ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: அரையிறுதியில் இந்திய மகளிர் அணி எப்படி விளையாடியது?

4th Aug 2021 06:10 PM | எழில்

ADVERTISEMENT

 

ஒரே ஒரு படியைத் தாண்டியிருந்தால் இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக்ஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.

ஆர்ஜென்டீனா அணிக்கு எதிராக இந்திய அணியால் வென்றிருக்க முடியும். 

ஒரு நல்ல வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை 2-1 என ஆர்ஜென்டீனா வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்திய மகளிா் ஹாக்கி அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

இன்று நடைபெற்ற ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது இந்திய மகளிர் அணி. பெனால்டி கார்னரில் குர்ஜித் கெளர் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

இதையும் படிக்கஅரசுப் பணியில் பதவி உயர்வு: வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி எதிர்பார்ப்பு

2-வது பகுதியின் தொடக்கத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஆர்ஜென்டீனா கோலடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. 

முதல் பாதியின் இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனில் இருந்தன. 3-ம் பகுதியில் மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது ஆர்ஜென்டீனா. இறுதியில் 2-1 என இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி எப்படி விளையாடியிருக்கிறது?

ஆர்ஜென்டீனா மிகச்சிறப்பாக விளையாடியது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்திய அணிக்குக் கடும் சவாலை அளித்தது. ஆஸ்திரேலியாவை நன்குச் சமாளிக்க முடிந்த இந்திய அணியால் இன்று ஆர்ஜென்டீனாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் நன்கு விளையாடியிருந்தால் வீழ்த்தியிருக்க முடியும். அந்த மனக்குறை இந்திய வீராங்கனைகளிடம் நிச்சயம் இருக்கும். 

கோல் போஸ்டை இந்திய அணி நான்கு முறை குறி வைத்தது என்றால் ஆர்ஜென்டீனா அணி ஆறு முறை குறி வைத்தது. அவ்வளவுதான்.

ஆட்ட நேரத்தில் பந்து ஆர்ஜென்டீனாவிடம் 53% இருந்தது. இந்தியாவிடம் 47%. 

கோல் வட்டத்துக்குள் ஆர்ஜென்டீனா 15 முறையும் இந்தியா 10 முறையும் நுழைந்து கோல் அடிக்க முயன்றுள்ளன. இதுதான் பெரிய வித்தியாசமாகி, பெனால்டி கார்னர்கள் ஆர்ஜென்டீனாவுக்கு அதிகமாகக் கிடைக்க காரணமாகிவிட்டன. இந்திய அணியால் எதிரணியின் கோல் வட்டத்துக்குள் நுழைய முடியாதபடி சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்கள் ஆர்ஜென்டீனா வீராங்கனைகள். இதனால் எவ்வளவு முயன்றாலும் கோலடிக்க வாய்ப்பில்லை என்கிற நிலையே ஆட்டம் முழுக்க இருந்தது. 

இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட மூன்று கோல்களும் பெனால்டி கார்னர் வழியாகக் கிடைத்தன. ஆர்ஜென்டீனாவுக்கு ஆறு பெனால்டி கார்னர்கள் கிடைத்ததால் அதில் இரண்டை கோல் ஆக மாற்றியது. இந்திய அணிக்கு மூன்று பெனால்டி கார்னர்கள் மட்டுமே கிடைத்தன. முதல் 2-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது இந்தியா. அதன்பிறகு கோல் அடிக்க எவ்வளவு முயன்றும் சாத்தியமாகவில்லை. இன்று இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதில் கூட கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களும் இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாடிய ஆட்டத்தையே பார்த்தார்கள். அதைப் பற்றியே விவாதித்தார்கள். இது எவ்வளவு பெரிய மனமாற்றம்!

இதையும் படிக்கநீண்ட முடியை இதற்காகத்தான் வெட்டினேன்: நீரஜ் சோப்ரா

ஆஸ்திரேலியாவை காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்த இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மோதுகிறது. இவ்வளவு தூரம் சாதித்ததற்கு வெண்கலம் கட்டாயம் கிடைக்க வேண்டும். கனவு நிறைவேறட்டும். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT