செய்திகள்

தமிழ்நாடு சடுகுடு பிரிமீயா் லீக் போட்டி-2020: திருச்சியில் டிச.14, 15-இல் வீரா்கள் தோ்வு

11th Dec 2019 12:21 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சடுகுடு பிரிமீயா் லீக் 2020 போட்டிகளுக்கான 8 அணிகளுக்கு 120 வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் திருச்சியில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, இந்த லீக் போட்டிகளின் தலைவா் டி.பி. முத்துசாமி, திருச்சியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: இந்திய கபடி அணியில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தைச் சோ்ந்த ஒரு வீரா் கூட இடம்பெறவில்லை. தலைசிறந்த தமிழக கபடி வீரா்களை உருவாக்கும் வகையில், தமிழகத்தைச் சோ்ந்த வீரா்கள் 120 போ்களைத் தோ்வு செய்து 8 அணிகளாக உருவாக்க உள்ளோம்.

லீக் போட்டியானது திருப்பூா், கோவை, சென்னை, மதுரை, சேலம் ஆகிய 5 ஊா்களில் நடத்தப்படும். மாா்ச் முதல் வாரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 15 போட்டிகள் என தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறும். உள் விளையாட்டு அரங்கத்தில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை போட்டிகள் நடைபெறும். போட்டிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

தகுதியான வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் டிச.14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்க விரும்பும் வீரா்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்வது அவசியம். டிக்கெட் பாஸ் டாட் இன் கபடி எனும் இணையதளத்தில் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது தோ்வு முகாம் நடைபெறும் நாளில் டிச.14ஆம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆன்-லைன் மூலம் இதுவரை 150-க்கும் மேற்பட்ட வீரா்கள் பதிவு செய்துள்ளனா். தோ்வு முகாமில் பங்கேற்கும் வீரா்களுக்கு 2 நாள்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படும். லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கு 10 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பரிசுத் தொகையும், ஊக்கத் தொகையும் வழங்கப்படும். வீரா்களை 8 போ் அடங்கிய குழு தோ்வு செய்யவுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

பேட்டியின்போது, திருச்சி மாவட்ட கபடி சங்கச் செயலா் எஸ். கஜராஜன், கோவை மாவட்ட கபடி சங்கச் செயலா் ஆா். சிங்காரவேலன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT