ஸ்பெஷல்

நாயகன் மீண்டும் வரான்!

15th Jun 2022 07:56 PM

ADVERTISEMENT


"அற்புதமான நான்கு வீரர்கள்" என்ற அடைப்புக்குள் ஜோ ரூட் பொருந்த மாட்டார் என்ற விமர்சனங்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு வந்தன. அதே விமர்சனங்கள் தற்போது வரத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்த முறை அந்த விமர்சனங்கள் வேற மாதிரி! காரணம் ஜோ ரூட்டின் செயல்பாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக வேற மாதிரி!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். முதன்முதலாக ஆகஸ்ட் 2015-இல் அவர் முதலிடத்தைப் பிடித்தார். இறுதியாக கடந்தாண்டு டிசம்பரில் முதலிடத்தில் இருந்தார். இதன்பிறகு, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் ரூட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார்.

ஜோ ரூட் இதுவரை மொத்தம் 163 நாள்கள் முதலிடத்தை வகித்திருக்கிறார்.

இவர் மீண்டும் முதலிடத்துக்கு வந்திருப்பது ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம், நல்லா வாழ்ந்த ஒருவன் சரிவை சந்திக்கும்போது அனைவருக்கும் அவன் மீது ஒருவகையிலான அன்பு வெளிப்படும். அப்படிப்பட்ட ஒருவன் சரிவிலிருந்து மீண்டு, மறுபடியும் வெற்றியாளனாகத் தலைதூக்கும்போது, அதிகம் மகிழ்ச்சியடைவது அவனைவிட கடினமான காலத்தில் அவன் மீது அன்பு காட்டியவர்களே.

ADVERTISEMENT

அப்படிப்பட்ட ஒரு வெற்றியாளனாகத்தான் ரூட் மீண்டு வந்துள்ளார்.

மறைந்த நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த தசாப்தத்தில் மிகப் பெரிய உச்சத்தை அடையப்போகும் நான்கு கிரிக்கெட் வீரர்கள் பெயரை 2014-இல் கணித்தார். அவர்களை "அற்புதமான நான்கு வீரர்கள்" என்ற அடைப்புக்குள் பொருத்தினார்.

அவர் முன்வைத்த நான்கு பெயர்கள் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட். இந்த நான்கு வீரர்களும் குரோவ் சொன்னதற்கேற்ப நாளுக்குநாள் தங்களது ஆட்டத்தை மெருக்கேற்றி, ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைக்கத் தொடங்கினர்.

ஆனால், இந்த நால்வரில் ஒருவர் மட்டும் இடையில் சரிவைச் சந்தித்தார். அவர் ஜோ ரூட்.

2018-க்கு முன்பு ஜோ ரூட்டின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 52.5 ஆக இருந்தது. 2018-இல் அவரது பேட்டிங் சராசரி 41.2 ஆகவும், 2019-இல் 37 ஆகவும் சரிந்தது. இதனால், அவரது ஒட்டுமொத்த பேட்டிங் சராசரி 48.4 ஆனது.

இதையும் படிக்கஇந்தியாவுக்கு காபா, இங்கிலாந்துக்கு டிரெண்ட் பிரிட்ஜ்: அட்டகாசமான வெற்றியை வழங்கிய பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் (விடியோ)

குறிப்பாக சதங்களை அடிப்பதில் ரூட் பெரிதளவில் சிரமப்பட்டார். ஒவ்வொரு மூன்றாவது டெஸ்ட் இன்னிங்ஸிலும் அவரால் அரைசதம் அடிக்க முடிந்ததே தவிர, அதைச் சதமாக மாற்ற அவரால் முடியவில்லை. அதே நேரத்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் சதங்களாக விளாசினர்.

இதனால், "அற்புதமான நான்கு வீரர்கள்" என்ற அடைப்புக்குள் ரூட்டுக்கு இனி இடமில்லை என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின.

ஆனால், 2021-க்குப் பிறகு காலம் அப்படியே நேர்மாறாக சுழலத் தொடங்கியது. கோலி, ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோருடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருந்த ரூட், 2021-க்குப் பிறகு, இவர்கள் மூவரையும் முந்தத் தொடங்கினார். தற்போது முந்தியும் விட்டார். டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து விட்டார்.

2021-க்குப் பிறகு, தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார் ஜோ ரூட். கடந்தாண்டு ஜனவரி 14-இல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டைச் சதத்தை விளாசி ரன் வேட்டையைத் தொடங்கிய ரூட் இன்னும் நிறுத்தியபாடில்லை. நியூசிலாந்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டம் வரை அவர் 10 சதங்களை விளாசியுள்ளார். அதேநேரத்தில் அற்புதமான நான்கு வீரர்களுள் மற்ற எவரும் ஒரு சதம்கூட அடிக்கவில்லை.

10 சதங்களில் 2 இரட்டைச் சதங்கள். 6 முறை 150-க்கு மேல் குவித்துள்ளார். அற்புதமான நான்கு வீரர்கள் என்பதற்கு ஜோ ரூட் பொருத்தமற்றவர் என மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த அதே விமர்சனங்கள் தற்போதும் வருகிறது. ஆனால், கடந்த முறை மற்ற மூன்று வீரர்களிடமிருந்து ரூட் பின்தங்கிப்போனார். இந்த முறை, மற்ற மூன்று வீரர்களை ரூட் பின்தங்க வைத்திருக்கிறார்.

ஓப்பீட்டளவில் ஜோ ரூட் அதிகம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஜோ ரூட் டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே அதிகம் விளையாடுகிறார். மற்ற மூவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகின்றனர். குறிப்பாக இவர்கள் மூவரும் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் முக்கியமான வீரர்களாகத் திகழ்கின்றனர். ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஐபிஎல் சீசனில் மட்டுமே விளையாடவில்லை. கேன் வில்லியம்சன் காயம் காரணமாகவே நிறைய ஆட்டங்களில் விளையாடவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலும் கரோனா தொற்று காரணமாக அவர் விளையாடவில்லை. மற்ற மூவர் பெரிதளவில் சாதிக்காமல் போனதற்கு இவை காரணங்களாக இருக்கலாம்.

ஆனால், பெரும் சரிவைச் சந்தித்து மீண்டெழுந்து வந்துள்ள ஜோ ரூட் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளத் தொடங்கிவிட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாயகன் மீண்டும் வரான்!

Tags : Joe Root
ADVERTISEMENT
ADVERTISEMENT