செய்திகள்

இந்தியன் என்பதில் பெருமைகொள்கிறேன்: பெருமகிழ்ச்சியுடன் நாடு திரும்பிய பி.வி.சிந்து பேட்டி

27th Aug 2019 10:10 AM | Raghavendran

ADVERTISEMENT

 

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹாரவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.

முந்தைய 2 உலக பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த நிலையில், தற்போது வெற்றிபெற்று இந்தியாவின் முதல் மகளிர் பாட்மிண்டன் சாம்பியன் என்ற மகத்தான சாதனையைப் படைத்தார்.

இதுதொடர்பாக பி.வி.சிந்து கூறுகையில், கடந்த 2017, 2018 உலகப் போட்டி இறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த போது என்னை பலர் கேலி, கிண்டல், விமர்சனம் செய்தனர். இதனால் எனக்கு கோபமும், வேதனையும் ஏற்பட்டது. தற்போது தங்கப் பதக்கம் வென்று என்னுடைய ஆட்டத்தின் மூலம் அவர்களுக்கு பதில் கூறி விட்டேன் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில், உலக பாட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து, திங்கள்கிழமை நள்ளிரவு இந்தியா வந்தடைந்தார். புதுதில்லி விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:

உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றது எனது வாழ்வின் சிறந்த தருணமாகும். ஒரு இந்தியராக இதில் பெருமைகொள்கிறேன். நாட்டுக்காக மேலும் பல பதக்கங்களைக் குவிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் எனது ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்களுடைய அன்பினாலும், பிரார்த்தனையாலும் தான் நான் இன்று இந்த உயரத்துக்கு வளர முடிந்தது என்று தெரிவித்தார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT