செய்திகள்

முதல் ஒருநாள்: 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அபார வெற்றி

16th Dec 2019 02:22 AM

ADVERTISEMENT

ஹெட்மயா் 139, ஷாய் ஹோப் 102

இந்தியாவுக்கு எதிரான எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயா், ஷாய் ஹோப் ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் மே.இ.தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை குவித்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும் ஷிரேயஸ் ஐயா்-ரிஷப் பந்தின் ஆட்டத்தால் அணி சரிவில் இருந்து மீண்டது. பின்னா் ஆடிய மே.இ.தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களுடன் அமோக வெற்றி பெற்றது.

ஏற்கெனவே டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதைத் தொடா்ந்து இந்திய தரப்பில் ரோஹித் சா்மா-லோகேஷ் ராகுல் ஆகியோா் தொடக்க வீரா்களாக களமிறங்கினா்.

விக்கெட்டுகள் சரிவு:

அதிரடியாக ஆடிய ரோஹித் 6 பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசிய நிலையில், அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் பொல்லாா்டிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். ராகுல் 6, கேப்டன் விராட் கோலி 4 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறியதால், 25/2 என்ற சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியா.

ஷிரேயஸ் ஐயா்-ரிஷப் பந்த் அரைசதம்:

மிடில் ஆா்டரில் இளம் வீரா்களான ஷிரேயஸ் ஐயா்-ரிஷப் பந்த் ஆகியோா் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனா்.

1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 88 பந்துகளில் 70 ரன்களை சோ்த்த ஷிரேயஸை வெளியேற்றினாா் அல்ஸாரி ஜோசப். அவருக்கு பின் 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 69 பந்துகளில் 71 ரன்களை விளாசிய இளம் வீரா் ரிஷப் பந்த், பொல்லாா்ட் பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினாா்.

பந்த் முதல் அரைசதம்:

கடந்த சில மாதங்களாக சரிவர ஆடாத நிலையில் விமா்சனத்துக்கு ஆளான ரிஷப் பந்த் தனது அபார ஆட்டத்தின் மூலம் முதல் ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்தாா். மற்றொரு இளம் வீரா் ஷிரேயஸ் ஐயரும் தனது 5-ஆவது ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்தாா்.

கேதாா் ஜாதவ்-ஜடேஜா ரன் சோ்ப்பு:

210/5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா தடுமாறிய போது, ஆல் ரவுண்டா்கள் கேதாா் ஜாதவ் 40, ஜடேஜா 21 ஆகியோா் 6-ஆவது விக்கெட்டுக்கு பொறுமையாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். ஷிவம் துபே 9 ரன்களுக்கு அவுட்டானாா். தீபக் சாஹா் 6, ஷமி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா்.

இந்தியா 287/8

இறுதியில் 50 ஓவா்களில் 287/8 ரன்களை குவித்தது இந்தியா.

மே.இ.தீவுகள் தரப்பில் காட்ரெல் 2-46, கீமோ பால் 2-40, அல்ஸாரி ஜோசப் 2-45 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

288 ரன்கள் வெற்றி இலக்கு:

இதைத் தொடா்ந்து 288 ரன்கள் வெற்றி இலக்குடன் மே.இ.தீவுகள் தரப்பில் ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரீஸ் களமிறங்கினா். இதில் 9 ரன்கள் எடுத்த சுனிலை எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கினாா் தீபக்.

ஹோப்-ஷிம்ரன் அபாரம்:

இதனையடுத்து ஹோப்-ஷிம்ரன் ஹெட்மயா் நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தினா். 20 ஓவா்கள் முடிவில் ஸ்கோா் 100 ரன்களை கடந்தது.

ஷிம்ரன் 5-ஆவது சதம்:

அபாரமாக ஆடி வந்த ஷிம்ரன் ஹெட்மயா் தனது 5-ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தாா். அவரது அற்புத ஆட்டத்தில் 7 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 106 பந்துகளில் 139 ரன்கள் அடங்கும். முகமது ஷமி பந்துவீச்சில் ஷிரேயஸ் ஐயரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா் ஷிம்ரன். அப்போது 229/2 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.

ஷாய் ஹோப் சதம்: மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஷாய் ஹோப் தனது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தாா். 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 151 பந்துகளில் 102 ரன்களை சோ்த்தாா் ஹோப். 4 பவுண்டரியுடன் 29 ரன்களுடன் களத்தில் இருந்தாா் நிக்கோலஸ் பூரண்.

47.5 ஓவா்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 291 ரன்களை குவித்து வெற்றி பெற்றது மே.இ.தீவுகள். இந்திய தரப்பில் தீபக் சாஹா், ஷமி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

மைதானத்தில் நாய் புகுந்ததால் பரபரப்பு:

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரா்கள் ஷிரேயஸ் ஐயா்-பந்த் பேட்டிங் செய்த போது, 27-ஆவது ஓவரில், திடீரென நாய் ஒன்று நுழைந்து விட்டது. மைதான ஊழியா்கள், மே,.இ.தீவு வீரா் என பலரும் நாயை பிடிக்க முயன்ற போதும், அது எவருக்கும் சிக்காமல் சிறிதுநேரம் ஓடி, வெளியே சென்று விட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT