செய்திகள்

தேசிய விளையாட்டில் இடம் பெற முடியாத தமிழக வீரர்கள்!

29th Aug 2019 12:58 AM | ஆ.நங்கையார் மணி 

ADVERTISEMENT


ஹாக்கியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீனியர் பிரிவில் தமிழக வீரர்கள் இடம் பெற முடியாத நிலையை மாற்ற, கூடுதல் சிறப்பு விளையாட்டு விடுதிகளை உருவாக்கி, சங்கங்களின் தலையீட்டை கடந்து திறமையான வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹாக்கியில் தனிச் சிறப்பு வாய்ந்த முன்னாள் வீரர் தயான் சந்த் பிறந்த தினமான ஆக.29ஆம் தேதி தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹாக்கி விளையாட்டில்,  கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தின் பங்களிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. தேசிய அணியில் தமிழக அணி வீரர்களுக்கான இடம் என்பதைவிட, தேசிய அணி தேர்வுக்கான பயிற்சி முகாமில் இடம் பிடிப்பது கூட தமிழக ஹாக்கி வீரர்களுக்கு கனவாக மாறிவிட்டது.
சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளில் இந்திய அணி தேர்வுக்கு ஆண்டுதோறும் 2 பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாமிற்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 33 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து 18 பேர் கொண்ட அணி சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் நுழைவதே தமிழக வீரர்களுக்கு கடும் சவாலாக மாறி, கடந்த 10 ஆண்டுகளாக சீனியர் பிரிவில் ஒருவர் கூட நுழைய முடியாத அவலநிலை உள்ளது. கடந்த முறை மாநிலங்களுக்கு  இடையிலான சீனியர் ஹாக்கிப் போட்டியில் தமிழகம் வெற்றிப் பெற்ற போதிலும், தமிழக வீரர்களில் ஒருவருக்கு கூட தேசிய பயிற்சி முகாமில் இடம்  கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக திண்டுக்கல் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் செயலர் பி.சதீஷ் கண்ணா கூறுகையில், தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யும்போது, ஒவ்வொரு  மாவட்டத்தைச் சேர்ந்த  நிர்வாகியும், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களை பரிந்துரை செய்கின்றனர். இந்திய அணிக்காக தமிழக வீரர்கள்  விளையாட வேண்டும் என்ற  நிலை மாறி, தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் 2 முறை தமிழக அணிக்காக விளையாட வைத்து அதன் மூலம் அரசுத்துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் குறிக்கோளாக மாறிவிட்டது என்றார்.
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு செயலர் ரேணுகா லட்சுமி கூறுகையில், பள்ளி அளவில் சிறப்பாக ஹாக்கி விளையாடும் மாணவர்கள் பலருக்கு, அதன்பிறகு, முறையான வழிகாட்டுதல், பயிற்சி கிடைப்பதில்லை. மாவட்ட நிலையில் சிறந்த வீரர்களை உருவாக்கினால் மட்டுமே, அடுத்தக்கட்டமாக மாநில அளவில் அந்த வீரர்களின் திறனை மேலும் வலுப்படுத்தி தேசிய அணிக்கு பரிந்துரைக்க முடியும். 15 மாவட்டங்களில் ஹாக்கி விளையாட்டு சிறப்பாக உள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 10 மாவட்டங்களில் சிறந்த வீரர்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT