வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

DIN | Published: 06th December 2018 12:58 AM
நெதர்லாந்து வீரரிடமிருந்து பந்தை கடத்திச் செல்லும் ஜெர்மனி வீரர்.


உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம், நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பின் விளிம்பில் உள்ளது ஜெர்மனி.
இரு அணிகளும் இத்துடன் இரு ஆட்டங்களில் ஆடியுள்ள நிலையில், உலகின் 6-ஆம் நிலையில் உள்ள ஜெர்மனி, இரண்டிலுமே வென்றுள்ளது. உலகத் தரவரிசையில் 4-ஆம் இடத்திலுள்ள நெதர்லாந்துக்கு இது முதல் தோல்வியாகும். ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அதிரடியாகத் தொடங்கிய நெதர்லாந்தில், 8-ஆவது நிமிடத்திலேயே கோல் வாய்ப்பை நெருங்கினார் கேப்டன் பில்லி பேக்கர். 
தொடர் தாக்குதல் ஆட்டத்தால் அவரது அணியே முதல் கோல் அடித்தது. 13-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வாலென்டின் வெர்கா கோலடித்தார். 
ஜெர்மனி அணிக்கு 14-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மதியாஸ் முல்லர் வீணடிக்க, மற்றொரு கோல் முயற்சியை நெதர்லாந்து கோல் கீப்பர் பிர்மின் பிளாக் திறம்படத் தடுத்தார். இவ்வாறாக தொடர்ந்த ஆட்டத்தின் முதல் பாதி நிறைவடைய இருந்த நிலையில், 30-ஆவது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தவற விடாமல் கோலடித்தார் மதியாஸ் முல்லர்.
இதனால் முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் நெதர்லாந்தை நெருக்கடிக்குள்ளாக்கியது ஜெர்மனி. பந்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்த அந்த அணி, 52-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோல் அடித்தது.
அந்த அணியின் லூகாஸ் வின்ட்ஃபெடர் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அணியை முன்னிலை பெறச் செய்தார். அடுத்த இரு நிமிடங்களிலேயே (54) பெல்ஜிய வீரர் மார்கோ மில்ட்காவ் அருமையான ஃபீல்டு கோலடிக்க ஜெர்மனி 3-1 என முன்னேறியது.
மறுபுறம் நெதர்லாந்து தனக்கு கிடைத்த 4 பெனால்டி வாய்ப்புகளையுமே வீணடித்தது. இறுதியாக ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் கிறிஸ்டோபர் பெனால்டி ஸ்ட்ரைக் மூலம் அற்புதமாக கோலடிக்க, பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
டிரா: இதனிடையே, மலேசியா-பாகிஸ்தான் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இன்றைய ஆட்டம்
டி பிரிவு
ஸ்பெயின்-நியூஸிலாந்து,
மாலை 5 மணி.
ஆர்ஜென்டீனா-பிரான்ஸ், 
இரவு 7 மணி.
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டி.டி.


 

More from the section

உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்
புரோ வாலிபால்: இறுதிச் சுற்றில் சென்னை ஸ்பார்டன்ஸ்
கணுக்கால் காயம்: இங்கிலாந்து தொடரில் இருந்து ஹர்மன்ப்ரீத் கெளர் விலகல்
ஒரு நாள் தொடர்: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது நியூஸி.
சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, பேயர்ன் முனிக் ஆட்டங்கள் டிரா