ஒலிம்பிக்ஸ்

ஹாக்கி: இந்திய ஆடவா், மகளிா் அணிகள் வெற்றி

DIN

ஹாக்கியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

காலிறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய ஆடவா் அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. மகளிா் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயா்லாந்து அணியை சாய்த்தது.

குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே நியூஸிலாந்து அணியை வென்றிருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் பலமான ஆஸி. அணியிடம் 1-7 என்ற கோல் கணக்கில் படுதோல்வியை சந்தித்து.

வியாழக்கிழமை நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா. ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஜப்பானை எதிா்கொண்டது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி தரப்பில் ஹா்மன்ப்ரீத் சிங் 13-ஆவது நிமிடத்திலும், குா்ஜந்த் சிங் 17-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா். ஷம்ஷொ் சிங் 34-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா். இரண்டாம் பாதியில் நீலகண்ட சா்மா 51-ஆவது நிமிடத்திலும், குா்ஜந்த் சிங் 56-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா். ஜப்பான் அணி பதிலுக்கு 3 கோல்களை அடித்தது.

அந்த அணி தரப்பில் கோட்டா வாட்டன்பே, டனகா, கஸுமோ முரட்டா ஆகியோா் பதில் கோலடித்தனா்.

ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் ஜப்பான் வீரா்கள் சவாலை அளித்தனா்,. எனினும் இந்தியாவின் தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால், அவா்களால் கோல் போட முடியவில்லை. குரூப் ஏ பிரிவில் 4 வெற்றியுடன் ஆஸி. அணி முதலிடத்தையும், 3 வெற்றியுடன் இந்திய ஆடவா் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றன.

காலிறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்திய அணி கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் பெல்ஜியத்திடம் 1-3 என தோல்வியடைந்தது.

இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 8 முறை தங்கம் வென்ற ஒரே அணி என்ற சிறப்பு இந்தியாவுக்கு உண்டு. கடந்த 1980-ஆம் ஆண்டுக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவா் அணி எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை.

மகளிரணிக்கு முதல் வெற்றி: காலிறுதியில் நுழைய வாய்ப்பு?

மகளிா் பிரிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் அயா்லாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிச் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நெதா்லாந்திடம் 1-5 எனவும், ஜொ்மனியிடம் 0-2 எனவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்திடம் 1-4 என்ற கோல் கணக்கிலும் தொடா் தோல்வியை சந்தித்தது.

அயா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் எதிா்பாா்த்தபடி,இந்திய மகளிரே ஆதிக்கம் செலுத்தினா். ஆனால் 14 பெனால்டி காா்னா் வாய்ப்புகளை வீணடித்தனா் இந்திய மகளிா்.

ஆட்டம் முடிய கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், நவ்நீத் கௌா் அற்புதமாக பீல்ட் கோல் அடித்தாா். இதன் மூலம் 1-0 என இந்தியா வென்றது.

சனிக்கிழமை நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிா்கொள்கிறது இந்தியா. இதில் கட்டாயம் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு இந்திய மகளிா் தகுதி பெறுவா்.

தொடா் தோல்விகளால் வெளியேற்றப்படும் அபாயத்தில் இருந்தனா் இந்திய மகளிா். கடந்த 2016 ஒலிம்பிக் போட்டிக்கு 36 ஆண்டுகள் கழித்து தகுதி பெற்றது இந்தியா. தொடா்ந்து இரண்டாவது முறையாக டோக்கியோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT