ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று வா மகளே: குஷியில் லவ்லினாவின் சொந்த ஊர் மக்கள் (புகைப்படங்கள்)

பிரசந்தா மஜும்தார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் 23 வயது லவ்லினா போகோஹெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். சீன தைபே வீராங்கனையும் முன்னாள் உலக சாம்பியனுமான நியென் - சின் சென்னைத் தோற்கடித்தார் லவ்லினா. குத்துச்சண்டைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் அனைவருக்கும் பதக்கம் உறுதி என்பதால் இந்திய ரசிகர்கள் லவ்லினாவின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

லவ்லினாவின் வெற்றி அஸ்ஸாமிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் அனைவரும் லவ்லினாவின் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளித்தாலும் அஸ்ஸாமில் உள்ள லவ்லினாவின் பெற்றோர், போட்டி நடைபெற்றபோது தொலைக்காட்சியின் பக்கமே செல்லவில்லை. 

காலிறுதியில் வென்றால் ஒலிம்பிக் பதக்கம் உறுதி என்பதால் லவ்லினாவின் பெற்றோர் டிகென் போகோஹெயின் மமோனி போகோஹெயின் ஆகிய இருவரும் தொலைக்காட்சியில் ஆட்டத்தைப் பார்த்தால் பதற்றம் ஏற்படும் என்பதால் அதைத் தவிர்த்துள்ளார்கள்.

லவ்லினாவின் வெற்றியைக் கொண்டாடும் சொந்த ஊர் மக்கள்

குத்துச்சண்டை ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும். எனவே நேரலையில் லவ்லினாவின் ஆட்டத்தை நாங்கள் பார்க்கவில்லை என்கிறார் வியாபாரத்தில் ஈடுபடும் லவ்லினாவின் தந்தை டிகென் போகோஹெயின்.

அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாரோ முகியா கிராமத்தில் லவ்லினாவின் பெற்றோர் வசிக்கிறார்கள். குவாஹாட்டியிலிருந்து 300 கி.மீ. தூரம். 

வழக்கமாக காலை 6 மணிக்கு விழித்துக்கொள்வேன். இன்று காலை 5.30 மணிக்கு லவ்லினா போன் செய்தார். போட்டிக்குச் செல்வதாகக் கூறினார். நன்றாக விளையாடு என மகளை வாழ்த்தினோம். அவசரமாக போன் செய்ததால் இரு நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தது.

இன்றைய போட்டியில் லவ்லினா (இடது)

பிறகு எங்களுக்குத் தெரிந்தவர் போன் செய்து லவ்லினாவின் வெற்றியைத் தெரிவித்தார். எங்களுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல வருடங்களாகக் கடுமையான உழைப்பைச் செலுத்தியதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்லவேண்டும் என்பது லவ்லினாவின் கனவு. அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்தத் தருணத்தை நாங்கள் மறக்க மாட்டோம். அவர் தங்கம் வெல்வார் என நம்புகிறோம் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு டிகென் பேட்டியளித்துள்ளார்.

அஸ்ஸாம் மக்களின்  அன்பும் ஆதரவும் உள்ளதால் லவ்லினாவின் வெற்றியில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அவருடைய வெற்றிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தோம் என்கிறார் குடும்ப நண்பரான ஹோரென் கொஹெயின். விளையாட்டு வீரர்களுக்கான சரியான வசதிகள் ஊரில் இல்லாததால் தினமும் நான்கு கி.மீ. பயணம் செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார் லவ்லினா. பதக்கம் தற்போது உறுதியானாலும் தங்கத்துடன் திரும்பவேண்டும் என்பதுதான் சொந்த ஊர் மக்களின் விருப்பமாக உள்ளது.

அக்காக்கள் மற்றும் தாயுடன் லவ்லினா

குவாஹாட்டி சாய் மையத்தில் லவ்லினாவுக்கு முதலில் பயிற்சி அளித்த பதும் சந்திர போடோ கூறியதாவது: சாய் மையத்தில் அவருக்குப் பயிற்சியளித்து திறமையை மெருகேற்றினோம். எங்கள் முன்னால் வளர்ந்தவர். இப்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவராக உள்ளார். மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். அவர் நல்ல உயரம். சில தேர்வுகளுக்குப் பிறகு நல்ல குத்துச்சண்டை வீரராக வருவார் என நினைத்தேன் என்றார். லவ்லினாவின் வெற்றிக்கு அஸ்ஸாம் முதல்வர் ட்வீட் வெளியீட்டு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT