செய்திகள்

எப்படி போட்டாலும் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்: வான்கடேவில் வானவேடிக்கை!

11th Dec 2019 09:06 PM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் போலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ரோஹித் சர்மாவும், கேஎல் ராகுலும் களமிறங்கினர். தொடக்க முதலே அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியதுபோல் 2-வது பந்திலேயே ரோஹித் சர்மா அதிரடி காட்டத் தொடங்கினார். மறுமுனையில் கேஎல் ராகுலும் அதிரடியாகவே விளையாடினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் வெங்காய விலையைவிட கிடுகிடுவென உயர்ந்தது. முதல் பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்தது.

பியரே வீசிய ஓவரில் ரோஹித் சர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க 8-வது ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. அதேசமயம், ரோஹித் சர்மாவும் தனது 23 பந்துகளில் அரைசத்தை எட்டினார்.

ADVERTISEMENT

இவரைத் தொடர்ந்து, மறுமுனையில் தன்பங்குக்கு அதிரடி காட்டி வந்த கேஎல் ராகுலும் தனது 29-வது பந்தில் அரைசதம் அடித்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 12-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 71 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இதே வேகத்தில் இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்த விராட் கோலிக்கு முன்னதாக ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் 2-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஆனால், அடுத்து களமிறங்கிய விராட் கோலி, வழக்கத்துக்கு மாறாக சிக்ஸர்களாகப் பறக்கவிடத் தொடங்கினார். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் சறுக்கலைச் சந்திக்காமல் ஏறுமுகத்திலேயே இருந்தது. 

இருவரும் மாறி மாறி பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஹோல்டர் ஓவரில் 22 ரன்கள், கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஓவரில் 17 ரன்கள், போலார்ட் ஓவரில் 27 ரன்கள் என இந்திய அணிக்கு அற்புதமாக ரன் கிடைத்தது. இதனிடையே விராட் கோலியும் அரைசதத்தைக் கடந்தார். அவர் இதை வெறும் 21 பந்துகளிலேயே எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்திய அணியும் 18-வது ஓவரிலேயே 200 ரன்களைக் கடந்தது. 

இந்நிலையில், தொடக்கம் முதல் அதிரடி காட்டி வந்த கேஎல் ராகுல் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 91 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, விராட் கோலி சிக்ஸர் அடித்து இந்திய இன்னிங்ஸை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 29 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்கள் எடுத்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT