சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை: நிறுத்தி வைத்தது ஐஓசி

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச  போட்டிகளை இந்தியாவில் எதிர்காலத்தில் நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) அறிவித்துள்ளது.
சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை: நிறுத்தி வைத்தது ஐஓசி


ஒலிம்பிக் மற்றும் சர்வதேச  போட்டிகளை இந்தியாவில் எதிர்காலத்தில் நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) அறிவித்துள்ளது.
புதுதில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வரும் 2020 டோக்கியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான 16 இடங்கள் உள்ளன.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும், உலகக் கோப்பையில் கிரிக்கெட் ஆடக்கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிக்கு பாகிஸ்தானில் இருந்து 2 வீரர்கள் 1 மேலாளர் பங்கேற்பதாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு முதலில் விசாக்கள் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் விசா தரப்படவில்லை. இதனால் அவர்கள் பங்கேற்கவில்லை.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பிரச்னையாகி விட்டது. 
எழுத்துப்பூர்வமான உறுதிமொழி தர வேண்டும்: மேலும் எதிர்காலத்தில் இந்தியாவில் ஒலிம்பிக் தொடர்புடைய போட்டிகளை நடத்த அனுமதி தரப்படாது என ஐஓசி எச்சரித்துள்ளது.
மேலும் பாக். வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட சம்பவம் போல் நடைபெறாது  என இந்திய அரசு எழுத்து மூலம் உத்தரவாதம் தரவேண்டும். அதுவரை இதுதொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் அமைப்பின் சட்டவரையறைக்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதாக கடுமையாக சாடியுள்ளது ஐஓசி. 
ஒலிம்பிக் விதிகளின்படி சர்வதேச போட்டிகளில் வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக இந்திய அரசு எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை அளிக்க வேண்டும். அதுவரை ஒலிம்பிக், மற்றும் சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐஓசி நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
சர்வதேச சம்மேளனங்களுக்கு பரிந்துரை: மேலும் சர்வதேச சம்மேளனங்கள், இந்திய அரசின் உறுதிமொழிகளை பெறும் வரை போட்டிகளை ஒதுக்கக் கூடாது. 
2026 யூத் ஒலிம்பிக்ஸ், 2032 ஒலிம்பிக், , 2030 ஆசிய போட்டிகளை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. 
ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான 2 இடங்கள் ரத்து: இதற்கிடையே தில்லியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் உள்ள 16 ஒலிம்பிக் தகுதி இடங்களில் 2-ஐ சர்வதேச சம்மேளனம் ரத்து செய்து விட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் இயலாமையை தெரிவித்துள்ளது. அரசிடம் எங்களால் ஆன முயற்சியை செய்தோம். இதுபோன்ற அபாயமான நிலை அனைத்து விளையாட்டுகளுக்கும் பாதிப்பை ஏற்படும் என சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com