ஸ்பெஷல்

5 சதங்கள், 5 அரை சதங்கள்: இந்தியாவுக்கு எதிராக எளிதாக ரன்கள் குவிக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

30th Nov 2020 11:31 AM | எழில்

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிராக ரன்கள் குவிப்பது ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்குச் சுபலமாக இருப்பதால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. இந்த ஆட்டத்திலும் சதம் கடந்து ஆஸ்திரேலியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் ஆனாா்.

ADVERTISEMENT

முதல் ஒருநாள் ஆட்டம் போலவே நேற்றும் 62 பந்துகளில் சதமடித்து ஸ்டீவ் ஸ்மித். 14 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 104 ரன்கள் அடித்தார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 105 ரன்கள் எடுத்திருந்தார்.  

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 11 சதங்கள் அடித்துள்ளார் ஸ்மித். அவற்றில் ஐந்து சதங்கள் இந்திய அணிக்கு எதிராக அடித்தவை.

மேலும் கடந்த 5 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் எடுத்த ரன்கள்:

69, 98, 131, 105, 104.

2010 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஸ்மித்துக்கு, இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு 2015-ல் தான் கிடைத்தது. முதல் ஆட்டத்தில் 47 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு இந்தியாவுக்கு எதிராக எப்போது களமிறங்கினாலும் மைதானத்தில் வானவேடிக்கை நடத்துகிறார். 

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் எடுத்த ரன்கள்.

47, 105, 149, 46, 41, 51, 28, 1, 59, 63, 3, 16, 69, 98, 131, 105, 104.

கவனியுங்கள். 17 ஆட்டங்களில் இருமுறை மட்டுமே 10 ரன்களுக்குக் குறைவாக எடுத்துள்ளார். 17 ஒருநாள் ஆட்டங்களில் 5 சதங்கள், 5 அரை சதங்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்திய அணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் ஸ்மித்துக்குச் சிரமம் ஏற்பட்டதில்லை. ஆர்ச்சர், ரஷித் கான் போன்ற அச்சுறுத்தலை உண்டாக்கும் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாதது ஸ்மித்துக்கு வசதியாக உள்ளது. அதுவும் சொந்த மண்ணில் விளையாடும்போது அவருடைய தன்னம்பிக்கை மேலும் அதிகமாகி, விரைவாக ரன்கள் குவிக்கிறார்.

ஸ்மித்தைக் கட்டுப்படுத்த இந்திய அணி திட்டமிடாவிட்டால் இனி வரும் ஆட்டங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கும். 

Tags : ODIs Steve Smith
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT