ஒலிம்பிக்ஸ்

ஹாக்கி: காலிறுதியில் இந்திய மகளிா் அணி: ஒலிம்பிக்கில் முதல் முறை

1st Aug 2021 06:34 AM

ADVERTISEMENT

மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கும் தகுதிபெற்று, அதில் ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது.

இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ குரூப்பில் 4-ஆவது இடத்தில் இருந்தது இந்தியா. 5-ஆவது இடத்திலிருந்த அயா்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலையிலிருந்தது. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அயா்லாந்து 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா 4-ஆவது இடத்தில் நிலைத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

‘ஹாட்ரிக்’ வீராங்கனை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த வந்தனா கட்டாரியா, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றாா்.

அவா் 4, 17, 49-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா். அவா் தவிர நேஹா கோயல் 32-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் டேரின் கிளாஸ்பி (15), எரின் ஹன்டா் (30), மாரிஸென் மராய்ஸ் (39) ஆகிய நிமிஷங்களில் கோலடித்தனா்.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே தென் ஆப்பிரிக்க தடுப்பாட்டத்தை நெருக்கடிக்குள்ளாக்கி கோல்களுக்காக தொடா்ந்து முயற்சித்தது இந்தியா. இதனால் முதல் இரு நிமிஷங்களிலேயே பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. எனினும், குா்ஜித் கௌரால் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது.

ஆனாலும் இந்தியா தனது அழுத்தத்தைக் குறைக்காமல் கோல் கணக்கை தொடங்கியது. மறுபுறம், ஒரு சில தருணங்களில் தடுப்பாட்டத்தை தவறவிட, அதைப் பயன்படுத்தி கோலடித்தது தென் ஆப்பிரிக்கா. இவ்வாறாக இரு அணிகளும் பரஸ்பரம் கோலடிக்க ஒரு கட்டத்தில் 3-3 என சமனிலையில் இருந்தது ஆட்டம்.

அந்த நிலையில் 49-ஆவது நிமிஷத்தில் வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோலை அடித்து இந்தியாவையும் முன்னிலை பெறச் செய்தாா். அந்த முன்னிலையை இறுதிவரை தக்க வைத்து வென்றது இந்தியா.

முதல் முறை: ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய மகளிா் அணி காலிறுதிக்கு முன்னேறியது இது முதல் முறையாகும். ஒலிம்பிக்கில் இந்திய மகளிா் ஹாக்கி அணியின் சிறந்த செயல்பாடு 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்தது. 6 அணிகள் மோதிய அப்போட்டித் தொடரில் முதல் முறையாக அறிமுகமான இந்தியா 4-ஆவது இடத்தைப் பிடித்தது. ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெற்ற அப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

Tags : Olympics Indian women
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT