வீரராக இருந்தாலும், திடீரென அணியில் இணைப்பது கேள்விக்குரியதாக அமையும். ஆனால், அவரை மட்டுமே நம்பி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் இல்லை. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் ஆட்டம் மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாக இந்திய அணி அனைத்து துறைகளிலும் திட்டமிட்டு செயல்படுகிறது. 

தோனியும், கோலியும் இணைந்து இந்திய அணியின் தரத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் சக வீரர்களும் தங்கள் தரத்தை உயர்த்த முன்மாதிரியாக உள்ளனர். அவர்களால் இந்திய அணி அடுத்தகட்டத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் அனைத்து இந்திய வீரர்களின் உடற்தகுதியும், ஆட்டத்திறனும் சிறப்பாக உள்ளது.

குயின்டன் டி காக் இதுவரை மிகப்பெரிய தொடர்களின் இறுதிப்போட்டிகளில் விளையாடியதில்லை. உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் விளையாடியதில்லை. எனவே தான் 35 ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க, ஒரு பில்லியன் மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்த 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியை தனக்கு மிகவும் பிடித்த ஆட்டமாக கூறியுள்ளார். எனவே இதில் எந்த தவறும் கிடையாது.

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையை வென்றிருந்தால், டி காக் தனக்கு பிடித்த ஆட்டமாக ஐபிஎல் இறுதிப்போட்டியை குறிப்பிட்டிருக்க மாட்டார். உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதன் மூலம் தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு அந்த தொடரில் இருக்கும் வரலாற்றை புதுப்பிக்க முடியும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com