ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி

2nd Aug 2021 11:33 AM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. 

ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இவ்வளவு தூரம் முன்னேறி சாதனை படைக்கும் என யார் எண்ணியிருக்க முடியும்? ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய அணி இன்று அரையிறுதியில் விளையாடவுள்ளது. இது உண்மைதானா என இந்திய ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.  

முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. அயர்லாந்தை இந்திய அணி 1-0 என வீழ்த்தியது. தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த வந்தனா கட்டாரியா, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தமிழக கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்

இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ குரூப்பில் 4-ஆவது இடத்தில் இருந்தது இந்தியா. 5-ஆவது இடத்திலிருந்த அயா்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலையிலிருந்தது. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அயா்லாந்து 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா 4-ஆவது இடத்தில் நிலைத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கெளர் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணியின் தடுப்பாட்டம் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கோல் கீப்பர் சவிதா பல ஷாட்களைத் தடுத்து ஆஸ்திரேலிய அணியை ஒரு கோல் அடிக்கவும் விடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியது.

2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தமுறை முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 

இதையும் படிக்க | ஒலிம்பிக்ஸ்: ஒரு பதக்கமும் பெறாமல் வெளியேறிய இந்திய வில்வித்தை வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை நேற்று வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, கடந்த 49 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். அடுத்த நாளே இந்திய மகளிர் அணியும் நம்பமுடியாத வெற்றியை அடைந்து சாதனை படைத்துள்ளது.

இந்திய ஹாக்கிக்குப் பொன்னான தருணம் இது. இரு அணிகளும் இன்னும் இரு வெற்றிகளைப் பெற்று தங்கம் பெற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பம். கனவு பலிக்குமா?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அரையிறுதி ஆட்டங்கள்

ஆகஸ்ட் 3: இந்திய ஆடவர் ஹாக்கி அணி vs பெல்ஜியம் - காலை 7 மணி (இந்திய நேரம்)

ஆகஸ்ட் 4: இந்திய மகளிர் ஹாக்கி அணி vs ஆர்ஜெண்டினா

Tags : India Australia Tokyo Olympics
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT