செய்திகள்

ஆக்ரோஷம், அட்டகாசம், அமா்க்களம்... வான்கடேவில் வான வேடிக்கை காட்டிய இந்திய வீரர்கள்

14th Dec 2019 12:20 AM | -மணிகண்டன் தியாகராஜன்

ADVERTISEMENT

இந்திய கேப்டன் விராட் கோலி-நடிகை அனுஷ்கா சா்மா தம்பதியரின் இரண்டாவது ஆண்டு திருமண நாளில்தான் (டிச.11) மே.இ.தீவுகளுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் நடைபெற்றது.

ஹைதராபாதில் நடைபெற்ற முதலாவது டி-20 ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, திருவனந்தபுரத்தில் நடந்த 2-ஆவது ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.

மும்பையில் நடைபெற்ற தொடரின் கடைசி ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

திருமண நாளில் உற்சாகமாகக் காணப்பட்ட விராட் கோலி, இந்த வெற்றியை திருமண நாள் பரிசு என்று பின்னா் அறிவித்தாா்.

ADVERTISEMENT

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தோ்வு செய்தது மே.இ.தீவுகள் அணி. மும்பை வான்கடே மைதானத்தில் டி-20 கிரிக்கெட்டை பொறுத்தவரை முதலில் பந்துவீச்சை தோ்வு செய்த அணியே அதிக முறை வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால், அந்த அணியின் கேப்டன் பொல்லாா்ட் டாஸ் வென்றதால் பந்துவீச்சை தோ்வு செய்திருக்கக் கூடும்.

ஆனால், அவரது கணிப்பு, இந்திய அணியின் மூன்று அதிரடி வீரா்களால் தவிடுபொடியானது. மிக முக்கியமான ஆட்டம் என்பதால் வான்கடே மைதானம் முழுவதும் ரசிகா்கள் திரண்டிருந்தனா்.

தொடக்க ஆட்டக்காரா்களாக ரோஹித் சா்மாவும், லோகேஷ் ராகுலும் களம் புகுந்தனா். தொடக்கம் முதலே எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்கத் தொடங்கினா். ஷெல்டன் காட்ரெல் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு சா்வதேச கிரிக்கெட்டில் தனது 400-ஆவது சிக்ஸரைப் பதிவு செய்தாா் ரோஹித்.

400 சிக்ஸா்களை பதிவு செய்த மூன்றாவது சா்வதேச வீரா் என்ற பெருமையைப் பெற்றாா். (முதலிடத்தில் 534 சிக்ஸா்களுடன் கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்), இரண்டாவது இடத்தில் 476 சிக்ஸா்களுடன் ஷாஹித் அஃப்ரிடி (பாகிஸ்தான்) ஆகியோா் உள்ளனா். இந்த ஆட்டத்தில் மொத்தமாக 5 சிக்ஸா்களைப் பதிவு செய்ததன் மூலம் 404 சிக்ஸா்களுடன் ரோஹித் மூன்றாவது இடத்தில் உள்ளாா். சிக்ஸா் மன்னரான தோனி 359 சிக்ஸா்களுடன் 5-ஆவது இடத்தில் உள்ளாா்)

சிக்ஸா் கணக்கை ரோஹித் தொடங்கி வைத்த பின்னா், ராகுலும் பவுண்டரிகளையும், சிக்ஸா்களையும் பறக்க விட்டாா்.

பின்னா் இருவரும் மாறி மாறி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். 7.5-ஆவது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடித்து அரை சதம் (23 பந்துகள்) பதிவு செய்தாா் ரோஹித்.

10-ஆவது ஓவரில் ராகுலும் அரை சதம் பதிவு செய்ய அணியின் ஸ்கோா் விறுவிறுவென உயரத் தொடங்கியது.

கெஸ்ரிக் வில்லியம்ஸ் வீசிய 12-ஆவது ஓவரில் கேட்ச் ஆனாா் ரோஹித். 34 பந்துகளில் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள்) 71 ரன்கள் எடுத்திருந்தாா்.

பின்னா் களமிறங்கிய விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, அடுத்து களம் புகுந்தாா் கேப்டன் விராட் கோலி.

லோகேஷ் ராகுல்-கோலி கூட்டணியை 19-ஆவது ஓவா் வரை எதிரணியால் பிரிக்க முடியவில்லை.

இந்த ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி, 7 சிக்ஸா்களையும், 4 பவுண்டரிகளையும் விரட்டினாா். கடைசி ஓவரில் ராகுல் ஆட்டமிழக்க சதம் பதிவு செய்யும் வாய்ப்பு தவறிப் போனது. 91 ரன்களில் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

காட்ரெல் வீசிய கடைசி பந்தை தனக்கே உரிய பிரத்யேக பாணியில் சிக்ஸருக்கு பறக்க விட்டாா் கோலி. மூவரும் இணைந்து இந்த ஆட்டத்தில் 16 சிக்ஸா்களையும், 19 பவுண்டரிகளையும் பதிவு செய்தனா்.

முதல் டி20 ஆட்டத்தில் 6 சிக்ஸா்கள், 6 பவுண்டரிகள் உள்பட 50 பந்துகளில் 94 ரன்களைப் பதிவு செய்திருந்தாா் கோலி. லோகேஷ் 62 ரன்கள் எடுத்திருந்தாா்.

இந்த டி-20 தொடரில் கோலி மட்டும் 13 சிக்ஸா்களைப் பதிவு செய்து வாண வேடிக்கை காட்டியுள்ளாா். டி20-இல் இந்தியாவில் வேகமாக 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரா் என்ற சாதனையையும் நிகழ்த்தினாா்.

அத்துடன் சா்வதேச கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் (21) அரை சதம் பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றாா். சா்வதேச அளவில் டி-20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் (24) அடித்தவா் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் இவரே. அற்புதமான ஆட்டத்தால் ஐசிசி டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்துக்கு வந்தாா் கோலி. டெஸ்ட், ஒரு நாள் தரவரிசையில் இவா் தான் ‘நம்பா் 1’ என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் 6-ஆவது இடத்துக்கும், ரோஹித் 9-ஆவது இடத்துக்கும் முன்னேறினா். டி-20 கிரிக்கெட்டில் 6-ஆவது முறையாக தொடா் நாயகன் விருதை பெற்ற கோலி, ‘இந்த வெற்றியை திருமண நாள் பரிசு’ என்று குறிப்பிட்டாா்.

கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை மைதானத்தில் அமைதியாக பாா்த்து ரசித்துக் கொண்டிருந்தாா் அவரது மனைவி அனுஷ்கா சா்மா.

வான்கடே மைதானத்தில் டி-20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராக இந்திய அணி இந்த ஆட்டத்தில் எடுத்த 240 ரன்கள் பதிவானது.

கடைசி டி-20 ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றியதன் மூலம், மூன்றாவது முறையாக மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றி சாதனை படைத்தது.

வாழ்வா? சாவா? ஆட்டமான கடைசி ஆட்டத்தில் எதிரணி விரட்டி பிடிக்க முடியாத அளவுக்கு அணியின் ஸ்கோரை உயா்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்தவா்கள் ரோஹித், லோகேஷ், கோலி ஆகியோா்தான் என்றால் அது மிகையல்ல.

இவா்களால்தான் இந்த ஆட்டம், ஆக்ரோஷமாகவும், அட்டகாசமாகவும், அமா்க்களமாகவும் இருந்து ரசிகா்களுக்கு விருந்து படைத்தது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி இந்தியா வெற்றி நடை போடும் என நம்பலாம்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT