ஆஸி.க்கு எதிரான டி20, ஒருநாள்,தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸி.க்கு எதிரான டி20, ஒருநாள்,தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு 

* தினேஷ் கார்த்திக் நீக்கம்
* கே.எல்.ராகுல் சேர்ப்பு
* மயங்க் மார்கண்டே புதுமுகம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். புதுமுகமாக சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டேயும் இடம் பெறுகிறார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அண்மையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை தலா 2-1 என கைப்பற்றி வரலாறு படைத்தது. பின்னர் நியூஸிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரையும் 4-1 என கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என இழந்தது.
இதன் தொடர்ச்சியாக ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவில் 2 டி20, 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸி. அணி ஆடுகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பாக பிசிசிஐ தேர்வுக் குழு மும்பையில் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனை மேற்கொண்டது.

கே.எல். ராகுல் சேர்ப்பு
நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட கேஎல்.ராகுல், ஆஸி, தொடரில் சரிவர ஆடவில்லை. மேலும் பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஹார்திக் பாண்டியா-ராகுல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அது விலக்கப்பட்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி பங்கேற்ற அதிகாரப்பூர்வமற்ற  டெஸ்ட் ஆட்டங்களில் ராகுல் இடம் பெற்று சிறப்பாக ஆடினார். இதன் தொடர்ச்சியாக ராகுல் மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்தார்.

புதுமுகம் மயங்க் மார்கண்டே
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த 21 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தினேஷ் கார்த்திக் நீக்கம்
தோனி பிரதான விக்கெட் கீப்பராக வலம் வரும் நிலையில், இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தை ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக்கை கொண்டு நிரப்புவதா என தேர்வுக் குழு தீவிர ஆலோசனை செய்தது. ரிஷப் பந்த் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் நிலையில், அவருக்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் டி20 தொடருக்கான அணியில் மட்டுமே தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் 5 ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். 
வரும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் அல்லது சிறப்பு பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதே நேரத்தில் ரிஷப் பந்த் டி20, ஒரு நாள் தொடர் என இரண்டு அணிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் சேர்க்கப்படவில்லை. டி20 தொடருக்கான அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. மயங்க் மார்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார். 
ஆல்ரவுண்டர் இடங்களை கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, தமிழக வீரர் விஜய் சங்கர் ஆகியோர் நிரப்புவர். 

டி20 தொடருக்கான அணி
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, விஜய் சங்கர், யுஜவேந்திர சஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கெளல், மயங்க் மார்கண்டே.

முதல் 2 ஒரு நாள் ஆட்டங்களுக்கான அணி 
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஹார்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பந்த், சித்தார்த் கெளல், கேஎல்.ராகுல்.
கடைசி 3 ஒரு நாள் ஆட்டங்களுக்கான இந்திய அணி
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்.

உலகக் கோப்பைக்கான அணி கடைசி 3 ஒரு நாள் 
ஆட்டங்களில் ஆடவுள்ள இந்திய அணியே, வரும் மே மாதம் தொடங்கவுள்ள ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணியாக இருக்கும் என தேர்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.  ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் ஒரு நாள் தொடரே உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா ஆடும் கடைசி தொடராகும்.

ஆஸி. அணி சுற்றுப்பயண விவரம்
டி20 தொடர்
பிப். 24: முதல் ஆட்டம்-
விசாகப்பட்டினம், இரவு 7.00.
பிப். 27: இரண்டாம் ஆட்டம்-பெங்களூரு, இரவு 7.00.
ஒரு நாள் தொடர்
மார்ச் 2: முதல் ஆட்டம்-
ஹைதராபாத், மதியம் 1.30.
மார்ச் 5: இரண்டாம் ஆட்டம்-நாக்பூர், மதியம் 1.30.
மார்ச் 8: மூன்றாம் ஆட்டம்-ராஞ்சி, மதியம் 1.30.
மார்ச் 10: நான்காம் ஆட்டம்-மொஹாலி, மதியம் 1.30.
மார்ச் 13: ஐந்தாம் ஆட்டம்-தில்லி, மதியம் 1.30.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com