ஐபிஎல்-2020

மும்பையை வீழ்த்தியது பெங்களூர் 

29th Sep 2020 05:25 AM

ADVERTISEMENT



துபை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் ஓவர் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. 

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பையும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது. 

வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூர் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வென்றது. 

முன்னதாக,  டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பெங்களூர் பேட்டிங்கை தேவ்தத் படிக்கல்-ஆரோன் ஃபிஞ்ச் கூட்டணி தொடங்கியது. இந்தக் கூட்டணியின் விளாசலில் அணியின் ஸ்கோர் நிலையாக உயர்ந்தது. 

ADVERTISEMENT

முதல் விக்கெட்டாக ஆரோன் ஃபிஞ்ச் வீழ்ந்தார். அவர் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  அவரை அடுத்து கேப்டன் கோலி களம் புகுந்தார். அவர் தடுமாற்றமாகவே ஆடி வந்தாலும், மறுபுறம் தேவ்தத் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். 11 பந்துகளை எதிர்கொண்ட கோலி 3 ரன்களுடன் 12-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த டி வில்லியர்ஸ் அதிரடி காட்ட, மறுபுறம் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். பின்னர் ஷிவம் துபே களம் கண்டார். இவ்வாறாக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது பெங்களூர். 
டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 55, ஷிவம் துபே 10 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணியில் டிரென்ட் போல்ட் 2, ராகுல் சாஹர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

ஆட்டம் சமன்: பின்னர் 202 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மும்பையில் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சர்மா 2-ஆவது ஓவரில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் டக் அவுட்டாக, உரிய பார்ட்னர்ஷிப் இன்றி தவித்தார் குவிண்டன் டி காக். 

அப்போது வந்த இஷான் கிஷன் அதிரடி ஆட்டத் தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். மறுமுனையில் டி காக் 14 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் களம் கண்ட ஹார்திக் பாண்டியா 15 ரன்களே சேர்த்தார். 

அடுத்து வந்த பொல்லார்ட் பெங்களூர் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். இந்நிலையில் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். 

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது மும்பை. 

பொல்லார்ட் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 60, கிருணால் பாண்டியா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் அணியில் இசுரு உதானா 2, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், ஆடம் ஸம்பா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

சூப்பர் ஓவர்
வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் மும்பை தரப்பில் பொல்லார்ட், ஹார்திக் பாண்டியா களம் கண்டனர். இதில் பொல்லார்ட் ஒரு பவுண்டரி உள்பட 5 ரன்கள் அடித்து 4-ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா 2 ரன்கள் சேர்த்தார். ரோஹித் ரன்னின்றி களத்தில் இருந்தார். ஓவர் முடிவில் மும்பை 7 ரன்கள் எட்டியது.  அடுத்து ஆடிய பெங்களூரில் கோலி-டி வில்லியர்ஸ் களம் கண்டனர். டி வில்லியர்ஸ் பவுண்டரி உள்பட 6, கோலி பவுண்டரி உள்பட 5 ரன்கள் அடித்து 11 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்தனர். கடைசி பந்தில் கோலி பவுண்டரி விளாசி நிறைவு செய்தார்.

முன்னதாக, பெங்களூர் தரப்பில் நவ்தீப் ஷைனியும் மும்பை தரப்பில் 
ஜஸ்பிரீத் பும்ராவும் பந்துவீசினர்.

சுருக்கமான ஸ்கோர்
பெங்களூர் 201/3 
ஆரோன் ஃபிஞ்ச்    52 (35) 
டி வில்லியர்ஸ்    55* (24) 
ஷிவம் துபே    27* (10)

போல்ட்     2/34 
சாஹர்    1/31 

மும்பை 201/5 
இஷான் கிஷன்    99 (58) 
கிரன் பொல்லார்ட்     60* (24) 

உதானா    2/45 
வாஷிங்டன் சுந்தர்    1/12 
யுவேந்திர சாஹல்    1/148 
ஆடம் ஸம்பா    1/53
 

ADVERTISEMENT
ADVERTISEMENT