ஸ்பெஷல்

உலகக் கோப்பை: நிபந்தனைகளுக்கு உட்பட்டது!

15th Jul 2019 02:50 PM | Raghavendran

ADVERTISEMENT

 

2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டி பரபரப்புகளுக்கு மட்டும் பஞ்சமில்லாது, பல சர்ச்சைகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஐசிசி விதியின் காரணமாகவே இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது என கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சாமானியர்களின் கருத்தாகவும் ஆழமாகப் பதிவாகி வருகிறது. இது கிரிக்கெட் வீரர்களிடம் கூட பரவலான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. கிரிக்கெட் உலகக் கோப்பை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது போன்ற கேலி, கிண்டல்களுக்கும் பஞ்சமில்லை.

இதுகுறித்து போட்டி முடிந்த பின்னர் வெற்றிக் கேப்டன் இயன் மோர்கன் கூறுகையில், அந்த ரன்-அவுட் தருணத்தின் போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் உணரவில்லை. அதனால் கொண்டாடவும் இல்லை. ஏனென்றால் அந்த முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையும் என்பது எனக்கு தெரியும் என்றார். போட்டியின் போது ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. இந்த தோல்வியை ஏற்பதில் எங்களுக்கு சற்று சிரமம் இருந்தாலும், வேறு வழியில்லை, எனவே இதை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதில் விதியை குறை கூற விரும்பவில்லை. சில முக்கிய தருணங்களை சரியாகப் பயன்படுத்த தவறிவிட்டோம் என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பெருந்தன்மையுடன் தெரிவித்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில், உங்கள் உலகக் கோப்பையை வேண்டுமானால் இங்கிலாந்து வென்றிருக்கலாம். ஆனால், நியூஸிலாந்து அணி தான் எங்கள் மனங்களை வென்றது என கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 46 நாட்களாக 48 போட்டிகள் நடைபெற்றும் வெறும் பவுண்டரிகளின் அடிப்படையில் சாம்பியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியென்றால் நியூஸிலாந்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் நிலை என்ன? ஆனால், இங்கிலாந்தோ 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது.

பூஜ்ஜியம் ரன்னில் இங்கிலாந்து வெற்றி, பூஜ்ஜியம் ரன்னில் நியூஸிலாந்து தோல்வி! அடடே என்னவொரு ஆட்டம். மிக சிரமத்துடன் ஐசிசி இங்கிலாந்தை வெற்றிபெற வைத்துள்ளது. ஜெர்ஸி நம்பர்களைக் கூட்டி அதனடிப்படையில் கூட வெற்றியாளரை தேர்வு செய்யலாம். இந்த தொடரிலேயே மிக மோசமாக செயல்பட்ட அணியென்றால் அது ஐசிசி தான். பவுண்டரிகளின் அடிப்படையில் மட்டுமே விதி என்றால், பந்துவீச்சாளர்களைக் கண்டால் கோமாளிகளாகத் தெரிகிறதா? முதலில் உங்கள் நடுவர்களின் தரத்தை உயர்த்துங்கள், வானிலை குறித்த முழுமையான ஆய்வுகளுக்கு பின்னர் இப்படியொரு மிகப்பெரிய தொடரை நடத்துங்கள்.

ஒருநாள் நீங்கள் குவித்த மொத்த ரன்களோ, அதை வெற்றிகரமாக கடந்து சென்றதோ, எடுக்கப்பட்ட விக்கெட்டுகளோ என எதுவும் இல்லாமல் வெறும் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியை தீர்மானிக்கும் நாளும் வரும். தெருவில் விளையாடும் கிரிக்கெட்டில் கூட விதிகள் சரியாக உள்ளது. கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி வரும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இதுபோன்ற எதிர்மறை நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா? என்பது போன்ற பரவலான விமர்சனங்கள் சமூக வலைதளங்களை ஆட்டிப்படைத்து வருகின்றன.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சவால் நிறைந்த ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினர். எனவே இரு அணிகளுமே மொத்த ஸ்கோர்களின் அடிப்படையிலும், சூப்பர் ஓவர் முடிவிலும் சமனில் இருக்கும்போது கோப்பையை சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டிய கடமை மட்டுமே ஐசிசி-க்கு தேவை. மாறாக இதுமாதிரியான முதலும் கோணல் - முற்றும் கோணல் போன்ற விதிகளையெல்லாம் மாற்றியமைப்பது மட்டுமே கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு மிகச் சரியானதாக இருக்கும். 

ஆனால், இவ்விகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT