ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்!

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் அண்மையில் வெளியிட்ட டாப் 30 பிரபலங்கள் (30 வயதுக்குள்பட்டோர்) பட்டியலில் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் (19) ,
ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்!


ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் அண்மையில் வெளியிட்ட டாப் 30 பிரபலங்கள் (30 வயதுக்குள்பட்டோர்) பட்டியலில் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் (19) , இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (22), ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (21) ஆகியோர் விளையாட்டுத் துறையில் இடம்பெற்றுள்ளனர்.
பொழுதுபோக்கு, தொழில்முனைவோர் உள்பட பல துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குள்பட்ட 30 இளைஞர்களை தேர்வு செய்து ஃபோப்ஸ் இந்தியா இதழ் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனா
22 வயது ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தவிர்க்க முடியாத வீராங்கனை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விருது வாங்கிய இரண்டாவது இந்திய வீராங்கனை. (ஜூலன் கோஸ்வாமி ஐசிசி விருது வாங்கிய முதல் இந்திய வீராங்கனை ஆவார்(2007ஆம் ஆண்டு))
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் வேகமாக அரை சதம் பதிவு செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் ஸ்மிருதி.
மகாராஷ்டிர மாநிலத்தில் 1996ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி பிறந்தவரான ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம்.
ஆனால், அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.  அவரது லட்சியத்தை மகள் ஸ்மிருதி நிறைவேற்றி காட்டிவிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடியபோது, இரட்டை சதம் பதிவு செய்தார். ஒரு நாள் ஆட்டமாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அப்போது படைத்தார். மகாராஷ்டிர அணிக்காக விளையாடியபோது இந்தச் சாதனையை அவர் படைத்தார். ராகுல் திராவிட் பரிசளித்த பேட்டில் விளையாடி இந்தச் சாதனையை அவர் செய்தார்.
2016ஆம் ஆண்டில் ஐசிசி வெளியிட்ட மகளிர் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
விராட் கோலி ஜெர்சியில் இருக்கும் 18 என்ற எண்ணைத்தான் இவரும் தனது ஜெர்சியில் வைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து கொண்ட இரண்டாவது இந்திய வீராங்கனை ஸ்மிருதி (ஹர்மன்ப்ரீத் கௌர் முதல் வீராங்கனை). இளம் வயதிலேயே மகாராஷ்டிர அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்படி பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வரும் ஸ்மிருதி, கிரிக்கெட்டில் அசாதாரணமான செயல்பாட்டுக்காக ஃபோர்ப்ஸ் இந்தியா இதழிலும் இடம்பெற்றுள்ளார்.
அர்ஜுனா விருது பெற்றுள்ள ஸ்மிருதி, அண்மையில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீரஜ் சோப்ரா

ஹரியாணா மாநிலம், பானிபட்டில் 1997ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தவர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் சாதனைகளைப் படைத்து வரும் இந்திய வீரர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ். காமன்வெல்த் போட்டியில் 88.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியைஎறிந்து தங்கத்தை வசப்படுத்தினார்.
2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார் நீரஜ்.  அவர் ஆசியப் போட்டியில் பங்கேற்றது அதுவே முதல்முறையாகும். ஃபோர்ப்ஸ் பத்திரிகையிலும் இடம்பெற்று மற்றொரு சாதனையை புரிந்துள்ளார் நீரஜ்.


ஹிமா தாஸ்
19 வயது இளம் வீராங்கனையான ஹிமா தாஸ், அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தார். கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தொடர் ஓட்டத்தில் (4*400 மீ) சக நாட்டு வீரர், வீராங்கனைகளுடன்  இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.  அதே போட்டியில் 4*400 மீட்டர் மகளிர் குழு பிரிவு தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.  மத்திய அரசு வெளியிட்ட விருதுகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 20 வயதுக்குள்பட்டோருக்கான சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் போட்டியில் தங்கம் வென்றார். 
இந்தப் போட்டியில், டிராக் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவரே.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 21ஆவது காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார் ஹிமா தாஸ்.
காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் (டிராக் பிரிவில்) இறுதிச் சுற்று வரை சென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர்தான்.
ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் தூதராகவும் ஹிமா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. சிறார் நிதி இந்தியா (யுனிசெஃப் -இந்தியா) அமைப்பின் தூதராக தேர்வு செய்யப்படும் வயதில் குறைந்த முதல் நபர் ஹிமா தாஸ்.
எந்தவொரு பின்னணியும் இல்லாமல் தடகளத்தை வாழ்க்கையாகத் தேர்வு செய்துதற்போது, உலக அளவில் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகையிலும் 30 சிறந்த பிரபலங்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மேலும் பல சாதனைகளைப் படைக்க மூவருக்கும் வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com