ஸ்பெஷல்

2019 கொல்கத்தா பகலிரவு டெஸ்டுக்குப் பிறகு சதமடிக்க முடியாமல் தவிக்கும் விராட் கோலி!

24th Feb 2021 11:02 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்டில் சதமடித்த விராட் கோலி அதன்பிறகு 34 இன்னிங்ஸில் விளையாடியும் சதமடிக்க முடியாமல் உள்ளார். இதனால் இந்தியாவில் நடைபெறும் 2-வது பகலிரவு டெஸ்டில் அவர் சதமடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் இன்று முதல் நடைபெறுகிறது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சிக்கவுள்ளன. முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள சா்தாா் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

ADVERTISEMENT

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட், 2019-ல் கொல்கத்தாவில் நடைபெற்றது. வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். அதன்பிறகு அவர் 34 இன்னிங்ஸில் விளையாடியும் ஒரு சதம் கூட எடுக்க முடியாமல் உள்ளார். 

கொல்கத்தா டெஸ்டுக்கு பிறகு 5 டெஸ்டுகளில் விளையாடி 3 அரை சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 அரை சதங்களும் டி20 கிரிக்கெட்டில் 3 அரை சதங்களும் எடுத்துள்ளார். கொல்கத்தா டெஸ்டுக்குப் பிறகு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார். அந்த ஒருமுறை மட்டுமே அவர் 90 ரன்களைக் கடந்தார். கடந்த 34 இன்னிங்ஸில் 12 அரை சதங்கள் எடுத்தும் கோலியால் சதத்தை நெருங்க முடியாதது ரசிகர்களையும் மட்டுமல்லாமல் கிரிக்கெட் நிபுணர்களையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அடிக்கடி சதமடித்து அசத்தும் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவே அனைவரும் கருதுகிறார்கள். இந்த வருடம் அவர் மேலும் பல சதங்கள் அடிப்பார் என்றும் பலரும் ஆர்வத்துடன் உள்ளார்கள். 

டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் ஆட்டத்தில் 43 சதங்களும் எடுத்துள்ள விராட் கோலி, இந்தியாவில் நடைபெறும் 2-வது பகலிரவு டெஸ்டிலும் சதமடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் ஆர்வம் நிறைவேறுமா?

Tags : Kohli Bangladesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT