முந்தைய 2 உலக பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது தொடர்பாக என்னை விமர்சித்தவர்களுக்கு இந்த வெற்றியே பதிலாகும் என உலக சாம்பியன் பி.வி.சிந்து கூறியுள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹாரவை 21-7, 21-7 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 2017, 2018 உலகப் போட்டி இறுதி ஆட்டங்களில் தங்கம் வெல்லாதபோது என்னை பலர் கிண்டல், விமர்சனம் செய்து கேள்வி கேட்டனர். இதனால் எனக்கு கோபம், வேதனை ஏற்பட்டது. தற்போது தங்கப் பதக்கம் வென்றுள்ளதே அவர்களுக்கான பதிலாகும். என்னுடைய மட்டை மூலம் அவர்களுக்கு பதில் கூறி விட்டேன்.
முதல் உலகப் போட்டியின் போது, வேதனை ஏற்பட்டது. இரன்டாவது உலகப் போட்டியில் கோபம் உண்டானது. என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த இறுதி ஆட்டத்தில் என்னுடைய வழக்கமானஆட்டத்தை ஆட வேண்டும் என நானே கூறிக் கொண்டேன். கவலைப்படக்கூடாது என நினைத்தது பலன் தந்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின் ஒவ்வொருவரும் நான் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என கருதினர். மற்றவர்கள் கூறுவதை பற்றி நினைக்காமல் ஆட்டங்களை எதிர்கொள்வது குறித்து முடிவு செய்தேன். களத்தில் 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்தி, நாட்டுக்காக முழு மூச்சுடன் ஆடியதால் தங்கம் வென்றேன்.
2020 ஒலிம்பிக் தங்கம்: தற்போது அடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். படிப்படியாக இதற்கு முயற்சிக்க வேண்டும். ஒலிம்பிக் தகுதிச் சுற்று நடந்து வருகிறது. பாட்மிண்டன் என்பது எனது அங்கம். மேலும் பல வெற்றிகளை பெறமுடியும் என நம்புகிறேன் என்றார்.