சோகங்களிலிருந்து மீண்டு, சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் கோமதி மாரிமுத்து!

மீண்டும் ஓடவேண்டும், ஜெயிக்கவேண்டும் என்கிற வைராக்கியமே கோமதியை இன்று தங்க மங்கையாக...
சோகங்களிலிருந்து மீண்டு, சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் கோமதி மாரிமுத்து!

ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் 800 மீ. ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

டோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், 30 வயதான கோமதி மாரிமுத்து 800 மீ. தூரத்தை 2:02.70 என்கிற நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனையை முந்திக்கொண்டு கோமதி தங்கம் வென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்ற முதல் தங்கம் இது. 

இந்தப் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் 3-ம் இடத்தில் இருந்த கோமதி கடைசி 100 மீ. ஓட்டத்தில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றுள்ளார். 

2013-ல் புணேவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட கோமதி, 7-ம் இடம் பிடித்தார். இதுவே அவருடைய அறிமுக சர்வதேசப் போட்டி. 2016-ல் புற்றுநோய் காரணமாக கோமதியின் தந்தை இறந்தார். அதன்பிறகு சில மாதங்களில் கோமதியின் பயிற்சியாளர் காந்தியும் இறந்து போக, அந்தக் கடினமான காலக்கட்டத்தை எப்படியோ கடந்து வந்துள்ளார். 2016-ல் காயம் ஏற்பட்டதால் அடுத்த இரு வருடங்கள் கோமதியால் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது.  எனினும் மீண்டும் ஓடவேண்டும், ஜெயிக்கவேண்டும் என்கிற வைராக்கியமே கோமதியை இன்று தங்க மங்கையாக உயர்த்தியுள்ளது. 

தந்தை, பயிற்சியாளர் என இருவரின் இறப்புகளிலிருந்து மீண்டு வர சில காலமானது. சரியான மனநிலையில் இல்லாதபோதும் ஓடுவது மட்டுமே என்னை மீட்டுக்கொண்டு வரும் என்று நம்பினேன். கடந்த சில வருடங்களாகப் பல துயரங்கள் ஏற்பட்டபோதும் என் திறமை மீது நம்பிக்கையுடன் இருந்தேன். 2019-ம் வருடம் மிகச்சிறப்பாக எனக்கு ஆரம்பித்துள்ளது. கடந்த சில வருடங்களில் என் திறமையை அதிகம் வெளிப்படுத்தியுள்ளது இப்போதுதான் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கோமதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com