ஸ்பெஷல்

ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி: போராடி சாதித்த வட சென்னைப் பெண் பவானி தேவி

15th Mar 2021 01:47 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளா் என்ற சாதனையைப் படைத்து இந்திய விளையாட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார். 

சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூா்வ தரவரிசையின் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றாா். ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களைச் சோ்ந்தோா் டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிபெறுவதற்காக உலகத் தரவரிசையின் அடிப்படையில் இரு இடங்கள் இருந்தன. உலகத் தரவரிசையில் தற்போது 45-வது இடத்திலிருக்கும் பவானி தேவி, அதில் ஓா் இடத்தை உறுதி செய்துள்ளாா். வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி திருத்தப்பட்ட உலகத் தரவரிசை வெளியாகும்போது, பவானி தேவி ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றது அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அவா் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

பவானி தேவிக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் கூறியதாவது: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற பவானி தேவி, ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு போட்டியாளா் என்ற பெருமையை பெற்றுள்ளாா். அவருக்கு வாழ்த்துகள் என்றார். 

2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முயற்சித்து தோல்வியடைந்த பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்காகப் பயிற்சியாளா் நிகோலா ஜனோடியின் மேற்பாா்வையில் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவருடைய பல வருட முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் ஓர் விடிவுகாலம் வந்துள்ளது.

அனந்த சுந்தரராமன் - சிஏ ரமணியின் மகளாக 1993 ஆகஸ்ட் 27-ல் சென்னையில் பிறந்தவர் பவானி தேவி. இவர் 5-வது குழந்தை. இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் உள்ளார்கள்.  தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது 2004-ல் வாள்வீச்சு விளையாட்டின் மீது ஆர்வம் வந்து, அதில் ஈடுபட ஆரம்பித்தார் பவானி தேவி. 6-வது படிக்கும்போது, ஆறு விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யவேண்டும் என்கிற நிலை வந்தபோது வாள்வீச்சைத் தேர்வு செய்தார் பவானி தேவி. காரணம், மற்ற விளையாட்டுகளை இதர மாணவிகள் தேர்வு செய்துவிட்டதால் இதுதான் அவருக்குக் கிடைத்தது. புதிய விளையாட்டு என்பதால் ஆர்வத்துடன் அதைக் கற்றுக்கொண்டார். காலை, மாலை என இரு வேளைகளில் சென்னை நேரு மைதானத்தில் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு பள்ளிக்கும் சென்று வந்துள்ளார். 

2004 முதலே தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தார் பவானி தேவி. பத்தாவது முடித்த பிறகு கேரளாவில் அதிக நிதியுதவி கிடைத்ததால் அங்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்து கேரளா சார்பாகத் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றார். பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பி, சென்னையில் எம்பிஏ படித்து முடித்தார். நிதியுதவி கிடைக்காததால் பல போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. ஆனாலும் என் அம்மா விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய் என எனக்கு ஊக்கம் அளித்து வந்தார். கடன் வாங்கி என்னைப் போட்டிகளில் பங்கேற்க வைத்தார் என்கிறார் பவானி தேவி.

2014-ல் பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2015-ல் மங்கோலியாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார். காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார் பவானி தேவி. ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்குத் தனியாகச் செல்லும்போது நிறைய சிக்கல்களைச் சந்தித்துள்ளேன். ஆங்கிலமும் சரியாகப் பேசவராது என்பதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் இருந்தன. மகளை ஏன் தனியாக வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள் என்று என் பெற்றோரிடம் பலர் கேட்டுள்ளார்கள். ஆனாலும் நான் முயற்சியைக் கைவிடவில்லை என்கிறார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பவானி தேவியின் வளர்சிக்கு முக்கியப் பங்களிப்பு அளித்துள்ளார். 2015 அக்டோபரில் பெல்ஜியத்தில் நடந்த வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். 2016 ஜனவரியில் தலைமைச் செயலகத்தில் ஊக்கத்தொகையாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலையினை அவர் வழங்கினார். வெனிசூலா-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்க வேண்டுமென முதல்வர் ஜெயலலிதாவுக்கு பவானி தேவி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பவானி தேவிக்கு ரூ. 3 லட்சத்தை உடனடியாக வழங்கிட ஜெயலலிதா உத்தரவிட்டார். தன்னுடைய இணையத்தளத்தில் ஜெயலலிதா செய்த உதவி பற்றி குறிப்பிட்டு அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் பவானி தேவி. 

2015-ல் கோ ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன், பவானி தேவியை 15 விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்து நிதியுதவி அளித்தது. விளையாட்டை விட்டு விலகிவிடலாமா என நினைத்திருந்த நேரத்தில் இந்த உதவி கிடைத்தது என்கிறார். 

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சுற்று போட்டியான ஆசியா-ஓசியானா போட்டி சீனாவில் நடைபெற்றது. இதில், பவானி தேவி காலிறுதியில் தோற்றுப்போனார். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அவர் இழந்தார்.

இதுகுறித்து 2016 ஏப்ரலில் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியதாவது:

மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதுதான். வெற்றிபெறுகிறவரை முயற்சி செய்.

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் எனக்கானது அல்ல. இதற்காக 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நான் தகுதி பெறமாட்டேன் என்று அர்த்தமல்ல. 

ஆசியா-ஓசியானா போட்டியின் காலிறுதியில் தோற்றுப் போயிருக்கிறேன். முயற்சி செய்தால் நிச்சயம் இலக்கை அடையமுடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன். இந்தச் சமயத்தில் என் பயிற்சியாளர்கள், கோ பவுண்டேஷன் நண்பர்கள் மற்றும் இதற்காக எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. இலக்கு 2020 என்று குறிப்பிட்டார். அப்போது சொன்னது போலவே 2021 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு பவானி தேவி தகுதி பெற்றுள்ளார்.

2017 பிப்ரவரி மாதம், பவானி தேவிக்கு நிதியுதவியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: தலைசிறந்த ஆண்-பெண் விளையாட்டு வீரர்கள், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி, வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மாநில அரசே அளித்து வருகிறது. அதன்படி, இந்தத் திட்டத்தில் வாள்வீச்சு வீராங்கனையான சி.ஏ. பவானி தேவி சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரையில், அவருக்கு ரூ.22.04 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பை போட்டி, மெக்ஸிகோவில் நடந்த கிராண்ட்ப்ரீ போட்டிகளில் பங்கேற்றதற்கான செலவுத் தொகையான ரூ. 5.43 லட்சம் காசோலையாக அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. 

2017 மே மாதம், ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அடைந்தார்.  இதற்காக அவருக்குப் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். கிரிக்கெட் வீரர் ஷேவாக், விளையாட்டுத்துறை அமைச்சர் என முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் சமூகவலைத்தளங்களில் பவானி தேவியை வாழ்த்தினார்கள்.  

 

2018 ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில்பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2019 செப்டம்பரில் பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை பெற இந்த வெற்றி ஊக்கம் தரும் என்று அப்போது பேட்டியளித்தார் பவானி தேவி. 

இன்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளா் என்கிற பெருமையை அடைந்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

நம் ஊரில் விளையாட்டு வீரராகக் காலம் தள்ளுவது மிக மிகக் கடினம். ஒருகட்டத்தில் மனச்சோர்வடைந்து அரசு வேலையிலோ பயிற்சியாளர் பணியிலோ கரைந்துவிடுவார்கள். ஆனால் பவானி தேவி தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். அதுவும் பலரும் கேள்விப்படாத வாள்வீச்சு விளையாட்டில். நல்ல வாய்ப்புகளுக்காகவும் நிதி உதவிக்காகவும் அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். தனியாளாக வெளிநாடுகளுக்குச் சென்று, விடாமல் பயிற்சிகள் எடுத்ததற்கு இப்போது பலன் கிடைத்துவருகிறது. சர்வதேச அளவில் முக்கியமான வாள்வீச்சு வீராங்கனையாகவும் சர்வதேசப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் பெற்ற மற்றும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனையாகவும் முன்னேற்றம் கண்டுள்ளார். 

சாய்னா நேவால், பிவி சிந்து, சானியா மிர்சா, தீபா கர்மாகர் என உலக அரங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்திய வீராங்கனைகளின் வரிசையில் பவானி தேவியும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளார். அவருடைய அடுத்த சாதனைகளுக்கு இது ஓர் தொடக்கமாக இருக்கட்டும்.
 

Tags : Tokyo Olympics Bhavani Devi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT