ஒரு நாள் தொடர்: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது நியூஸி.

ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது நியூஸிலாந்து. அதன் வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கோப்பையுடன் நியூஸிலாந்து அணியினர்.
கோப்பையுடன் நியூஸிலாந்து அணியினர்.


ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது நியூஸிலாந்து. அதன் வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வந்தது. இதன் கடைசி ஆட்டம் டுனடினில் புதன்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய நியூஸி. அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை குவித்தது. அதிரடி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் 81 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். 47-வது அரைசதத்தை விளாசிய அவர், ஸ்டீபன் பிளெமிங் 8007 ரன்கள் சாதனையையும் முறியடித்தார்.
ஹென்றி நிக்கோல்ஸ் 64, கேப்டன் டாம் லத்தம் 59 ரன்களை சேர்த்தனர். ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோரும் இறுதியில் தலா 37 ரன்களை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச தரப்பில் முஸ்தபிஸþர் ரஹ்மான் மட்டும் 2-93 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசம் 242 ஆல் அவுட்: பின்னர் ஆடிய வங்கதேச அணி 47.2 ஓவர்களிலேயே 242 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் சபீர் ரஹ்மான் 2 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 110 பந்துகளில் 102 ரன்களை விளாசினார். முகமது சைபூதின் 44, மெஹ்தி ஹாசன் 37 ரன்களை சேர்த்தனர்.
டிம் செளதி அபாரம்: நியூஸி தரப்பில் டிம் செளதி அபாரமாக பந்துவீசி 65 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். டிரென்ட் பெளல்ட் 2-37 விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து, தொடரையும் 3-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக டிம் செளதியும், தொடர் நாயகனாக மார்ட்டின் கப்டிலும் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்து பிப். 28 முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை நடக்கவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன.
3-ஆவது இடத்தில் நியூஸிலாந்து
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் 112 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com