எந்தவொரு வேகப்பந்துவீச்சாளரும் இதுவரை 150 டெஸ்டுகளில் விளையாடியதில்லை. இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையை ஆண்டர்சன் பெறவுள்ளார்.
இதுவரை 150 டெஸ்டுகள் விளையாடிய வீரர்கள் இவர்கள் தாம் - சச்சின் (200), பாண்டிங் (168), ஸ்டீவ் வாஹ் (168), காலிஸ் (166), சந்தர்பால் (164), டிராவிட் (164), அலாஸ்டர் குக் (161), ஆலன் பார்டர் (156). இவர்களில் காலிஸ் மட்டும் ஆல்ரவுண்டர். ஆண்டர்சனைத் தவிர அதிக டெஸ்டுகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர், சக இங்கிலாந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் - 134 டெஸ்டுகள்.
இந்நிலையில் 150 டெஸ்டுகளில் விளையாடும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையை நாளை எட்டவுள்ளார் இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன். தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் நடைபெறுகிறது. இந்த டெஸ்டில் பங்குபெறும் ஆண்டர்சன், தனது 150-வது டெஸ்டில் விளையாடுகிறார்.
இதுவரை 149 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன், 575 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேகப்பந்துவீச்சாளரும் இவர் தான். இவரை விடவும் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முரளிதரன், வார்னே, கும்ப்ளே ஆகிய மூவரும் சுழற்பந்துவீச்சாளர்கள்தாம்.
மேலும் கடந்த பத்தாண்டுகளில் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வினுக்கு அடுத்ததாக 2-ம் இடம் பிடித்துள்ளார் ஆண்டர்சன்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்டர்சனுக்குக்கு மகத்தான இடமுண்டு. அவருடைய சாதனைகள் மேலும் தொடரவேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.