ஸ்பெஷல்

இளவேனில் வாலறிவன் தமிழக வீராங்கனையா?

30th Aug 2019 04:34 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

இட்லி சாம்பார் பிடிக்குமா அல்லது ரொட்டி சப்ஜியா என்றொரு கேள்வியை ஆங்கில இணைய இதழ் ஒன்று இளவேனிலிடம் கேட்டபோது அவர் கொடி பிடித்தது இட்லி சாம்பாருக்குத்தான். இந்தியாவின் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் ஊர்ப் பாசம் விட்டுவிடுமா?

தமிழ்ப் பெயர் கொண்ட தமிழ்ப் பெண் இளவேனில் வாலறிவன். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று அவர் தங்கம் வென்றுள்ளார். 20 வயதுப் பெண் நிகழ்த்திய மகத்தான சாதனை.  

இளவேனிலின் வெற்றியைத் தமிழகம் மிக அதிகமாகக் கொண்டாடி வருகிறது. கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், இளவேனில். அங்குதான் பிறந்தார். இளவேனிலுக்கு 3 வயதாக இருக்கும்போது, இளவேனிலின் குடும்பம் குஜராத் - அஹமதாபாத்துக்கு இடம்பெயர்ந்தது. இப்போதும் அங்குதான் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

ADVERTISEMENT

காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேற்று தீபாவளிதான். நம்ம ஊரு பொண்ணு என்று இளவேனிலின் வெற்றியைக் கண்டு மகிழாத உள்ளங்களே அங்கு இருக்க முடியாது. இளவேனிலின் தாத்தா, ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் உருத்திராபதி. பாட்டி, கிருஷ்ணவேணி. பேத்தி தங்கம் வென்றவுடன் ஊரார் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியிருக்கிறார்கள். 

எல்லாம் சரி. இளவேனிலின் வெற்றியைக் குறிப்பிடும் பல தமிழ் ஊடகங்கள், இளவேனிலைத் தமிழக வீராங்கனை என்று குறிப்பிடுகின்றன. இளவேனில் குஜராத்தில் வசிப்பதையே கண்டுகொள்ளாமல் அவர் கடலூரைச் சேர்ந்தவர் என்று மட்டும் தகவல் தெரிவிக்கிறார்கள். இதனால் இளவேனில் தமிழ்நாட்டில் வசித்து தமிழகம் சார்பாகப் பல போட்டிகளில் பங்கேற்று, இன்று உலகளவிலான போட்டி ஒன்றில் தங்கம் வென்றுள்ளார் என்றுதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒருவர் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு  இதில் உள்ளது. 

இளவேனிலைத் தமிழ்ப் பெண் எனலாம். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுவது கூட ஓரளவு சரிதான். அதேசமயம் அவர் தமிழக வீராங்கனையா? அப்படிச் சொல்லலாமா? இளவேனில் இந்த நிலைமைக்கு வர தமிழகம் என்ன செய்தது?

குஜராத் அரசும் அந்த ஊர் பயிற்சியாளர்களும்தான் இளவேனிலின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்கள். 3 வயதில் குஜராத்தில் குடியேறியதால் பள்ளிப் படிப்பை அங்குதான் பயின்றுள்ளார். கல்லூரிப் படிப்பும் தற்போது அங்குதான். 

2012-ல், 13 வயது முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார் இளவேனில். அவருடைய சகோதரர் இறைவன் ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மேற்கொண்டுள்ளதால் அவரைப் பார்த்து இளவேனிலுக்கும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கிறது. Sanskardham எனும் பள்ளியில் படித்தபோதுதான் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். குஜராத் மணி நகரில் உள்ள தன் வீட்டிலிருந்து 25 கி.மீ. தள்ளி இருந்தாலும் பயிற்சி பெறுவதற்காகவே அங்குச் சேர்ந்துகொண்டார். 2014-ல் குஜராத் அரசின் விளையாட்டுப் பள்ளியில் வந்து சேர்ந்துகொள்ளும்படி குஜராத் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை விடுக்க அதை ஏற்றுக்கொண்டார்.  

2016-ல் தனக்கென சொந்தமாக ரைஃபிள் வாங்கியவர், மாநில அளவிலான தேர்வுப் போட்டியிலேயே 250.6 புள்ளிகள் பெற்று உலக சாதனை செய்தார். கேரளாவில் நடைபெற்ற சீனியர் நேஷனல்ஸ் போட்டியில் குஜராத் வீராங்கனையாகத் தங்கம் வென்றார். 

2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் ககன் நரங். தற்போது பயிற்சியாளராகப் பல இளைஞர்களை சாம்பியனாக்கி வருகிறார். 2017-ல் இளம் வீரர்களுக்குப் பயிற்சியளிக்க முடிவெடுத்தார் ககன். பிராஜக்ட் லீப் என்கிற திட்டத்தில் பள்ளி மூலமாக தேர்வானார் இளவேனில். அது இளவேனில் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

துப்பாக்கிச் சுடுதல் தேசிய சாம்பியன் ஆனபோது அவர் குஜராத் வீராங்கனையாகவே அறியப்பட்டார். மேலும் குஜராத் வீராங்கனையாக 13 வயதுக்கு முன்பே தேசிய அளவிலான தடகளப் போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். 

இப்படி இளவேனிலை இன்று தங்க மங்கையாக உருவாக்கியதில் குஜராத்துக்குத்தான் அத்தனை பங்கும் உண்டு. எனவே விளையாட்டுப் போட்டிகளின் அடிப்படையில் அவர் குஜராத் வீராங்கனையே. எனவே, தமிழ்நாட்டின் சார்பாக எந்தவொரு போட்டியிலும் விளையாடாதவரைத் தமிழ்நாட்டு வீராங்கனை, தமிழக வீராங்கனை என்று குறிப்பிடுவது தவறு. தமிழ்ப் பெண் என்கிற அடையாளம் ஒன்றே போதுமே அவரை நாம் கொண்டாட. 

கடந்த வருடம் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இரு தங்கங்களை வென்றார் இளவேனில். அப்போதுகூட தமிழக அரசு சார்பாக இளவேனிலுக்கு எவ்வித ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. ஒரே காரணம், அவர் குஜராத் வீராங்கனை என்பதால் தான். ஆனால் மற்ற மாநிலங்கள் தங்கள் மண்ணைச் சார்ந்த வீரர்களை இப்படிக் கைவிடுவதில்லை. 

சாய்னா நேவால் ஹைதராபாத்வாசியாக இருந்தாலும் அவருடைய பூர்வீகம் ஹரியானா. இதனால் அவர் சாதனைகள் செய்யும்போதெல்லாம் ஹரியானா அரசும் அவருக்கு பரிசுத்தொகை உள்ளிட்ட பல உதவிகளைச் செய்ய முன்வருகிறது. ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் இவர் மலையாளி என்பதால் கேரள அரசு முழுமையாகச் சொந்தம் கொண்டாடி வருகிறது. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றபோது தீபிகாவுக்கு கேரள அரசு பரிசுத்தொகை அளித்துள்ளது. பிரபல ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் தற்போது தமிழ்நாடு சார்பாக உள்ளூர் ஹாக்கிப் போட்டிகளில் கலந்துகொண்டாலும் அவருக்குக் கேரள அரசிடமிருந்து பரிசுத்தொகை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. நீ எங்கு வாழ்ந்தாலும் எங்கள் சொந்தம் தான் என்று பரிசுத்தொகை அளித்து ஊக்கம் அளிக்கின்றன இதர மாநில அரசுகள். அதேபோல, ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இரு தங்கங்களை வென்றபோதே இளவேனிலைத் தமிழக அரசு நேரில் அழைத்துப் பாராட்டிப் பரிசுத்தொகை அளித்திருக்கவேண்டும். இத்தனைக்கும் கடந்த ஒரு வருடமாக சென்னையில்தான் பயிற்சிகள் மேற்கொள்கிறார் இளவேனில். இப்போது, உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இளவேனிலுக்குத் தமிழக அரசியல்வாதிகள் பாராட்டியுள்ளார்கள். ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து பரிசுத்தொகை குறித்து ஓர் அறிவிப்பும் வெளிவரவில்லை. 

குஜராத் வீராங்கனையாக இருந்தாலும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் இளவேனில். அவரைத் கெளரவப்படுத்தவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT