நினைவுகள்...: 2015 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை: 5-ஆவது முறையாக ஆஸி. சாம்பியன்

2015 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.
உலகக் கோப்பையுடன் ஆஸி. அணி வீரர்கள்.
உலகக் கோப்பையுடன் ஆஸி. அணி வீரர்கள்.

2015 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.
11-ஆவது உலகக் கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின. 

14 அணிகள் பங்கேற்பு:

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன. 49 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவில் 26 ஆட்டங்களும், நியூஸிலாந்தில் 23 ஆட்டங்களும் நடைபெற்றன. இரு நாடுகளிலும் தலா 7 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன.

இரு பிரிவுகளாக 14 அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

லீக் பிரிவில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 130 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவையும், ஐக்கிய அரபு நாடுகளை 9 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இ.தீவுகளை 4 விக்கெட் வித்தியாசத்திலும், அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றிருந்தது.

காலிறுதிச் சுற்று: ஏ பிரிவில் இருந்து  நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இருந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மே.இ.தீவுகளும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

காலிறுதியில் வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. (இந்தியா 302/6, வங்கதேசம் 193). அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா தகுதி பெற்றன.

அரையிறுதிச் சுற்று: ஆஸ்திரேலியா அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. (ஆஸி. 328/7, இந்தியா 233).

மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் வென்றது நியூஸிலாந்து. (தென்னாப்பிரிக்கா 281/5, நியூஸிலாந்து 299/6).

இறுதி ஆட்டம்:

போட்டியை நடத்திய இரு அணிகளும் இறுதிச் சுற்றுக்கு 2-ஆவது முறையாக தகுதி பெற்றன. இதில் நியூஸிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. (நியூஸிலாந்து 183, ஆஸி. 186/3).

அதிக ரன்கள் எடுத்தவர்: மார்ட்டின் கப்டில் (நியூஸிலாந்து)-547.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்: மிச்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)-22, டிரென்ட் பெளல்ட் (நியூஸி.)-22.

தொடர் நாயகன்: மிச்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா).

மொத்த பார்வையாளர்கள்: 10.16 லட்சம்:

இறுதி ஆட்ட பார்வையாளர்கள்: 93013.

12 நிமிடத்தில் முடிந்த இந்திய-பாக் ஆட்ட டிக்கெட் விற்பனை: இந்தியா-பாகிஸ்தான் மோதிய ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி 12 நிமிடங்களில் முடிந்து விட்டன.

சர்ச்சைகள்:

இந்திய-வங்கதேச ஆட்டத்தின் போது, ரூபெல் ஹுசைன் வீசிய ஃபுல்டாஸ் பந்தை ரோஹித் அடித்த போது, ஸ்கோயர் லெக் பகுதியில் கேட்ச் பிடிக்கப்பட்டது.  மிக உயரத்தில் பந்து வீசப்பட்டதாக கருதி அதை நோபால் என அறிவித்தார் நடுவர். 

இதனால் ரோஹித் சர்மா அவுட்டில்லை என அறிவிக்கப்பட்டது. டிவி காட்சிகளில் பந்து இடுப்பளவு தான் வீசப்பட்டதால், அது செல்லத்தக்கது எனத் தெரிந்தது. நடுவரின் நேர்மையை விமர்சித்த ஐசிசி தலைவர் முஸ்தபா கமல், பதவியை விட்டு விலகுவதாக எச்சரித்தார்.

இந்த ஆட்டத்தை நடுவரின் தவறால் இந்தியா வென்றதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமர்சித்தார். எனினும் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸன் இந்த புகார்கள் ஆதாரமற்றவை. முடிவு நடுவருக்குட்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com