ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர்: டி20 ஆட்டத்தில் நடந்த அதிசயம்!

கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்குக்காக ஒரு வீரர் ஆட்ட நாயகன் விருது பெறுவது அபூர்வமாகவே நடைபெறும்...
ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர்: டி20 ஆட்டத்தில் நடந்த அதிசயம்!

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. இதில் ஃபீல்டிங்குக்காக தெ.ஆ. வீரர் டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஹெண்டிரிக்ஸ் 74 ரன்களும் டுபிளெஸ்சிஸ் 45 பந்துகளில் 78 ரன்களும் எடுத்தார்கள். கடந்த 11 சேஸிங்கில் வெற்றியைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணியால் இந்தமுறை வெற்றிக்கனியைப் பறிக்கமுடியாமல் போனது. 20 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 4 கேட்சுகள் பிடித்தது மட்டுமல்லாமல் இரண்டு ரன் அவுட்களுக்குக் காரணமாக இருந்த டேவிட் மில்லர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். டி20 ஆட்டத்தில் ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு மூன்று வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்கள்.

கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்குக்காக ஒரு வீரர் ஆட்ட நாயகன் விருது பெறுவது அபூர்வமாகவே நடைபெறும். அதிலும் 1993-க்குப் பிறகு இப்போதுதான் அப்படி ஓர் அதிசயம் நடைபெற்றுள்ளது.

1986 சாம்பியன் டிராபி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் சிறந்த ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார் கஸ் லோகி. மூன்று கேட்சுகளையும் இரு ரன் அவுட்களையும் நிகழ்த்தினார் லோகி. பேட்டிங், பந்துவீச்சில் பங்களிக்காத அவர், கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்குக்காக முதல்முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 1989-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று கேட்சுகள் பிடித்த ரிச்சர்ட்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 1993-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 5 கேட்சுகள் பிடித்த ஜாண்டி ரோட்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார் டேவிட் மில்லர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com