ஸ்பெஷல்

கடுமையாகப் பயிற்சி செய், உலகம் முழுக்க உன் ஆட்டத்தைப் பார்க்கும்: சச்சினின் இளமைக் காலக் குறிப்புகள்!

எழில்

சச்சின் டெண்டுல்கர் தனது 48-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சச்சினின் சுயசரிதையான பிளேயிங் இட் மை வே-யில் பல நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார் சச்சின். அவற்றிலிருந்து சில பகுதிகள்:

உணர்வுபூர்வாக ’பிளேயிட் இட் மை வே’ நூலை ஆரம்பிக்கிறார் சச்சின். ஆரம்பத்திலேயே ஒரு குறிப்பு கொடுத்துவிடுகிறார். யாரும் தன் சுயசரிதையில் எல்லாச் சம்பவங்களையும் எழுதிவிடமுடியாது.

”என் இறுதியுரை நிகழ்த்தியபிறகு மிகவும் உணர்வுபூர்வமாக என் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, விராட் கோலி என்னிடம் வந்து, ”கடைசியாக பிட்ச் அருகே செல்வதற்கு ஞாபகப்படுத்த சொன்னீர்கள்” என்றார். நான் மறக்கவில்லை. ஆனால் அந்தத் தருணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். அதுதான் என்னை வளர்த்து. இத்தனை  ஆண்டு காலமாக நன்றாகப் பார்த்துக்கொண்ட 22 யார்ட் பிட்ச்சுக்கு நான் செல்லும் கடைசி தருணம். பிட்ச் முன்பு சென்றபோது என் தொண்டை அடைத்துக்கொண்டது. 15 நொடிகள்தான் பிட்ச் அருகே இருந்தேன். இத்தனை நாளாக என்னைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி என்று சொல்லி வணங்கினேன். கடைசியாக பெவிலியனுக்குச் சென்றபோது எல்லா ஞாபகங்களும் நினைவில் வந்து மோதின. என் பயிற்சியாளர் அச்ரேக்கரிடம் முதல் முதலாக பயிற்சி எடுத்துக்கொண்டது முதல் கடைசி டெஸ்டில் 74 ரன்கள் அடித்தது வரை.”

முதல் அத்தியாயம் மிக அழகாக சச்சினின் தந்தை அவருக்குச் சொன்ன நீண்ட அறிவுரையுடன் தொடங்குகிறது. சச்சின் இந்திய அணிக்குத் தேர்வானவுடன் சொன்ன அறிவுரையாகவே அது உள்ளது.

“மகனே, நீ இந்திய அணிக்குத் தேர்வானாலும் அது உன் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். ஒரு மனிதன் 70, 80 வருடங்கள் வாழ்வதாக இருந்தால், எத்தனை வருடங்கள் விளையாட்டில் ஈடுபடமுடியும்? 20 அல்லது 25? (சச்சின் 24 வருடங்கள் ஆடினார்). அப்படியும் உன் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகள், விளையாட்டுக்கு வெளியே தான் இருக்கின்றன. நீ பணிவுடன்  நடந்துகொண்டால் மக்கள் உன்மீது அன்பு வைப்பார்கள். மரியாதை கிடைக்கும். சச்சின் சிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதை விடவும் நல்ல மனிதன் என்று பெயர் எடுப்பதையே நான் விரும்புகிறேன்.”

சச்சினின் புத்தகத்தில் உள்ள கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகள் ஊடகங்களில் வெளிவந்துவிட்டன. சச்சின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு நிகராக சுவாரசியம் கொண்டது சச்சினின் இளமை வாழ்க்கை. அதன் தொகுப்பு இதோ.

”என் அம்மா உலகின் மிகச்சிறந்த சமையல் நிபுணர். எனக்காக அற்புதமான மீன் மற்றும் இறா உணவுகளைச் செய்து தருவார். அருமையான உணவு சாப்பிட்டு அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வேன். என்னைத் தூங்க வைக்க அம்மா அழகாகப் பாட்டு பாடுவார்.

எனக்கு முதல்முதலில் கிரிக்கெட் பேட் வாங்கித் தந்தவர் என் அக்கா சவீதா. எனக்கு 5 வயது இருக்கும்போது காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றவர் அங்கிருந்து ஒரு கிரிக்கெட் பேட் வாங்கித் தந்தார். அக்காவுக்குத் திருமணம் ஆனபோது, அக்கா புகுந்த வீடு செல்லவேண்டாம். பதிலுக்கு, அக்காவின் கணவர் எங்கள் வீட்டில் வந்து வசிக்கட்டும். என்று சொல்லியிருக்கிறேன். அக்கா வீட்டை விட்டுச் சென்றது மிகவும் கஷ்டமாக இருந்தது.

1980களில் மும்பையில் சைனீஸ் உணவு மிகவும் பிரபலமாகிக்கொண்டு வந்தது. அதனால் எங்கள் காலனி நண்பர்கள் அனைவரும் ஆளுக்குப் பத்து ரூபாய் எடுத்துக்கொண்டு ஒரு உணவகத்துக்குச் சென்றோம். சிக்கன் மற்றும் ஸ்வீட்கார்ன் சூப் ஆர்டர் செய்தோம். ஆனால், அந்தக் குழுவில் நான் தான் சிறியவன் என்பதால் எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை. பெரிய அண்ணாக்கள் அனைத்தையும் சாப்பிட்டு எனக்கு ஒவ்வொரு உணவிலும் இரண்டு ஸ்பூன்கள்தான் தந்தார்கள்.

என் நண்பர்கள் எல்லோரிடமும் சைக்கிள் இருந்ததால் நானும் ஒன்று கேட்டேன். செலவுகளை வைத்துப் பார்க்கும்போது மும்பை போன்ற நகரில் நான்கு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது எளிதல்ல. குடும்பச் சூழல் புரியாமல் சைக்கிள் வேண்டும் என்று அடம்பிடித்தேன். உடனே கிடைக்காததால் ஒருவாரம் வெளியே விளையாட செல்லவில்லை. என் கோபத்தை வெளிப்படுத்த தனியாக பால்கனியில் நின்றுகொள்வேன். நாங்கள் நாலாவது மாடியில் குடியிருந்தோம். கோபத்தில் நின்ற சமயத்தில், மாடியின் பால்கனியில் உள்ள கிரில்-லில் தலையை விட்டு மேலே பார்க்க எண்ணியபோது வசமாக தலை மாட்டிக்கொண்ட்து. தலையைத் திரும்ப வெளியே எடுக்கமுடியவில்லை. 30 நிமிடங்கள் ஆனபின்பும் அப்படியே தான் இருந்தேன். பிறகு, தலையில் நிறைய எண்ணெய் தடவி, என் அம்மாதான் வெளியே எடுத்தார். இவ்வளவு நடந்தபிறகு, என் அப்பா வேறுவழியில்லாமல் எனக்கு சைக்கிள் வாங்கித் தந்தார். செலவை எப்படி சமாளித்தார் என்று அப்போது நான் எண்ணவில்லை. ஆனால் சைக்கிள் வாங்கிய சில மணி நேரங்களில் ஒரு காய்கறி வண்டியுடன் மோதி கீழே விழுந்து நன்கு அடிபட்டுக்கொண்டேன். கண்ணுக்கு அருகே காயம் ஏற்பட்டதால் எட்டு தையல்கள் போடவேண்டியிருந்தது. காயத்திலிருந்து மீண்டபிறகு ஸ்லோ சைக்கிளில் வித்தகன் ஆனேன். பிறகு சைக்கிளை ஒரு சக்கரத்தில் ஓட்ட கற்றுக்கொண்டு என் நண்பர்களை ஆச்சரியப்படுத்தினேன். இதனால் சில சமயம் காயங்கள் ஏற்படும். இதை வீட்டில் சொல்லமாட்டேன். ஆனால் என் அப்பா நான் தூங்கும்போது எங்கெங்கு காயங்கள் ஏற்பட்டன என்று சோதித்துப் பார்ப்பார்.

10 வயதில் எனக்கு பிரபல டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ மீது அதிகப் பிரியம் ஏற்பட்டது. அவரைப் போல தலையில் ஹெட்பேண்ட் கட்டிக்கொண்டு ஸ்டைல் செய்வேன். ஒருசமயம் கிரிக்கெட்டுக்குப் பதிலாக டென்னிஸூக்கு முக்கியத்துவம் தரலாமா என்றுகூட நினைத்தேன். அண்ணன் அஜீத்துக்கு என் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் பிரியங்கள் பற்றி தெரியும். நான் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்து ஒழுங்காக பயிற்சியளித்தால் இன்னும் மேலே செல்லமுடியும் என்று எண்ணியிருந்தார். என் வீட்டு மாட்டியில் டென்னிஸ் ராக்கெட் மற்றும் கிரிக்கெட் பேட் இரண்டையும் வைத்து ஆடச்சொல்லி எதில் நான் அதிகம் சந்தோஷமாக, செளகரியமாக இருக்கிறேன் என்று கவனித்தார். கிரிக்கெட்டில் உள்ள என் ஆர்வத்தைக் கண்டுபிடித்தார்.

விடுமுறை சமயங்களில் மரத்தின் மீது ஏறி கீழே விழுந்து அடிக்கடி காயம் ஆனதால், இதுபோன்ற குறும்புகளில் ஈடுபடாமல் இருக்கவும் என் விடுமுறை தினங்களை ஒழுங்காக செலவழிக்கவும் 11 வயதில் என்னை பயிற்சியாளர் அச்ரேகர் கேம்பில் சேர்த்துவிட்டார் அஜீத்.

முதல் வலைப்பயிற்சியில் நான் சரியாக ஆடவில்லை. இதில் தேர்வானால் தான் அச்ரேகர் கேம்ப்பில் என்னால் சேரமுடியும். ஆனால், நான் சரியாக ஆடாததால், இவன் சிறியவனாக இருக்கிறான். இன்னும் சிறிதுநாள் கழித்து அழைத்து வாருங்கள் என்று அஜீத்திடம் அச்ரேகர் சார் சொன்னார். அச்ரேகர் சார் நான் ஆடியதைக் கவனித்தால் படபடப்பாகி நான் அப்படி ஆடியதாகவும், நீங்கள் சற்று தொலைவில் இருந்து கவனியுங்கள். அவன் பயமில்லாமல் நன்றாக ஆடுவான். இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று சாரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் அஜீத். அதேபோல என் கண்ணுக்குத் தெரியாமல் அச்ரேகர் சார் என் ஆட்டத்தைக் கவனித்தபோது என்னால் நன்றாக ஆட முடிந்தது. இதைப் பார்த்தபிறகு அவருடைய கேம்ப்பில் எனக்கு இடம் கிடைத்தது. இரண்டு மாதங்கள் கழித்து, என் பேட்டிங் அவரைக் கவர்ந்துவிட்ட்து. அவர் பயிற்சியாளராக இருக்கும் ஷாரதாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளிக்கு மாற்றலாகி, அங்கிருந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்தால் நன்றாக வருவேன் என்று என் தந்தையிடன் சொன்னார். என் சம்மத்த்துடன் அந்த மாற்றம் நடந்தது.

புனேவில் நடந்த ஒரு மேட்சில் நான் ரன் அவுட் ஆனேன். அழுதுகொண்டே பெவிலியனுக்குத் திரும்பினேன். இதையடுத்து U15 மேற்கு மண்டல அணிக்கு நான் தேர்வாகவில்லை. ஒரு பந்தைக் கூட சந்திக்காத  என் அணி வீரர்கள் சிலர் தேர்வானார்கள். கொண்டு போன காசெல்லாம் செலவாகிவிட்டதால் சிவாஜி பார்க்கிலிருந்து என் அத்தை வீட்டுக்கு அழுதபடி நடந்து சென்றேன்.

நான் பேருந்தில் சென்றதுண்டா என்று கேட்பவர்களுக்கு, நான் ஷாரதாஸ்ரம் பள்ளியில் சேர்ந்த முதல் வருடம் என் கிட்பேக்குகளைத் தூக்கிக்கொண்டு தினமும் நான்குமுறை ரயில், பேருந்துகளில் பயணம் செய்துள்ளேன். பெரிய கிட்பேகைப் பார்த்து பேருந்து நடத்துநர்கள் மிகவும் கடுப்பாவார்கள். கூடுதல் டிக்கெட் வாங்கச் சொல்வார்கள். பந்த்ராவிலிருந்து சிவாஜி பார்க் வந்து பிறகு பள்ளிக்குச் செல்வது நேரச் செலவு மற்றும் என் உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதால் ஒரே வருடத்தில் நான் சிவாஜி பார்க் அருகில் உள்ள என் அத்தை மற்றும் மாமா வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்ல ஏற்பாடானது. நான்கு வருடங்கள் என் அத்தை மாமா வீட்டிலிருந்துதான் கிரிக்கெட் பயிற்சிக்கும் பள்ளிக்கும் சென்று வந்தேன். கிட்டத்தட்ட ஒருநாள் தவறாமல் என் பெற்றோர் வேலையிலிருந்து வந்து என்னை பார்த்துவிட்டுச் செல்வார்கள்.

ஒரு மேட்சில் நான் அவுட் ஆன விதம் மறக்கமுடியாது. அந்த ஆஃப் ஸ்பின்னர், காது கேளாதவர். அவர் வீசிய பந்தை ஏறி அடிக்க முயலும்போது தவற விட்டுவிட்டேன். அப்போது கீப்பர் ஸ்டம்பிங் செய்வதற்குத் தடுமாறினார். உடனே நொடியில் பெளலரின் முகம் மாறியது. இதைக் கண்ட நான் மீண்டும் கிரிஸூக்குச் செல்லாமல் முன்னே நடக்க ஆரம்பித்தேன். இதனால் என்னைச் சுலபமாக ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கினார் கீப்பர். இதைப் பரிதாபத்துக்காக செய்யவில்லை. அது உண்மையிலேயே அருமையாக வீசப்பட்ட பந்து.

ஒருமுறை வாண்கடே மைதானத்தில் என் பள்ளி ஆடுகிற மேட்சைப் பார்க்க முடிவெடுத்தேன். ஆனால், அச்ரேகர் சார் எனக்காக ஒரு பயிற்சி ஆட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்துகொள்ளாமல் வாண்கடே சென்றால், அவர் அங்கு இருந்தார். என்னைப் பார்த்துவிட்டு மிகவும் கோபமானார். ”மற்றவர்கள் விளையாடுவதை ஏன் பார்க்கிறாய், கடுமையாக பயிற்சி எடுத்தால் நாளை உலக முழுக்க நீ ஆடும் மேட்சுகளை வந்து பார்ப்பார்கள்” என்று கோபத்துடன் அறிவுரை கூறினார்.

ஒவ்வொரு சுற்றுப் பயணம், தொடரின் போதும் நான்கு இடங்களுக்குத் தவறாமல் செல்வேன். மும்பையிலுள்ள இரண்டு கோயில்கள் (சிவாஜி பார்க்கிலுள்ள கணேஷ் கோயில், பிரபாதேவியிலுள்ள சித்திவிநாயக் கோயில்), என்னுடைய அத்தை மற்றும் மாமாவின் வீடு மற்றும் என் பயிற்சியாளர் அச்ரேகர் சார்.

நான் ஆடிய முதல் சர்வதேச அளவிலான கிரிக்கெட், பாகிஸ்தானுக்காக! இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய கண்காட்சி ஆட்டம் ஒன்றில், பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஓய்வெடுக்க சென்றதால் மாற்று ஏற்பாடாக பாகிஸ்தான் அணிக்காக நான் ஃபீல்டிங் செய்ய சென்றேன். கபில்தேவ் அடித்த ஒரு ஷாட்டை எவ்வளவு முயன்றும் என்னால் கேட்ச் பிடிக்கமுடியவில்லை. அன்று நான் பாகிஸ்தானுக்காக ஃபீல்டிங் செய்ததை இம்ரான் கான் ஞாபகம் வைத்திருப்பாரா என்று தெரியவில்லை.

16 வயதில் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் நான் தேர்வானபோது, நான் மைனர் என்பதால் என்னால் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடமுடியவில்லை. எனக்குப் பதிலாக என் அண்ணன் அஜீத் கையெழுத்து போட்டார்.

ரஞ்சி மற்றும் இராணி டிராபி போட்டிகளில் செஞ்சுரி அடித்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடும்போது என்னால் பந்தைத் தொடவே முடியவேயில்லை. தடுமாறினேன். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை நன்கு உணர்ந்தேன். பாகிஸ்தான் தொடரின் 4வது டெஸ்டில் வகார் யூனுஸ் பந்தில் சரியாக ஆடாததால் பந்து என் ஹெல்மட்டில் பட்டு பிறகு மூக்கைப் பதம் பார்த்தது. மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. உடனே என் அருகில் வந்த மியாண்டட், ”நீ மருத்துவமனை செல்ல்லவேண்டும். உன் மூக்கு உடைந்துவிட்டது” என்றார். பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பேனர் இவ்வாறு இருந்தது. ’வீட்டுக்குப் போ குழந்தை. போய் பால் குடி’ ஆனால் நான் தொடர்ந்து ஆட உறுதியாக இருந்தேன். வக்கார் வீசிய அடுத்த இரு பந்துகளில் பவுண்டரிகள் அடித்தேன்.

மழையால் ஒருநாள் போட்டி ஒன்று பாதிக்கப்பட, இந்தியாவும் பாகிஸ்தானும் ரசிகர்களுக்காக 20-20 கண்காட்சி போட்டி ஒன்று ஆட முடிவெடுத்தன. புதிதாக வந்த முஷ்டாக் அஹமது பந்தில் நான் இரு சிக்ஸர்கள் அடிக்க, அனுபவமிக்க அப்துல் காதிர் என்னிடம் வந்து, ”புதிய வீரரின் பந்தில் அடிப்பதில் ஒரு விஷயமும் இல்லை. திறமை இருந்தால் என் பந்துகளை அடிக்க முயற்சி செய்” என்றார். ”நீங்கள் பெரிய பெளலர். உங்கள் பந்துகளை அடிக்க அனுமதிக்கமாட்டீர்கள்” என்றேன். அடுத்து அப்துல் காதர் வீசிய ஓவரில், 4 சிக்ஸர்கள் உள்பட 28 ரன்கள் அடித்தேன்.

நான் சர்வதேச வீரராக வளர்ந்துகொண்டிருந்தபோது என் சொந்த வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடந்தது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நான் மும்பை திரும்பியபோது விமானநிலையத்தில் அழகான பெண் ஒருவரைக் கண்டேன். இருவர் கண்களும் அப்போது சந்தித்துக்கொண்டன. அதன்பிறகு அவர் (அஞ்சலி) என்னைப் பின் தொடர்ந்தது மட்டுமில்லாமல் நான் மிகவும் க்யூட்டாக இருக்கிறேன் என்று கத்தினார். எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. விமானநிலையத்துக்கு வெளியே என் அண்ணன்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். என் நண்பன் என்னிடம் வந்து, ஒரு அழகான பெண் உன்னிடம் பேசமுயல்கிறாள் என்றான். அண்ணகள் இருக்கும்போது என்னால் பேசமுடியாது என்றேன். பிறகு அவர் தோழியின் உதவியுடன் என் வீட்டு டெலிபோன் எண்ணை வாங்கிக்கொண்டார். அதிர்ஷ்டவசமாக அவருடைய அழைப்பை அன்று எடுத்தேன்.

விமான நிலையத்தில் பார்த்த பெண் என்று அறிமுகப்படுத்தி சந்திக்கமுடியுமா என்று கேட்டார். நான் விளையாடுகிற கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் சந்திக்கலாம் என்று சொன்னேன். அவர் நம்பமுடியாமல் நான் அன்று என்ன உடை அணிந்திருந்தேன் என்று கேட்டார். ஆரஞ்ச் டி ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் என்று சொன்னேன். என்னுடைய 21வது வயதில் எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்றுவரை அஞ்சலியை அஞ்சலி என்றோ அஞ்சா என்றோ அழைத்ததேயில்லை. இத்தனை வருடங்களாக அவரை எப்படி அழைக்கவேண்டும் என்று கூட தெரியவில்லை. என் குறைகளுக்கு மத்தியிலும் நான் ஏறிச் செல்லும் எல்லாப் படிகளிலும் எனக்காக அவர் இருக்கிறார்.”  

நன்றி - ’பிளேயிட் இட் மை வே’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT