ரோஹித்-ரஹானேவா அல்லது 5-ஆவது பந்துவீச்சாளரா? இந்திய அணி நிர்வாகம் குழப்பம்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ரோஹித்-ரஹானேவை களமிறக்குவதா அல்லது 5-ஆவது பந்துவீச்சாளரை பயன்படுத்துவதா என இந்திய அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.
ரோஹித்-ரஹானேவா அல்லது 5-ஆவது பந்துவீச்சாளரா? இந்திய அணி நிர்வாகம் குழப்பம்


மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ரோஹித்-ரஹானேவை களமிறக்குவதா அல்லது 5-ஆவது பந்துவீச்சாளரை பயன்படுத்துவதா என இந்திய அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட தொடர் மே.இ.தீவுகளில் நடைபெறுகிறது. வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் ஆட்டத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக ரோஹித் சர்மா-ரஹானே இணையாக ஆடச் செய்வதா அல்லது 5-ஆவது கூடுதல் பந்துவீச்சாளரை இறக்குவதா என குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நான்கு பந்துவீச்சாளர்கள் இருந்தால் மட்டுமே துணை கேப்டனான ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனினும் சிவப்பு பந்து ஆட்டத்தில் ரஹானேவின் பார்ம் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இந்திய அணி ஏழரை மாதங்களுக்கு பின் டெஸ்ட் ஆட்டங்களில் மீண்டும் பங்கேற்கிறது.
தொடக்க வீரராக ஹனுமா விஹாரி: 6-ஆவது கூடுதல் பேட்ஸ்மேனா அல்லது 5ஆவது கூடுதல் பந்துவீச்சாளரா என கோலி-ரவிசாஸ்திரி தீவிர ஆலோசனையில் உள்ளனர். கேஎல். ராகுல்-மயங்க் அகர்வாலை தொடக்க வீரர்களாக களமிறக்கலாமா எனவும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் டெஸ்ட் ஆட்டங்களில் ராகுலின் ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லாத நிலையில் ஹனுமா விஹாரியை தொடக்க வீரராகவும் ஆடச் செய்யும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மே.இ.தீவுகள் ஏ அணியுடன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஹனுமா அரைசதம் அடித்தார். 
சேதேஸ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் 3 மற்றும் 4-ஆவது நிலை பேட்ஸ்மேன்களாக ஆடுவர். அதன் பின்னர் தான் பேட்டிங் வரிசை சிக்கலை சந்திக்கும். அதன் பின் ரிஷப் பந்த் 6-ஆவது நிலையிலும், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 7-ஆவது நிலையிலும் ஆடலாம்.
ரோஹித்தா-ரஹானேவா?: ரோஹித் சர்மா பயிற்சி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். ஆனால் ரஹானேவோ சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். எனினும் அவரது பார்ம் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த், ஷமி ஆகியோருடன் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் அல்லது குல்தீப் ஆகியோருடன் 4 பந்துவீச்சாளர்கள் முறையை பின்பற்றுவதே சிறந்ததது எனக் கருதப்படுகிறது.
கூடுதல் பேட்ஸ்மேன் களமிறக்கப்பட்டால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும் 5 பந்துவீச்சாளர்களுடன் டெஸ்ட் ஆட்டங்களில் ஆட வேண்டும் என்பதே கோலியின் நிலைப்பாடாகும். பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு தோதாக இருந்தால், உமேஷ் யாதவையும் களமிறக்க வாய்ப்புள்ளது. 
எனினும் ஆண்டுகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் களப்பணியாளர்கள் அமைக்கும் பிட்சின் தன்மையை பொறுத்தே இந்தியாவின் உத்தியும் அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com