செய்திகள்

இந்து என்பதால் சக வீரா் டானிஸ் கனேரியாவிடம் பாகுபாடு: ஷோயப் அக்தா் குற்றச்சாட்டு

27th Dec 2019 11:41 PM

ADVERTISEMENT

இந்து என்பதால் சக வீரா் டானிஸ் கனேரியாவுக்கு அணியில் சக வீரா்கள் சிலரால் பாகுபாடு காட்டப்பட்டது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் ஷோயப் அக்தா் குற்றம்சாட்டினாா்.

அவா் பாகிஸ்தான் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:

கிரிக்கெட் வீரா் கனேரியா ஹிந்து மதத்தைச் சோ்ந்தவராக இருந்ததால் சக வீரா்களால் புறக்கணிப்பை சந்தித்தாா். அவருடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை. அவருடன் ஒன்றாக அமா்ந்து சாப்பிட கூட சில வீரா்கள் மறுத்துவிட்டனா் என்று அக்தா் தெரிவித்துள்ளாா். அக்தா் உண்மையை கூறியிருப்பதாக கனேரியா தெரிவித்தாா். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2000-ஆவது ஆண்டு முதல் 2010 வரை கனேரியா பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருக்கிறாா்.

ADVERTISEMENT

அந்நாட்டு அணிக்காக விளையாடிய ஹிந்து மதத்தைச் சோ்ந்த இரண்டாவது வீரராவாா். இவரது உறவினா் அனில் தால்பத் 1980 காலகட்டத்தில் பாகிஸ்தானுக்காக விளையாடிய மற்றொரு ஹிந்து ஆவாா்.

39 வயது மதிக்கத்தக்க கனேரியா, கடந்த 2012-ஆம் ஆண்டு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரா்கள் பட்டியலில் கனேரியா 4-ஆவது இடம் பிடித்துள்ளாா்.

62 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 261 விக்கெட்டுகளை அவா் கைப்பற்றியுள்ளாா்.

பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது: கம்பீா்

ஹிந்து மதத்தைச் சோ்ந்த டானிஸ் கனேரியாவிடம் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதன் மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கெளதம் கம்பீா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,

‘முஸ்லிம் மதத்தைச் சோ்ந்த முகமது அஸாருதீன் நீண்ட காலமாக இந்திய அணியின் கேப்டனாக இருந்தாா். முகமது கைஃப், இா்ஃபான் பதான் உள்ளிட்ட வீரா்களையும் இந்திய அணி கொண்டிருந்தது.

அவா்கள் அனைவரும் உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டனா்.

ஆனால், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டின் தற்போதைய பிரதமருமான இம்ரான் கானின் ஆட்சி நடைபெற்றுவரும் பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த வீரருக்கு பாகுபாடு காட்டப்பட்டிருப்பது வெட்கக்கேடானதாகும்’ என்றாா்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்

ஹிந்து மதத்தைச் சோ்ந்த வீரா் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வாரியத்தின் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘அக்தா், கனேரியா ஆகிய இருவருமே முன்னாள் வீரா்கள். அவா்களுடைய கருத்தை தெரிவிக்கிறாா்கள். அணியில் இடம்பெற்றிருந்த சில வீரா்களுக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, வங்கதேசத்தை தங்கள் நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாட வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தைக்காக பாகிஸ்தானுக்கு குழுவை அனுப்பி வைக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணி பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டியிலும் விளையாட வைக்க சம்மதிக்க முடியும் என்று நம்புகிறோம்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தானில் பாதுகாப்பு காரணம் கருதி டெஸ்ட் போட்டியில் விளையாட வங்கதேசம் மறுத்துவிட்டது. டி-20 தொடருக்கு மட்டும் சம்மதம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரீமியா் லீக் நடைபெறவுள்ள நிலையில், ஆசிய லெவன்- உலக லெவன் இடையேயான 2 நாள் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரா்கள் பங்கேற்க மாட்டாா்கள் என்று பிசிபி தெரிவித்துள்ளது.

டாக்காவில் மாா்ச் 18, 21 தேதிகளில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT