திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தடையின்றி நடைபெறுமா?

DIN | Published: 11th August 2019 02:30 AM

 

மே.இ.தீவுகள்-இந்தியா இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் மழையின்றி முழுமையாக நடைபெற வேண்டும் என இரு அணியினரும் எதிர்பார்த்துள்ளனர்.

டி20, ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் தொடரில் பங்கேற்று இந்தியா சுற்றுப் பயணம் செய்து வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெறுகிறது. இதில் கயானாவில் நடைபெற்ற முதல் ஆட்டம் பலத்த மழை எதிரொலியாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளின் கேப்டன்களான கோலி, ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

சிறப்பு ஓபனராக ராகுல்: மிகவும் முக்கியமான நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஐயர் களமிறக்கப்படலாம். லோகேஷ் ராகுல், தொடர்ந்து தொடக்க வரிசையிலேயே களமிறக்கப்படலாம். ஷிகர் தவன் ஆட்டம் தொடர்ந்து குறைந்தால் மட்டுமே ராகுலுக்கு உறுதியான வாய்ப்பு கிட்டும். உலகக் கோப்பை போட்டியிலேயே தவன் காயம்பட்ட நிலையில் ராகுல் சிறப்பு ஓபனராக இறங்கி ஆடினார். 

கேதார் ஜாதவ்:  உலகக் கோப்பையில் சோபிக்காத ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவும் இத்தொடரை முழுவதும் நம்பி உள்ளார். தினேஷ் கார்த்திக் இடத்தில் அவர் இடம் பெறலாம். இளம் வீரர் ஷுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக ஆடி வருவதால் துரிதமாக இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டியுள்ளது. இதனால் அணி நிர்வாகத்துக்கு குழப்பம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஜாதவால் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க முடியவில்லை என்ற கருத்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சிலும் அவரது பயன்பாடு எவ்வாறு இருக்கும் எனத் தெரியவில்லை.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் ஓய்வு எடுக்கும் பட்சத்தில் நவ்தீப் சைனி களமிறங்குவார். சஹல் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக சேர்க்கப்படலாம். கலீல் அகமது விடுவிக்கப்படலாம். ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ஷமி ஆகியோர் பலம் சேர்ப்பர்.

கெயில் தடுமாற்றம்: அதே நேரத்தில் மே.இ.தீவுகளில் தொடக்க வீரர் எவின் லெவிஸ் அதிரடியாக ஆடுகிறார். ஆனால் மூத்த வீரர் கிறிஸ் கெயில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது அந்த அணிக்கு சிக்கலாக உள்ளது. டெஸ்ட் ஆட்டத்துடன் விடை பெறுவதாக தனது விருப்பத்தை கெயில் கூறியிருந்தார். ஆனால் அந்நாட்டு வாரியம் அதை ஏற்கவில்லை.

கடைசி 2 ஒருநாள் ஆட்டங்களோடு அவரது கிரிக்கெட் பயணம் முடிவுறும் எனத் தெரிகிறது. வானிலை தெளிவாக இருக்க வேண்டும் என்பதே இரு அணிகளின் வேண்டுதலாக உள்ளது.


ஷிரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு

இரண்டாவது ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. டி20 தொடரில் சேர்க்கப்படாத இளம் வீரர் ஷிரேயஸ் ஐயர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அவர், சர்வதேச அளவிலும் தன்னை நிலை நிறுத்தும் தீவிரத்தில் உள்ளார். 2 ஆட்டங்களில் அவர் சிறப்பாக ஆடினால், தொடர்ந்து அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிட்டும். மே.இ.தீவுகள் ஏ அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடியுள்ளார் ஷிரேயஸ் ஐயர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஆஸி. போராடி டிரா
ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி