செய்திகள்

நியூஸி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 85/2

23rd Aug 2019 01:17 AM

ADVERTISEMENT


நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி,  முதல் இன்னிங்ஸை அந்த அணி தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் 36.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலங்கை 85 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணாரத்னேவும், லஹிரு திரிமனேவும் களம் இறங்கினர்.
முதல் 10 ஓவர்களுக்கு விக்கெட் எதுவும் விழவில்லை. சோமர்வில்லே வீசிய 14.4 ஆவது ஓவரில் வில்லியம்சன்னிடம் கேட்ச் ஆகி 2 ரன்களில் ஆட்டமிழந்தார் திரிமனே. இதையடுத்து, குசால் மென்டிஸ் கருணாரத்னேவுக்கு தோள் கொடுக்க வந்தார்.
இருவரும் மெதுவாக அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். 32.3ஆவது ஓவரில்  கிராண்ட்ஹோமின் பந்துவீச்சில் வால்டிங்கிடம் கேட்ச் ஆகி 70 பந்துகளில் 32 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார் மென்டிஸ். பின்னர், ஆஞ்சலோ மாத்யூஸ் களம் இறங்கி 14 பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் எதுவும் எடுக்காமல் திமுத் கருணாரத்னேவுடன் களத்தில் உள்ளார்.
கேப்டன் திமுத் 100 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்களை எடுத்துள்ளார்.
நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 7 ஓவர்கள் வீசி 20 ரன்களையும், டிம் சவுதி 12 ஓவர்கள் வீசி 14 ரன்களையும் விட்டுக் கொடுத்தார்.
இரண்டாவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
மழையால் காலதாமதம்
கொழும்பு மைதானத்தில் 10 மணிக்கு ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் எப்போது
தொடங்கும் என்று தெரியாமல் இருந்து வந்தது. சுமார் 12.20 மணியளவில் மழை நின்றது.
இதையடுத்து, பிற்பகல் 1.20 மணியளவில் டாஸ் போடப்பட்டு, 1.40 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
மோசமான வானிலை காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் மாலை 5 மணியளவில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT