ஸ்பெஷல்

48-வது பிறந்த நாள்: சச்சினின் மகத்தான 48 சாதனைகள்

24th Apr 2021 10:00 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

சச்சின் டெண்டுல்கர் தனது 48-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சச்சின் பிறந்த நாளுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.

சச்சினின் மகத்தான 48 சாதனைகளைக் காணலாம்.

*

ADVERTISEMENT

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சச்சின். 2008-ல் லாராவின் 11,953 ரன்களைக் கடந்து இந்தச் சாதனையை எட்டினார். மொத்தமாக 15,921 ரன்கள்.

2. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டைச் சதம் எடுத்த வீரர் சச்சின்.

3. ஒருநாள் அதிக சதங்கள் (49), அதிக தடவை 50+ ரன்கள் (145) எடுத்தவர் சச்சின்.

4. ஒரு வருடத்தில் அதிக சர்வதேச ரன்கள் (1894) எடுத்த வீரர் சச்சின். 1998-ல் இந்தச் சாதனையைப் படைத்தார்.

5. 1998-ல் 9 சதங்கள் எடுத்தார் சச்சின். ஒரு வருடத்தில் அதிக சதங்கள் எடுத்த வீரரும் சச்சின் தான்.

6. டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 10,000 ரன்கள் எடுத்த வீரர்கள் என்கிற பெருமை சச்சின், லாராவுக்கு உண்டு. இருவரும் 195-வது இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டினார்கள்.

7. சச்சின் விளையாடிய காலத்தில் டெஸ்ட் தகுதி பெற்ற அனைத்து நாடுகளுக்கும் எதிராகச் சதமடித்துள்ளார்.

8. தனது 169-வது டெஸ்டை இலங்கைக்கு எதிராக விளையாடினார் சச்சின். அப்போது ஸ்டீவ் வாஹ்-கின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். மொத்தமாக 200 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.

9. டெஸ்டில் 15,921 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார் சச்சின். இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர், சச்சின் தான். மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் 30,000 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே.

10. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்த ஒரே வீரர் சச்சின். அதேபோல டெஸ்டில் (51), ஒருநாள் கிரிக்கெட்டில் (49) அதிக சதங்கள் எடுத்த வீரரும் சச்சின் தான்.

11. அதிக டெஸ்ட் (200), ஒருநாள் (463) ஆட்டங்களில் விளையாடிய வீரர் சச்சின்.

12. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தடவை (20) 150 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் சச்சின்.

13. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார் சச்சின்.

14. ஒரு வருடத்தில் 1000 டெஸ்ட் ரன்களை 6 தடவை எடுத்த ஒரே வீரர் சச்சின். (1997, 1999, 2001, 2002, 2008, 2010)

15. 17 வயதில் (17 வருடம் 197 நாள்கள்) டெஸ்ட் சதமடித்தார் சச்சின். இளம் வயதில் டெஸ்ட் சதமடித்த இந்திய வீரர்.

16. டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினும் டிராவிடும் 20 தடவை 100+ ரன்கள் கூட்டணி அமைத்து உலக சாதனை படைத்துள்ளார்கள்.

17. உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் எடுத்த 2278 ரன்கள் ஒரு சாதனை.

18. உலகக் கோப்பைப் போட்டிகளில் 6 சதங்களும் 21 அரை சதங்களும் எடுத்துள்ளார். இது ஒரு சாதனை.

19. 2003 உலகக் கோப்பைப் போட்டியில் அசுர சாதனை செய்தார் சச்சின். 7 அரை சதங்களுடன் 673 ரன்கள் எடுத்தார்.

20. சச்சினும் பாகிஸ்தானின் மியாண்டட்டும் அதிகபட்சமாக 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

21. டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதங்கள் எடுத்த ஒரே வீரர், சச்சின். மொத்தமாக 51 சதங்கள் எடுத்துள்ளார்.

22. டெஸ்டிலும் (72) ஒருநாள் கிரிக்கெட்டிலும் (234) இந்திய அணியின் அதிக வெற்றிகளில் பங்கேற்றவர் சச்சின்.

23. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து இந்திய அணி பெற்ற வெற்றிகளின்போது அதிக ரன்கள் எடுத்த வீரர், சச்சின். 17,113 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சச்சினின் 100 சதங்களில் 53 சதங்களால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோலி. 14,409 ரன்கள், 48 சதங்கள்.

24. ஒருநாள் கிரிக்கெட்டில் 99 தடவை 100+ ரன்கள் கூட்டணி அமைத்துள்ளார் சச்சின். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தடவை 100 ரன்கள் கூட்டணி வைத்த வீரர் என்கிற பெருமை சச்சினுக்கு உண்டு.

25. 51 டெஸ்ட் சதங்களில் 22 சதங்களை இந்தியாவிலும் மீதமுள்ள 29 சதங்களை வெளிநாட்டிலும் எடுத்தவர் சச்சின். வெளிநாட்டில் அதிக சதம் எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.

26. ஒருநாள் கிரிக்கெட்டில் 90 வெவ்வேறு விதமான மைதானங்களில் விளையாடியுள்ளார் சச்சின். இதுவும் ஒரு சாதனை.

27. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6707 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இன்னொரு நாட்டுக்கு எதிராக இவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை.

28. 20 வயதுக்கு முன்பே 5 டெஸ்ட் சதங்களை எடுத்துவிட்டார் சச்சின்.

29. ஒரு நாட்டுக்கு எதிராக அதிக சதங்கள் எடுத்தவர், சச்சின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள் எடுத்துள்ளார்.

30. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்தவர் சச்சின். 2016 பவுண்டரிகள்.

31. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்தவர் சச்சின். இரட்டைச் சதம் அடித்தபோது 25 பவுண்டரிகள் அடித்தார்.

32. 26 தடவை சச்சினும் கங்குலியும் 100+ ரன்கள் கூட்டணி அமைத்துள்ளார்கள். இதில் தொடக்க வீரர்களாக 21 தடவை. இரண்டுமே சாதனை தான்.

33. சச்சின் - கங்குலி கூட்டணி மொத்தமாக 8227 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக 6609 ரன்கள். இரண்டுமே சாதனை தான்.

34. அதித தடவை ஆட்ட நாயகன் விருதுகளை (62) வென்றுள்ளார் சச்சின். உலகக் கோப்பைப் போட்டியிலும் அதிக தடவை ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்றவர் சச்சின். 9 தடவை விருதுகளை வென்றுள்ளார்.

35. அதிக தடவை தொடர் நாயகன் விருதுகளை (15) வென்றவர் சச்சின்.

36. 1990 முதல் 1998 வரை தொடர்ச்சியாக 185 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் சச்சின். இது ஒரு சாதனை.

37. ஒரு வருடத்தில் 7 தடவை ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார் சச்சின். (1994, 1996, 1997, 1998, 2000, 2003, 2007)

38. 15,000+ ஒருநாள் ரன்களும் 150+ ஒருநாள் விக்கெட்டுகளும் எடுத்த வீரர் என்கிற தனித்துவ சாதனை சச்சின் வசம் உண்டு.

39. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று தடவை 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தடவை (17) 90களில் ஆட்டமிழந்த வீரரும் சச்சின் தான்.

40. டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்காமல் அதிக தடவை 90+ ரன்களை எடுத்த வீரர்கள் - சச்சின், ஸ்டீவ் வாஹ், டிராவிட். 10 தடவை.

41. எந்த வயது, எந்த வகையிலான கிரிக்கெட்டிலும் ஒரு கூட்டணியாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் சச்சினும் காம்பிளியும் தான். ஷாரதாஷ்ரம் பள்ளிக்காக செயிண்ட் சேவியர் அணிக்கு எதிராக 664 ரன்கள் எடுத்தார்கள். சச்சின் 326 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

42. ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை ஆகிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே சதமடித்த ஒரே வீரர், சச்சின்.

43. 1990-91-ல் யார்க்‌ஷையர் அணிக்காக விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் சச்சின்.

44. 2014-ல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரரும் இளையவரும் சச்சின் தான்.

45. சச்சினின் தவறு இல்லையென்றாலும் இந்த விநோதமான சாதனையிலும் சச்சினுக்குத்தான் முதலிடம். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருது பெற்றும் அதிக தடவை தோல்வியைக் கண்ட வீரர், சச்சின். 6 தடவை இதுபோல நடந்துள்ளது. டெஸ்டில் இதுபோல மூன்று தடவை நடந்துள்ளது.

46. மார்ச் 2012-ல் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராகத் தனது 100-வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார் சச்சின்.

47. 2010-ம் வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் - சச்சின் டெண்டுல்கர். 15 ஆட்டங்களில் 5 அரை சதங்களுடன் 618 ரன்கள் எடுத்தார்.

48. சச்சினின் 100 சதங்கள்

20 vs ஆஸ்திரேலியா
17 vs இலங்கை
12 vs தென் ஆப்பிரிக்கா
9 vs இங்கிலாந்து
9 vs நியூஸிலாந்து
8 vs ஜிம்பாப்வே
7 vs மே.இ. தீவுகள்
7 vs பாகிஸ்தான்
6 vs வங்கதேசம்
4 vs கென்யா
1 vs நமிபியா

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT