ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்: அடக்குமுறைகளை உடைத்தெறிந்த நாடற்ற அணி!

டி.குமாா்


சொந்த நாட்டில் எதிர்கொண்ட அடக்குமுறைகளை உடைத்தெறிந்து தங்களது சுயத்தை நிரூபிக்க ஒலிம்பிக்கில் நாடற்ற அணியில் களமிறங்கும் 29 வீரர்களின் காலடித் தடம் பதக்கங்களைவிட உயர்ந்தவை.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 11,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 5,000 பதக்கங்களுக்கான பட்டியலில் தங்களது நாடுகளின் பெயர் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இருப்பது இயல்பு.

ஆனால் தங்களது வெற்றியை எந்த நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போகிறோம் என்பதே கேள்விக்குறியான நிலையில், ஒலிம்பிக் போட்டியில் 2-ஆவது முறையாக 29 போட்டியாளர்களுடன் களம் கண்டுள்ளது ஏதிலியர் ஒலிம்பிக் அணி (Refugee Olympic Team). கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 10 வீரர்களுடன் களம் இறங்கிய இந்த நாடற்ற அணி டோக்கியோவில் 29 வீரர்களுடன் களம் கண்டுள்ளது. 

உலகமும் ஏதிலியர்களும்

போர், மத சண்டை மற்றும் அரசியல் ரீதியான உள்நாட்டுப் பிரச்னைகளால் ஒரு நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேறி மற்றொரு நாட்டுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஏதிலியர்கள். உலகில் உள்ள மொத்த ஏதிலியர்களில் 68 சதவீதத்துக்கும் அதிகமானோர்  சிரியா, வெனிசுலா, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய 5 நாடுகளை மட்டுமே சேர்ந்தவர்கள் என ஏதிலியர்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் கூறுகிறது. உலகெங்கும் வாழும் ஏதிலியர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள்,  சுத்தமான குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டவர்கள். மனிதாபிமானமற்ற நிலையில் வாழும் இவர்கள் பாகுபாடு, பாலியல் வன்முறை மற்றும் மனித கடத்தல் உள்ளிட்டவைகளுக்கு இரையாகின்றனர்.

சொந்த நாட்டை விட்டு வெளியேறிய இவர்களால் தங்களது நாட்டுக்காக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை. இவர்களது திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம், கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஏதிலியர் ஒலிம்பிக் அணி என்ற பெயரில் இவர்களை போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கியது. 

இது உலகம் முழுவதும் வாழும் நாடற்றவர்களாய் வாழும் ஏதிலிய மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், இந்த நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நாடற்றவர்கள் அணி பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் எதுவும் வெல்லவில்லை என்றாலும் கூட இந்த அணியை அனுமதித்த சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு உலகின் பல நாடுகளின் பாராட்டுகள் கிடைத்தன. இந்த நாடற்ற அணி வீரர்கள் தொடக்க விழா அணிவகுப்பின் போது ஒலிம்பிக் கொடியை ஏந்தி வந்தனர். இவர்கள் பங்கேற்கும் அதிகாரப்பூர்வமான போட்டிகளின் போது ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யுஸ்ரா மர்டினி (Yusra Mardini)

நீச்சல் வீராங்கனையான யுஸ்ரா மர்டினி சிரியாவைச் சேர்ந்தவர். சிரியாவில் நடந்த போரில் இவர்கள் வசித்த வீடு தரைமட்டமான போது இவருக்கு வயது 17. உள்நாட்டுப் போரின் காரணமாக தனது சகோதரியுடன் லெபனான், துருக்கி வழியாக கிரீஸ்க்கு படகில் சென்றபோது, படகு பழுதானது. தனது சகோதரி உள்ளிட்ட மேலும் 2 பேரின் உதவியுடன் தண்ணீருக்குள் மூழ்கி 3 மணி நேரம் போராடி படகின் மோட்டாரை சரி செய்து கிரீஸ் நாட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். அங்கு நீச்சல் பயிற்சிகளைப் பெற்று தற்போது நாடற்ற அணிக்காக இரண்டாவது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.

அஹ்மத் வைய்ஸ் (Ahmad wais)

சைக்கிள் பந்தய வீரரான இவரும் சிரியாவைச் சேர்ந்தவர். சிரியாவில் உள்ள 18 வயது முதல் 42 வயதுடைய ஆண்கள் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். துருக்கி வழியாக சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளார். ராணுவப் பணியை நிறைவேற்றாமல் நாட்டை விட்டு வெளியேறியதால், அவரது நாட்டில் தேடப்படும் மனிதராக உள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்படும் சிறைத் தண்டனை மற்றும் வலுக்கட்டாயமான ராணுவப் பயிற்சிகளுக்கு பயந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த நாட்டுக்குத் திரும்பாமல் இருந்து வருகிறார்.

கிமியா அலிஜத் (Kimia Alizadeh)

டேக்வாண்டோ வீராங்கனையான இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ போட்டியில் அந்நாட்டுக்காக வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தவர். ஆனால் ஈரானில் பெண்களுக்கு எதிராக தொடரும் ஒடுக்குமுறைகளால் நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ளார். ஈரான் அரசு தொடர்ந்து இவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தாலும், தனது விளையாட்டில் ஜொலித்து வருகிறார் கிமியா.

மசோமா அலி ஜதா (Masomah Ali zada)

சைக்கிளிங் வீராங்கனையான இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். அங்கு சிறுவயது பெண் குழந்தைகள் கூட வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது. அதிலும் இவர் ஹசாரா எனப்படும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஏராளமான பிரச்னைகள், கண்டனங்கள், மற்றும் கொலை மிரட்டல்களை சந்திக்க நேரிட்டது. இதனால் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இப்படி இந்த நாடற்ற அணியில் இடம்பெற்றுள்ள இந்த 29 பேருக்கு பின்னால் வலியும், வேதனையும் நிறைந்த உண்மை உறைந்துள்ளது. சொந்த அடையாளங்களைத் துறந்து, பெற்றோர், உற்றார் உறவினர்களை அரச பயங்கரவாதம், போர் குற்றங்களுக்கு பலி கொடுத்து விட்டு, தங்களது சுயத்தை நிரூபிக்கும் முயற்சியில் நாடற்ற அணியில் இடம்பெற்றுள்ள 29 வீரர் வீராங்கனைகள் களத்தில் பதிக்கும் ஒவ்வொரு காலடித் தடமும் பதக்கங்களை விட உயர்ந்தவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

கால்நடைகள் விற்பனை செய்யும் பணத்தை சிரமமில்லாமல் எடுத்துசெல்வதற்கு வழிவகுக்க கோரிக்கை

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

SCROLL FOR NEXT