புரோ வாலிபால் லீக்: சென்னை ஸ்பார்டன்ஸ் சாம்பியன்

புரோ வாலிபால் லீக் முதல் சீசன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தட்டிச் சென்றது. காலிக்கட் ஹீரோஸ் அணியை 3-0 என்ற நேர் செட்களில் வென்றது சென்னை 
கோப்பையுடன் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள்.
கோப்பையுடன் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள்.


புரோ வாலிபால் லீக் முதல் சீசன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தட்டிச் சென்றது. காலிக்கட் ஹீரோஸ் அணியை 3-0 என்ற நேர் செட்களில் வென்றது சென்னை 
இந்தியாவில் வாலிபால் ஆட்டத்துக்கு உத்வேகம் தரும் வகையிலும், வீரர்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறவும், விஎப்ஐ மற்றும் பேஸ்லைன் வென்சர்ஸ் நிறுவனம் இணைந்து புரோவாலிபால் லீக் போட்டிகளை நடத்தின.  6 நகரங்களைச் சேர்ந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் முதல்கட்டமாக கொச்சியில் 18 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பிவிஎல் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன. நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு சென்னை-காலிக்கட் அணிகள் தகுதி பெற்றுள்ளன . காலிக்கட் ஹீரோஸ் அணி இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. அரையிறுதியில் யு மும்பா அணியை எளிதாக வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. சென்னை அணி போராடி கொச்சி அணியை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.
இரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ரசிகர்கள் ஆதரவோடு சென்னை ஸ்பார்டன்ஸ் அபாரமாக ஆடியது. 
இறுதியில் 15-11, 15-12, 16-14 என நேர் செட்களில் காலிக்கட் அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை.
சென்னை அணியில் ரூடிவெர்ஆப், நவீன் ராஜா ஜேக்கப், அகின், சோரோகின்ஸ், ஷெல்டன் மோசஸ் அபாரமாக ஆடினர்.
கொச்சியில் நடைபெற்ற முதல் கட்டப் போட்டிகளில் சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டெழுந்து, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை வீரர் ரூடி பிவிஎல் போட்டியில் 100 புள்ளிகளை குவித்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
ஆல்ஸ்டார் மகளிர் போட்டி: 
மகளிர் வாலிபால் லீக் போட்டிக்கு உத்வேகம் தரும் வகையில் முன்னதாக இந்திய நட்சத்திர வீராங்கனைகள், வெளிநாட்டு வீராங்கனைகள் அடங்கிய ஆல்ஸ்டார் புளு, எல்லோ அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில் புளு அணி 15-5, 12-15, 15-6 என்ற செட் கணக்கில் எல்லோ அணியை வென்றது.

சென்னை அணிக்கு ரூ.50 லட்சம் 
பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.50 லட்சம் பரிசளிக்கப்பட்டது. ரன்னராக வந்த காலிக்கட் அணிக்கு ரூ.20 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் நவீன் ராஜா (சென்னை), விலை மதிப்பற்ற வீரர் அஜித்லால் (காலிக்கட்), பெஸ்ட் ஸ்பைக்கர் ரூடி வெர்ஹாப் (சென்னை), பெஸ்ட் பிளாக்கர் டேவிட் லீ (கொச்சி), சிறந்த உத்தியுடன் ஆடிய வீரர் கார்த்திக் (காலிக்கட்) விருதுகளைப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com