செய்திகள்

தில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்துக்கு அருண் ஜேட்லி பெயர்

28th Aug 2019 01:04 AM

ADVERTISEMENT


தில்லியில் உள்ள பிரசித்தி பெற்ற பெரோஸ்ஷா கோட்லா மைதானத்துக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெயர் சூட்டப்படுகிறது.
கிரிக்கெட் ஆர்வலரான அருண் ஜேட்லி, கடந்த 1999 முதல் 2013 வரை தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும், பிசிசிஐ துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். அவரது காலத்தில் தில்லியில் கிரிக்கெட் வளர்ச்சி கண்டது. மேலும் மைதானத்தையும் நவீனப்படுத்தினார். அண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் ஜேட்லி.
இந்நிலையில் அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தின் பெயர் அருண் ஜேட்லி என மாற்றப்படுகிறது. வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி புதிய பெயர் சூட்டும் விழா நடைபெறும். அப்போது மைதானத்தில் ஒரு அரங்கத்துக்கும் விராட் கோலி பெயர் சூட்டப்படுகிறது.
இதுதொடர்பாக டிடிசிஏ தலைவர் ரஜத் சர்மா கூறியதாவது: 
அருண் ஜேட்லியின் ஆதரவு, ஊக்கத்தால் தான் கோலி, சேவாக், கெளதம் கம்பீர், நெஹ்ரா, ரிஷப் பந்த், உள்பட பல வீரர்கள் உருவாகி நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.  விளையாட்டு அரங்கமும் நவீனமயமானது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்பர் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT