ஸ்பெஷல்

நெ.10 மாரடோனா: மகத்தான வாழ்வும் சாதித்த தருணங்களும்

ச. ந. கண்ணன்

1986 உலகக் கோப்பை. மெக்ஸிகோவில் ஆர்ஜெண்டீனா - இங்கிலாந்து காலிறுதி ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்து கால்பந்து வரலாற்றில் இடம்பிடித்தார் மாரடோனா. ஒரு கோல் பிழை, இன்னொன்று சாகசம்.

2-ம் பகுதி தொடங்கி ஆறு நிமிடங்கள் ஆகியிருந்தன. கோல் போஸ்ட் அருகே பந்தைத் தலையால் முட்டி கோல் ஆக்க முயன்றபோது கையால் தட்டினார் மாரடோனா. அது கோல் ஆக மாறியது. இன்றுவரைக்கும் பேசப்படும் தருணமாக இது அமைந்துவிட்டது.

கோல் அடித்த பிறகு சில நொடிகள் நடுவரைப் பார்த்தார் மாரடோனா. தான் என்ன செய்தோம் என அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் நடுவரும் லைன்ஸ்மேன்களும் கையால் மாரடோனா கோல் அடித்ததைக் கவனிக்கவில்லை. கோல் என அறிவித்தார் நடுவர். சக வீரர்களுடன் கொண்டாடித் தீர்த்தார் மாரடோனா. இங்கிலாந்து வீரர்கள் எதிர்த்தார்கள். பலனில்லை. தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்காமல் கடவுளின் கையால் அடித்த கோல் என்று ஆட்டம் முடிந்த பிறகு சுவாரசியமான விளக்கத்தை அளித்தார் மாரடோனா. ஒரு எழுத்தாளனின் சொல் போல மாரடோனாவின் விளக்கம் ரசிகர்களின் மனத்தில் பதிந்து வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

இங்கிலாந்தின் பயிற்சியாளர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இது கடவுளின் கை அல்ல, ராஸ்கலின் கை. கடவுளுக்கு இதில் எந்தப் பங்களிப்பும் இல்லை. அந்த நாளிலிருந்து என் கண்களில் மாரடோனா மீதான மதிப்பு குறைந்துவிட்டது என்றார். 

அடுத்த நான்கு நிமிடங்களில், கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் மிகச்சிறந்த கோலை அடித்து இங்கிலாந்தை வீழ்த்த உதவினார் மாரடோனா. மைதானத்தின் பாதியிலிருந்து பந்தைத் தனி ஆளாக 51 மீட்டருக்குக் கடத்திச் சென்று ஆறு இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றிவிட்டு பந்தை 10 நொடிகளுக்குத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இறுதியாக கோல் அடித்து முடித்தார். இதை எத்தனை முறை பார்த்தாலும் வியக்காமல் இருக்க முடியாது. கால்பந்து வரலாற்றில் அந்த கோலுக்கு எப்போதும் இடமுண்டு. 

பீலேவுக்கு நிகராகப் பேசப்பட்ட மாரடோனா, ஆர்ஜெண்டீனாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்ட ஒரு வீரர். கால்பந்து என்றால் மாரடோனா, மாரடோனா என்றால் கால்பந்து என்றுதான் பலருக்கும் கால்பந்தையும் மாரடோனாவையும் தெரியும். அவருடைய மரணம் உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களால் நம்பமுடியாத செய்தியாக உள்ளது. மாரடோனாவின் உயிர் எப்படி ரசிகர்களைத் தவிக்கவிட்டுப் போகும்?

எந்தவொரு கால்பந்து வீரருக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவதும் அப்போட்டியை வெல்வதும் தான் பெரிய கனவாக இருக்கும். மாரடோனாவால் அப்போட்டியில் எளிதாகச் சாதிக்க முடிந்தது. தன்னுடைய மிகச்சிறந்த கோலையும் சர்ச்சைக்குரிய கோலையும் அடித்தது இப்போட்டியில்தான். தனது தலைமையில் ஆர்ஜெண்டீனாவுக்கு உலகக் கோப்பையையும் 1986-ல் பெற்றுத் தந்தார். இதற்கு மேல் எப்படி ஒரு வீரரால் உலகக் கோப்பையில் சாதிக்க முடியும்? இவருக்கு நிகராக வேறு யாரைச் சொல்ல முடியும்?

1986 உலகக் கோப்பைப் போட்டி என்றால் மாரடோனா மட்டுமே நினைவுக்கு வரும்படி தன் வித்தைகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். ஐந்து கோல்கள் அடித்து கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். ஐந்து கோல்கள் அடிப்பதற்கு உதவியும் செய்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான அட்டகாசமான காலிறுதி ஆட்டத்துக்குப் பிறகு அரையிறுதியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மேலும் இரு கோல்கள் அடித்தார். இறுதி ஆட்டத்தில் மாரடோனாவை மேற்கு ஜெர்மனி வீரர்கள் சுற்றி வளைத்துக் கொண்டாலும் கடைசி கோல் அடிக்க உதவினார். 3-2 என ஆர்ஜெண்டீனா வென்று உலக சாம்பியன் ஆனது. இதனால் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் உலகக் கோப்பையைக் கையில் ஏந்தினார். அப்போட்டியில் ஆர்ஜெண்டீனா அடித்த 14 கோல்களில் 10 கோல்களில் மாரடோனாவின் பங்களிப்பு இருந்தது. இதனால் உலகக் கோப்பைப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது. அதற்குப் பிறகு 34 வருடங்கள் ஆன பிறகும் ஆர்ஜெண்டீனா அணியால் மற்றொரு உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. 

எந்தவொரு உலகக் கோப்பையிலும் எந்தவொரு வீரரும் இந்தளவுக்குத் தனிப்பட்ட முறையில் ஆதிக்கம் செலுத்தி தனது அணி கோப்பையை வெல்ல உதவியதில்லை. 

 
*

மாரடோனாவின் பெற்றோருக்கு எட்டு குழந்தைகள். இவர் ஐந்தாவது குழந்தை. முதல் மகன். அக்குடும்பத்தில் உள்ள பத்து பேரும் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் மின்சார, குடிநீர் வசதி இல்லாத வீட்டில் வசித்துள்ளார்கள். 

மூன்று வயதில் கால்பந்து ஒன்று பரிசாக மாரடோனாவுக்குக் கிடைத்தது. அன்றிரவு அதைக் கட்டியணைத்துக்கொண்டு உறங்கியுள்ளார். வீட்டை விட்டு எப்போது வெளியே சென்றாலும் அவர் கையில் கால்பந்து இருக்கும். வழியில் அதைத் தட்டிக்கொண்டு செல்வார். அந்தப் பந்தை வைத்துதான் நிலத்தில் ஒவ்வொரு அடியையும் வைப்பேன் என்று கூறியுள்ளார் மாரடோனா.

பந்துடனேயே வாழ்ந்ததால் எட்டு வயதிலேயே வயதில் அதைக் கொண்டு வித்தைகள் காண்பிக்கப் பழகிவிட்டார். உள்ளூர் ஆட்டங்களின் இடைவேளையில் மாரடோனா, கால்பந்தைக் கொண்டு ரசிகர்களுக்கு வித்தை காண்பித்தார். காலுக்கடியில் பந்து இருக்கும்போது மேஜிக் நிபுணராகத் தென்பட்டார். இதனால் ஆர்ஜெண்டீனோஸ் ஜூனியர்ஸ் கிளப் அணியின் மாணவர் அணியான தி லிட்டில் ஆனியன்ஸில் முதலில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

மாரடோனாவைத் தேர்வு செய்த பயிற்சியாளர் ஃபிரான்சிஸ்கோ ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்: தேர்வுக்காக மாரடோனா வந்தபோது அவருக்கு 8 வயதுதான் என்று எங்களால் நம்ப முடியவில்லை. அவருடைய அடையாள அட்டையைக் கூட கேட்டோம். குழந்தைக்கான உடலைக் கொண்டிருந்தாலும் பெரியவர்கள் விளையாடுவது போன்றதொரு திறமை அவரிடம் இருந்தது. அவருடைய வயதை உறுதி செய்துகொண்ட பிறகு இனிமேல் அவரை நன்குக் கவனித்து திறமையை மெருகேற்ற வேண்டும் என எண்ணினோம் என்றார். 

திறமைசாலி என்பதால் 16 வயது ஆகும் முன்பு ஆர்ஜெண்டீனோஸ் ஜூனியர்ஸ் அணியில் மாரடோனாவுக்கு இடம் கிடைத்தது. மைதானத்தில் சுறுசுறுப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். புயல் வேகத்தில் பந்தைக் கடத்திச் சென்று கோல்கள் அடிப்பது அவருடைய தனித்துவமாக, தனிப்பாணியாக மாறியது. ஆர்ஜெண்டீனோஸ் ஜூனியர்ஸ் அணிக்காக 116 கோல்களை அடித்து முடித்துவிட்டு, 1981-ல் போகோ ஜூனியர்ஸ் அணிக்கு மாறினார். 1980-81 தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் போகா ஜூனியர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி பட்டம் வென்றார். ஆர்ஜெண்டீனா உள்ளூர் லீக் போட்டிகளில் மாரடோனா வென்ற ஒரே பட்டம் இதுதான். 

17 வயதில், ஆர்ஜெண்டீனாவுக்காக விளையாடிய இளம் வீரர் என்கிற பெருமையுடன் அணிக்குள் நுழைந்தார். எனினும் அனுபவமும் வயதும் இல்லாததால் சொந்த மண்ணில் நடைபெற்ற 1978 உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆர்ஜெண்டீனா அணியில் மாரடோனாவுக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்த வருடம் இளையோர் உலகக் கோப்பை போட்டியில் நட்சத்திர வீரராக மிளிர்ந்தார். ஆர்ஜெண்டீனா பட்டம் வெல்ல உதவினார். அவரிடம் பந்து சென்றபோது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய சக வயது போட்டியாளர்களும் ஆச்சர்யம் அடைந்தார்கள். சிறந்த வீரராகத் தேர்வாகி தங்கப் பந்தை வென்றதால் அவருடைய சர்வதேச வாழ்க்கையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

1982 உலகக் கோப்பையில் மாரடோனாவை அணியில் சேர்த்த ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் போட்டி ஸ்பெய்னில் நடைபெற்றது. இதுதான் மாரடோனாவின் முதல் உலகக் கோப்பை. இந்தப் போட்டியில் மாரடோனாவின் திறமையை உலகம் அவ்வளவாக அறியவில்லை. ஹங்கேரிக்கு எதிராக இரு கோல்கள் அடித்தார். ஐந்து ஆட்டங்களிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் மூர்க்கத்தனமாக விளையாடியதால் வெளியேற்றப்பட்டார். மறக்கக் கூடிய அளவுக்கே முதல் உலகக் கோப்பை அவருக்கு அமைந்தது. 1986 உலகக் கோப்பையில் வெற்றிவாகை சூடினார். கால்பந்து உலகம் அவர் காலடியில் கிடந்தது. 

1990 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஆர்ஜெண்டீனா அணிக்குத் தலைமை தாங்கினார் மாரடோனா. இந்தமுறை அவரால் இன்னொரு 1986ல் நிகழ்த்திய மேஜிக்கை மீண்டும் கொண்டுவர முடியவில்லை. காயத்துடன் விளையாடியதால் பழைய ஜொலிஜொலிப்பு ஆட்டத்தில் தென்படவில்லை. கேம்ரூன் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்திலேயே ஆர்ஜெண்டீனா அணி தோற்றதால் அதிர்ச்சிக்கு ஆளானார்கள் ரசிகர்கள். எனினும் ஆர்ஜெண்டீனா இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியிடம் 1-0 எனத் தோற்றது. 

அமெரிக்காவில் நடைபெற்ற 1994 உலகக் கோப்பை, மாரடோனாவின் புகழும் திறமையும் தேய்ந்துகொண்டிருப்பதை வெளிப்படுத்தியது. இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடியவர், ஊக்கமருந்து உட்கொண்ட காரணத்துக்காக போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். தனது பயிற்சியாளர் அளித்த தவறான பவர் டிரிங்கால் இந்த நிலை ஏற்பட்டதாகத் தனது சுயசரிதையில் எழுதினார் மாரடோனா. 

உலகக் கோப்பையில் மாரடோனாவுக்கு இன்னொரு பெருமைக்குரிய பங்களிப்பும் உள்ளது. மாரடோனாவைத் தடுக்க முடியாத எதிரணி வீரர்கள் அவருக்கு எதிராக ஃபவுல் செய்வார்கள். இதனால் கோல் அடிக்கும் வாய்ப்பைத் தடுக்க முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதன்படி உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 152 ஃபவுல்கள் மாரடோனாவுக்குக் கிடைத்துள்ளன. இதிலிருந்து எதிரணிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளலாம். உலகக் கோப்பையில் மாரடோனாவுக்கு அடுத்ததாக தனி நபருக்குக் கிடைத்த அதிக ஃபவுல்கள் - 64 மட்டுமே. 

1982 முதல் 1994 வரை 12 வருடங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி, 21 ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்துள்ளார். எட்டுக் கோல்கள் அடிக்க உதவியுள்ளார். 1966 முதல் வேறு எந்த வீரரும் உலகக் கோப்பையில் இந்தளவுக்குப் பங்களித்தது இல்லை. 

*

ஒரு உலகக் கோப்பையைப் பெற்றுள்ள மாரடோனா, கிளப் அணிகளில் விளையாடி 9 கோப்பைகளை வென்றுள்ளார்.

போகா ஜூனியர்ஸ் அணிக்கு ஒரு கோப்பையும் பார்சிலோனா அணிக்கு மூன்று கோப்பையும் நபோலி அணிக்கு மூன்று கோப்பைகளும் வென்று தந்துள்ளார்.

1976 முதல் 1981 வரை தன்னுடைய முதல் டிவிசன் கிளப் அணியான ஆர்ஜெண்டீனோஸ் ஜூனியர்ஸுக்கு விளையாடினார். ஒரு வருடம் போகா ஜூனியர்ஸுக்கு விளையாடியவர், பார்சிலோனா அணிக்கு மாறினார்.

1982 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பார்சிலோனா அணிக்கு மாறி கால்பந்து உலகில் கவனத்தை ஈர்த்தார். 83-ல் ரியல் மாட்ரிட் அணியை மாரடோனா அடித்த கோலின் உதவியுடன் தோற்கடித்தது பார்சிலோனா. இந்த ஆட்டத்தில் மாரடோனாவின் திறமையை ரியல் மாட்ரிட் ரசிகர்களே ரசித்து பாராட்டு தெரிவித்தார்கள். முதல் சீசனில் பார்சிலோனா கிளப் அணியை ஸ்பானிஷ் பட்டம் வெல்ல வைத்தார். 1984-ல் 10.4 மில்லியன் டாலர் வரையிலான சம்பளத்துடன் இத்தாலியின் நபோலி அணிக்கு மாற்றம் ஆனார். 

1987-ல் இத்தாலியன் லீக் சாம்பியன்ஷிப் கோப்பையை நபோலி அணிக்குப் பெற்றுத் தந்தார். 60 வருடங்களில் அந்த அணிக்குக் கிடைத்த முதல் கோப்பை அது. 

நபோலி அணியின் 94 வருட வரலாற்றில் இரு இத்தாலி சாம்பியன்ஷிப் கோப்பைகளையும் ஒரு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றுள்ளது. இந்த மூன்று வெற்றிகளும் அந்த அணியில் மாரடோனா இருந்தபோது கிடைத்தவை தான். 

ஏழு வருடங்கள் நபோலி அணிக்காக விளையாடி விலகினார் மாரடோனா. அதன்பிறகு 10-ம் எண் கொண்ட உடை ஓய்வுபெற்று விட்டதாக நபோலி அறிவித்தது. அந்த அணிக்காக 115 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரராகவே அங்கிருந்து விடைபெற்றார். 

ஆறு வருடங்கள் தலைமை தாங்கி நபோலி அணிக்கு இரு இத்தாலியன் லீக் சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றுத் தந்த மாரடோனா, 90களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கினார். போதைப் பொருள் பயன்படுத்தியது, பயிற்சிக்கு வராமல் இருந்தது எனப் பல சிரமங்களை ஏற்படுத்தினார். போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக 1991-ல் நபோலி அணியில் இருந்து 15 மாதத் தடைக்கு ஆளானாா். 

இந்த சர்ச்சை குறித்து மாரடோனா கூறியதாவது: நபோலி கிளப் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். என்னுடைய சம்பளத்தைத் தராமலும் இருக்கட்டும். ஆனால் நான் மாற மாட்டேன். நினைவில் கொள்ளுங்கள், வீரர்கள் தான் மைதானத்துக்கு 90,000 ரசிகர்களை அழைத்து வருகிறார்கள். நான் மாரடோனா, கோல்கள் அடிப்பவன், தவறுகள் செய்பவன். யாருடனும் மோத என்னிடம் வலுவான தோள்கள் உள்ளன என்றார். இதனால் இத்தாலி ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். அவர்களுடைய வெறுப்பு 1990 உலகக் கோப்பையில் மேலும் அதிகமானது.

உலகக் கோப்பை அரையிறுதியில் மாரடோனா தலைமையிலான ஆர்ஜெண்டீனா, போட்டியை நடத்திய இத்தாலியைத் தோற்கடித்தது. பிறகு இறுதிச்சுற்றில் மேற்கு ஜெர்மனியிடம் தோற்றது. இதனால் மாரடோனாவை முற்றிலும் வெறுக்க ஆரம்பித்தார்கள் இத்தாலி ரசிகர்கள். 

1991-ல் ஸ்பெயின் கிளப் அணியான செவில்லாவுக்கு மாறினார். அப்போதே மாரடோனாவின் திறமை மங்கத் தொடங்கியிருந்தது.

1994-ல் நெவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் கிளப் அணிக்காக ஐந்து ஆட்டங்களில் விளையாடினார். பிறகு போகா அணிக்கு மீண்டும் திரும்பி 1995-97 வரை விளையாடினார். கிளப் வாழ்க்கை இத்துடன் முடிவடைந்தது. 

தொழில்முறை வீரராக 21 வருடங்கள் விளையாடியுள்ளார். 16 வயதில் ஆர்ஜெண்டீனோஸ் ஜூனியர்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்தவர் கடைசியாக 38 வயதில் போகா ஜூனியர் அணியில் விளையாடியபோது ஓய்வு பெற்றார். 

கிளப் அணிகளுக்காக 311 கோல்கள் அடித்துள்ளார். ஆர்ஜெண்டீனா ஜூனியர்ஸ் அணிக்காக 116 கோல்களும் போகா ஜூனியர்ஸ் அணிக்காக 28 கோல்களும் பார்சிலோனாவுக்காக 38 கோல்களும் நபோலிக்காக 115 கோல்களும் செவில்லா எஃப்சிக்காக 7 கோல்களும் போகா ஜூனியர்ஸ் அணிக்காக 2-வது முறை 7 கோல்களும் அடித்தார். நெவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியில் விளையாடி ஒரு கோலும் அடிக்கவில்லை.   

2008-ல் ஆர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் மாரடோனா. எனினும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2010 உலகக் கோப்பைப் போட்டியில் ஆர்ஜெண்டீனா அணி காலிறுதியுடன் வெளியேறியது. இதனால் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஆர்ஜெண்டீனா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மாரடோனாவுக்கு ஐந்தாவது இடம். முதலிடத்தில் மெஸ்ஸி உள்ளார்.

மாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாளும் கேரளாவில் இரு நாளும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒருவர் தன் வாழ்நாளில் எந்தளவுக்குப் பேரும் புகழுடன் கடைசிவரை வாழ்ந்தார் என்பதற்கு மாரடோனாவின் வாழ்வே சிறந்த உதாரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT