ஐபிஎல்-2020

டி வில்லியர்ஸ் அபாரம்: பெங்களூர் 201/3

29th Sep 2020 05:23 AM

ADVERTISEMENT


துபை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அணியின் தரப்பில் டி வில்லியர்ஸ் அதிரடியாக அரைசதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பெங்களூர் பேட்டிங்கை தேவ்தத் படிக்கல்-ஆரோன் ஃபிஞ்ச் கூட்டணி தொடங்கியது. 

ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆடத் தொடங்கினர். இதனால் பெங்களூரின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவருமே அரைசதம் கடந்தனர். 

பெங்களூர் அணியின் முதல் விக்கெட்டாக ஆரோன் ஃபிஞ்ச் வீழ்ந்தார். மும்பையின் டிரென்ட் போல்ட் வீசிய 8-ஆவது ஓவரில் அவரடித்த பந்து நேராக கிரன் பொல்லார்டின் கைகளில் தஞ்சமானது. ஃபிஞ்ச் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ADVERTISEMENT

அவரை அடுத்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். அவர் தடுமாற்றமாகவே ஆடி வந்தாலும், மறுபுறம் தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆட்டத்தின் 12-ஆவது ஓவரில் ராகுல் சாஹர் வீசிய பந்தை கோலி விளாச முயல, அது ரோஹித் சர்மா கைகளில் சிக்கி ஆட்டமிழந்தார். 11 பந்துகளை எதிர்கொண்ட கோலி 3 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 
அடுத்து வந்த டி வில்லியர்ஸ் அதிரடி காட்டத் தொடங்கினார். மும்பையின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக அவர் சிதறடித்தார். இந்நிலையில் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். 

டிரென்ட் போல்ட் வீசிய 17-ஆவது ஓவரில் அவரடித்த பந்தை கிரன் பொல்லார்ட் லாவகமாகப் பிடித்து, அவரை பெவிலியனுக்கு அனுப்பினார். பின்னர் ஷிவம் துபே களம் கண்டார். இவ்வாறாக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது பெங்களூர். 

டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்களுடனும், ஷிவம் துபே 10 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணியில் டிரென்ட் போல்ட் 2, ராகுல் சாஹர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்கோர் விவரம்
பெங்களூர் இன்னிங்ஸ் 
தேவ்தத் படிக்கல்    54 (40) 
ஆரோன் ஃபிஞ்ச்    52 (35) 
விராட் கோலி    3 (11) 
டி வில்லியர்ஸ்    55* (24) 
ஷிவம் துபே    27* (10) 
உதிரிகள்    10 
மொத்தம்    201 
(20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு)     
விக்கெட் வீழ்ச்சி 
1-81 (ஆரோன் ஃபிஞ்ச்)
2-92 (விராட் கோலி)
3-154 (தேவ்தத் படிக்கல்) 

பந்துவீச்சு
போல்ட்     4-0-34-2
பட்டின்சன்     4-0-51-0
சாஹர்     4-0-31-1
பும்ரா     4-0-42-0
பாண்டியா     3-0-23-0
பொல்லார்ட்     1-0-13-0
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT