ஐபிஎல்-2020

2 ஓவர்களில் 9 சிக்ஸர்கள்: சார்ஜாவில் அதிசயம் நிகழ்த்திய ராஜஸ்தான்

27th Sep 2020 11:28 PM

ADVERTISEMENT


224 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் 9-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் பேட்டிங்: அகர்வால் சதம்; முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள்: 223 ரன்கள் குவித்தது பஞ்சாப்

224 ரன்கள் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர். பட்லருக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இதன்பிறகு, ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டத் தொடங்கினர். இருவரும் பவுண்டரிகளாக அடிக்க வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கட்டுக்குள் இருந்தது.

26 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்மித், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, தேவாட்டியா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். இவர் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால், சரியான டைமிங் கிடைக்காமல் இவர் திணற வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டை மீறி உயர்ந்தது.

அதேசமயம், நெருக்கடி மொத்தமும் சாம்சனிடம் சென்றது. எனினும், சாம்சன் விடா முயற்சியோடு அரைசதம் அடித்து விளையாடி வந்தார். இந்த நிலையில், 21 பந்துகளை எதிர்கொண்ட தேவாட்டியா 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள் தேவை:

இந்த நிலையில், 16-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். சாம்சன் இந்த ஓவரைப் பயன்படுத்தி 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் எடுத்தார். இதனால், ஓரளவு நம்பிக்கை எழுந்தது.

ஆனால், ஷமி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்கள் குவித்தார். எனினும், அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில் உத்தப்பா 2 பவுண்டரிகள் அடிக்க சற்று ஆறுதலாக அமைந்தது. இந்த நிலையில், 23 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் தேவாட்டியா.

ராஜஸ்தான் வெற்றிக்கு 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவை.

திருப்புமுனை ஏற்படுத்திய 18-வது ஓவர்:

காட்ரெல் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை தேவாட்டியா சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதுவரை திணறி வந்த அவர், இந்த சிக்ஸருக்குப் பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். 2-வது பந்தும் சிக்ஸர், 3-வது பந்தும் சிக்ஸர், 4-வது பந்தும் சிக்ஸர். இதனால், ஆட்டம் மீண்டும் ராஜஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தேவாட்டியாவும் நெருக்கடியிலிருந்து தப்பித்தார். 5-வது பந்தை மட்டும் காட்ரெல் எப்படியோ சிறப்பாக வீச அதில் ரன் ஏதும் இல்லை. எனினும், கடைசி பந்தையும் தேவாட்டியா மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதன்மூலம், இந்த ஒரு ஓவரில் மட்டும் 30 ரன்கள் கிடைத்தன.

ஆர்ச்சர் அசத்தல்:

கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. முதல் பந்தில் உத்தப்பா ஆட்டமிழக்க, ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும், புதிதாக களமிறங்கிய ஆர்ச்சர், எவ்வித நெருக்கடியும் இல்லாமல் முதல் 2 பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதன்மூலம், 9 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற எளிதான நிலை உருவானது. எனினும், விடாது மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த தேவாட்டியா 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். வெற்றிக்கும் 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. ஆனால், அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. முருகன் அஸ்வின் வீச முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. 2-வது பந்தில் பராக் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய டாம் கரண் பதற்றமே இல்லாமல் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம், ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்ச்சர் 3 பந்துகளில் 13 ரன்களுடனும், கரண் 1 பந்தில் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் அணித் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், நீஷம், அஸ்வின், காட்ரெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச சேஸிங் ஆகும்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT