உலக பாரா பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.1.82 கோடி நிதியுதவியை செவ்வாய்க்கிழமை வழங்கினார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.
மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளும் அதிக ஊக்கத் தொகை பெறும் வகையில் கொள்கையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியால் நடத்தப்படும் உலகப் போட்டிகள், சாம்பியன்ஷிப்களில் பதக்கம் வெல்வோர், மற்றும் ஐபிசியால் அங்கீகரிக்கப்படாத அதே நேரம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய உலக விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்படும் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கும் ஊக்கத் தொகை தரப்படும்.
மேலும் போட்டி முடிந்து நாடு திரும்பிய நாள் அன்றே ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பரிசளிப்பு விழாவுக்காக வீரர்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. இதுவும் மாற்றப்பட்டுள்ளது. அண்மையில் பேஸலில் நடைபெற்ற உலக பாரா பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்திய அணியினர் 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 12 பதக்கங்களை வென்றனர்.
தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.20 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு தலா ரூ.14 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது. இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.15 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு தலா ரூ.10.5 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது. பாரா பாட்மிண்டன் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை தேடித் தந்தனர். அவர்களது கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் இது என கிரண் ரிஜிஜு கூறினார்.