மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா 297

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.


மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தரப்பில் லோகேஷ் ராகுல் 44, மயங்க் அகர்வால் 5, புஜாரா 2, விராட் கோலி 9, என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களுடன் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தது.
ரஹானே 18-ஆவது அரைசதம்:  பின்னர் ரஹானே-ஹனுமா விஹாரி ஆகியோர் இணைந்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 10 பவுண்டரியுடன் 163 பந்துகளில் 81 ரன்களை எடுத்த ரஹானே, கேப்ரியேல் பந்தில் போல்டானார். 5 பவுண்டரியுடன் 32 ரன்களை சேர்த்த விஹாரியை அவுட்டாக்கினார் ரோச். ரிஷப் பந்த் 20, ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் 68.5  ஓவர்களில் 203-6 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.
இரண்டாம் நாள் ரிஷப் பந்த்-ஜடேஜா தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். மேலும் 4 ரன்களே எடுத்த நிலையில் பந்த் 24 ரன்களுடன் ரோச் பந்தில் அவுட்டானார். 
ஜடேஜா-இஷாந்த் அபாரம்: பின்னர் இணைந்த ஜடேஜா-இஷாந்த் சர்மா அபாரமாக ஆடி 50 ரன்களை சேர்த்தனர். 19 ரன்களுடன் கேப்ரியல் பந்தில் போல்டானார் இஷாந்த். அதைத்தொடர்ந்து ஆட வந்த முகமது ஷமி, ரோஸ்டான் சேஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் தந்து கோல்டன் டக் அவுட்டானார்.
ஜடேஜா 11-ஆவது அரைசதம்: ரவீந்திர ஜடேஜா தனது 11-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். பிரம்மாண்ட சிக்ஸர் மூலம் அரைசதத்தை எட்டினார் அவர்.
ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் தந்து வெளியேறிய ஜடேஜாவின் 58 ரன்களில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். பும்ரா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
96.4 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
மே.இ.தீவுகள் தரப்பில் அபாரமாக பந்துவீசி கெமர் ரோச் 4-66, கேப்ரியல் 3-71 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மே.இ.தீவுகள் 88/4: தனது முதல் இன்னிங்ஸை பின்னர் தொடங்கிய மே.இ.தீவுகள் ஆரம்பத்திலேயே  விக்கெட்டுகளை இழந்தது. பிராத்வெயிட் 14, ஜான் கேம்பல் 23, ஷம்ரா புருக்ஸ் 11, பிராவோ 18 ரன்களுடன் வெளியேறினார். 30 ஓவர்கள் முடிவில் 88/4 ரன்களையே எடுத்திருந்தது. ராஸ்டான் சேஸ் 16, ஷாய் ஹோப் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

சுருக்கமான ஸ்கோர்
இந்தியா  96.4 ஓவர்களில் 297
ரஹானே-81, ராகுல் 44, ஜடேஜா 58
பந்துவீச்சு
கெமர் ரோச் 4-66, கேப்ரியல் 3-71

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com